எங்கள் வீட்டின் வாசலில் ஒரு அண்ணா வந்து நின்றுகொண்டு ‘சாமி! சாமி!’ என்று கூப்பிட்டார். நான் உடனே எழுந்து வெளியே போய் ‘என்ன அண்ணா? சொல்லுங்க’ என்று கேட்டேன். அதற்கு அந்த அண்ணா ‘குடிக்க தண்ணி குடுங்க சாமி ரொம்ப தாகமா இருக்கு’ என்றார். நான் உடனே ‘உள்ள வந்து உக்காருங்க அண்ணா, நான் தண்ணி எடுத்துட்டு வறேன்’ என்று சொல்லிவிட்டு தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றேன்.
உடனே என் அம்மா என்னைக் கூப்பிட்டு ‘அவரு உள்ள வரமாட்டாரு. நீ சொம்புல தண்ணி கொண்டுபோயி அவரு கையில ஊத்து குடிச்சுட்டு போவட்டும்’ என்று சொன்னார். ‘ஏம்மா?’ என்று நான் கேட்டேன். ‘அது அப்பிடித்தான். ஒனக்கு ஒன்னுந்தெரியாது. சொன்னத செய்’ என்று என்னை சிடுக்கென்று பார்த்தார் என் அம்மா.
நான் அமைதியாக தண்ணீர் எடுத்துக்கொண்டு போனேன். அந்த அண்ணாவும் உள்ளே வந்திருக்கவில்லை. வாசலிலேயே நின்றிருந்தார். நான் தண்ணீர் கொண்டுபோனதும் அவரது இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, வாயைக் கைகளில் வைத்துக்கொண்டு ‘ஊத்துங்க’ என்று கீழே குனிந்தார். தண்ணீர் ஊற்றினேன். குடித்துவிட்டு ‘நன்றி சாமி’ என்று சொன்னார். அவரிடம் நான் ‘ஏங்கண்ணா, சொம்புல குடிக்க மாட்டிங்களா?’ என்றேன். அதற்கு அவர் ‘நாங்களாம் கீழ்சாதிக்காரங்க. அப்பிடி வாங்கிக் குடிச்சா ஒங்களுக்கு ஆவாது’ என்றார். உடனே எனக்குக் கோபம் வந்தது. என் அம்மாவிடம் ‘ஏம்மா, கீழ்சாதினா அவங்க நம்ம ஊட்டுக்குள்ள வரகூடாதா?’ என்றேன். ‘ஆமாம்’ என்றார் அம்மா. ‘அப்போ எதுக்காகம்மா கல்யாணம், சாவு, கோயில் திருவிழா எல்லாத்துக்கும் அவங்களதான் மொதல்ல கூப்புடுறோம்?’ என்று கேட்டேன். ‘அவங்க வந்து மோளம் தட்டுனா தான் தீட்டு கழியும். அது ஒரு சடங்கு’ என்று பதிலளித்தார். ‘அப்போ நம்ம தானம்மா கீழ்சாதி’ என்றேன். அம்மா என்னை முறைத்துப்பார்க்க நான் ஓடிவிட்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை மேல்சாதி, கீழ்சாதி பிரிவினைகளில் நம்பிக்கையில்லை. எப்போதும் சிந்திப்பதுண்டு – சாதி, மதம் எதுவும் இல்லாமல் இருந்தால் யார் மனமும் புண்படாமல் இருக்குமென்று. இதற்கு நான் யாரிடம் போய் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த சமயத்தில்தான் Egalitarians குறித்து அறிந்ததும், என் மனதில் தோன்றுவதையெல்லாம் சொல்லவும், சமூகத்தில் மாற்றம் வர என் பங்கும் இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதில் உறுப்பினரும் ஆனேன்.
சாதிகள் எத்தனை இருந்தென்ன? கடைசியில் ‘அந்த பொணத்த தூக்குங்கப்பா’ என்றுதான் சொல்கிறார்கள். பிணம் என்று பெயரிடப்போகிற ஒரு சடலத்திற்கு சாதி எதற்கு.