நான் ஏழாவது படிக்கையில் அது நடந்தது. என்னுடைய வீட்டிற்கு என் நண்பன் சுப்ரமணியை அழைத்திருந்தேன். என்னைப்போலவே குட்டையான ஆனால் மாநிறமான 12 வயது நண்பன். சுப்ரமணி வந்த பிறகு என்னென்ன விளையாடலாம், என்னென்ன சாப்பிடலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தோம் நானும் என் இன்னொரு நண்பன் கார்த்திக்கும்.
அப்போதும் நாங்கள் வாடகை வீட்டில் தான் குடியிருந்தோம். நான், அப்பா, அம்மா, தம்பி மற்றும் அப்பாயி. அப்போது என் அப்பாயி மாமியாருக்கான மிடுக்குடனும், தோரணையுடனும் இருந்த காலகட்டம். அந்த வயதிலும் அவர் சொல் வீட்டின் முக்கிய முடிவுகளின்போது பரிசீலிக்கப்படும் அளவுக்கு உயர்ந்திருந்தது. ஒரு பெண் தன் ஆணவத்தைக்கூட இன்னொரு பெண்ணின் அழுகையின் மீதே கட்டமைக்கிறாள். பெண்கள் பலவீனமானவர்கள் என ஒரு பெண்ணே வலுவாக நம்புவதால் அன்றி வேறென்ன காரணம் இருக்க முடியும் இதற்கு.
இவ்வாறாக இருக்க, சுப்ரமணி மதியம் போல என் வீட்டிற்கு வந்தான். அப்போது என் அப்பாயிடமிருந்து அவன் எதிர்கொண்ட ஒரு வினா என்னைப் பதற்றமடையச்செய்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் (ஏன் இப்போதும் சரி) அந்த வினா பொதுப்புத்தியில் கலந்துவிட்ட ஒரு விடயம்.
“நீங்க என்ன ஜ(ச)னம்?”
என்பதே அந்த கேள்வி. அந்த கேள்வி அவனுக்குப் பழகிப்போன ஒன்று என அவனின் இயல்புநிலை மாறாத முகத்தில் தெரிந்தது. ஆனால் எனக்கு அப்படியல்ல. என்னை நிலைகுலையவைத்தது அந்த கேள்வி. உடனடியாக இந்த பதற்றத்தைப் போக்க, அவனின் பாதுகாப்பின்மையை உடைத்தெறிய, என் அப்பாயிடம் சீறினேன். “யாரா இருந்த உனக்கென்னப்பாயி. அவன் என் ப்ரண்டு” என எதிர்வினையாற்றினேன்.
இது தான் சாதியவன்மத்திற்கு எதிரான என் முதல் குரல். 90-களின் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் இதேபோன்ற ஒரு நிகழ்வை சந்தித்திருப்பீர்கள். என் இடத்திலோ இல்லை என் நண்பன் வடிவேலு இடத்திலோ இருந்திருப்பீர்கள். ஆனால் அப்போது எனக்கு சாதியைப்பற்றிய பெரிய புரிதல்கள் இல்லை. ஆனால் என்னுடைய நட்பெனும் விழுமியம் என்னை அன்று பேசத்தூண்டியது. என் நண்பன் பக்கம் நிற்கத்தூண்டியது. குழந்தைகள் மனதில் நச்சு விதைக்கப்படாதவரை அவர்களின் சுயம்பு நஞ்சாவதில்லை.
“யாரின்
கைகளுக்குள்ளும்
அழாமல்
தஞ்சமடையும்
மழலையிடம்
சமத்துவம் படிப்போம்.”
என்ற வரிகள்தான் நினைவில் நிழலாடுகின்றன.
அதன்பின் பட்டப்படிப்பிற்கு பிறகு நானும் நண்பன் அன்புவும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதியவன்மம், சாதியபாகுபாடு, டாக்டர் அம்பேத்கர், அவரின் புத்தகங்கள் என நிறைய விவாதித்தோம்.
சாதி பற்றி நிறைய வினாக்கள், ஐயங்கள், புரிதல்கள் எனக்கு ஏற்பட்ட காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் தான் சமத்துவம், சமதர்மம், மனிதம், சமூகநீதி போன்ற விழுமியங்களின்பால் தீராத காதல் கொண்டேன்.
தொடர்ந்து சாதிபற்றி சகநண்பர்களுடன் விவாதிப்பது, நண்பர்களின் சாதிய எதிர்ப்பு பற்றிய ஐயங்களுக்கு என்னால் இயன்ற அளவு தெளிவு தருவது என என் பணி தொடர்ந்தது. என் புரிதல்களை விவாதிப்பதன் மூலம் அவற்றை ஒரு சமூகப் பங்களிப்பாக எண்ணினேன்.
ஆனால் என்னுள் ஒரு இயலாமையை உணர்ந்தேன்.நிறைய பேசி விட்டோம். செயலில் எப்போது காண்பிப்பது? என்ற வினாவை என் மனசாட்சி எழுப்ப அவ்வினா என்னைத் துரத்திய வண்ணம் இருந்தது.
அப்போது என்னை அவ்வினாவிடமிருந்து காப்பாற்றியது Egalitarians அமைப்பு. என்னைப்போல் விழுமியங்களைப்பற்றிக் கொண்டு செயலாற்றத்துடிக்கும் பல இளைஞர்களின் புகலிடமாய் Egalitarians இருக்கிறது.
சங்கம் வைத்து சாதிவளர்க்கும் இந்த காலத்தில் சாதியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு கூட்டமைப்பு Egalitarians.
பெயருக்கேற்றாற்போல் இது ஒரு தலைமையற்ற, சமத்துவ அமைப்பு. அமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சமஉரிமை, பொறுப்பு, மற்றும் சலுகைக்கு உரித்தானவரே.
இவ்வமைப்பின் மூலமாக என் சமூகப் பங்களிப்பினை ஆற்ற, என் புரிதல்களை பட்டைதீட்ட, என் இயலாமையைப் போக்கிக்கொள்ள விழைகிறேன்.