நண்பர் ஒருவர் மிகவும் “முற்போக்காக” பேசக்கூடியவர். சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சமூக மாற்றம் என தொண்டை கிழிய அடித்துவிடுவார். “இந்த சொசைட்டி ஏன் ப்ரோ இப்டி இருக்கு?” என ஓயாமல் சலித்துக்கொள்வார்.அவரும் நானும் ஒரு நாள் டீ குடிக்கச்சென்றிருந்தோம். டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியில் ஒரு பெண் மாடர்ன் உடையில் வேகமாக வண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.
அதை கவனித்த அவர், “என்ன ப்ரோ ஒரு பொண்ணு இவ்ளோ வேகமா இடிக்கிற மாதிரி வண்டி ஓட்டிட்டுப்போவது. பொம்பள மாதிரியா நடந்துக்குது?” என்றார்.
உடனே என் வாய் சும்மா இருக்காமால், “பொம்பள மாதிரின்னா எப்டி இருக்குனும்னு சொல்றிங்கப்ரோ?” என்றேன்.
“பொண்ணு மாதிரின்னா பொண்ணு மாதிரிதான். ஆம்பள மாதிரி நடந்துகிட்டா அது என்ன பெமினிசம்?”. உடனே நான் “இப்டி மொதல்ல இலக்கணம் வகுக்கறத நிறுத்துங்க ப்ரோ. இந்த மாதிரி ஸ்டிரியோடைப் (Stereotype) பண்ணாதிங்க. எல்லாத்துக்கும் ஒரு ப்ரீடிடர்மைண்ட் தாட் (Pre-determined thought) வைச்சுகிட்டு அதுக்குள்ள அவங்கள அடக்க பாக்குறிங்க, அதுல அடங்காம இருக்குறவங்கள எப்புடி திரியுது பாருனு சொல்விங்க. இந்த மாரி நினைப்பும் கூட ஒரு அடிப்படைவாதம் தான்றத எப்பதான் ரியலைஸ் பண்ணுவிங்க?” என்று முடித்தேன் அப்போதிலிருந்து எங்கள் நட்பு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுவிட்டது.
சமூகத்தில் இது போன்ற மயங்குநிலை பொதுப்புத்தி (Unconscious Stereotype) ஓயாமல் உலவிவருகிறது. இவற்றை உணராத வகையில் “முற்போக்கு” பேசும் நாம் கூட ஏதோ ஓரிடத்தில் தோற்றுப்போகின்றோம்.
ஒரு குழந்தை தனக்கான விழுமியங்களை இந்த சமூகத்தில் இருந்தே எடுத்துக்கொள்கிறது. அவற்றில் இந்த பொதுப்புத்தி புரிதல்களும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கின்றன.
வளர்ந்த குழந்தைகளான நாம் அதனை கண்டறிந்து அகற்றிக்கொள்ளாதவரை அந்த அழுக்குடன் சேர்ந்து நம் மனமும் நாற்றமடிக்கிறது. அதற்கான சான்றே இந்த உரையாடல்.
இதனை கண்டறிய வெறும் “மேம்போக்கான” முற்போக்கு உதவாது. நம்மில் பலர் இன்னும் இந்த மேம்போக்கு வகையறாக்கள்தான். முகப்புத்தகத்தில் முற்போக்குபேசி ஆர்கஸம் அடையும் வகையறாக்கள். சாதிய பாகுபாடு கொண்டு உடல்ரீதியாகத் தாக்கும் வெறிக்கும், பொதுப்புத்திப் பார்வையில் “இவங்க இப்படி தான்”, “அவங்க ப்லட்லையே இருக்கு”, “இவன் இப்டி பண்ற க்ரூப்தான்” என மனரீதியாக பாகுபடுத்துவதற்கும் பெரியவித்தியாசம் இல்லை.
இங்கு அவர்கள் தெரிந்தே ஒருவரை பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. தன்னையும் அறியாமல் தன்னுடன் சேர்ந்தே வளர்ந்த சமூகத்தின் தவறான விழுமியத்தின் வழி அதனைச் செய்கின்றனர். இவற்றை அழித்தொழிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு கற்றல்தான் ஒரே வழி. சமூகத்தில் இருந்து, புத்தகத்தில் இருந்து, எங்கிருந்து வேண்டுமானாலும் தொடர்ந்து கற்றல் இன்றியமையாததாகிறது. உங்களை கற்றல், நம்மை கற்றல் தேவையாகிறது. அத்தகைய கல்வியே சமூக மாற்றத்தை நிகழ்த்திக்காட்டும். மேம்போக்கான முற்போக்கின் மாயையை உடைத்து உலகவெளியின் உன்னத மனிதத்தை சுவாசிக்க அதுவே பாதை வகுக்கும்.