ஏறத்தாழ ஆறு மாதங்கள் இருக்கும். கருப்பினத்தவருக்கு ஆதரவாக அரங்கேறிய போராட்டம் அது. சமூக வலைதளங்களில் “When will India have its ‘Dalit Lives Matter’ movement?” எனப் பல்வேறு தரப்பினர் வெளிப்படுத்தியதும் இக்காலகட்டத்தில் தான். இவ்வாறு நிறைய மக்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதைப் பார்க்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனென்றால் எனக்கும் ஆழ்மனதில் அப்படித்தான் தோன்றியது. சில மாதங்களுக்கு முன்பு நண்பன் ஒருவரிடம் ‘Green Book’ என்ற ஒரு ஆங்கில மொழித் திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்தேன். நிற வேறுபாட்டைப் பற்றி தெளிவாக விளக்கும் படம் அது.
அப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் கூறியதாவது; நல்ல வேளை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் கருப்பு நிறத்தில் இருப்பதால் யார் தலித், யார் தலித் இல்லை என்பதை நிறத்தால் வேறுபடுத்தி விட முடியாது. அமெரிக்காவில் உள்ளதைப் போன்று நிறத்தால் வேறுபடுத்தும் படி இருந்திருந்தால் நாம் இன்னும் மோசமான நிலைக்கு சென்றிருக்கக் கூடும். ஒரு விதத்தில் உண்மை தான். அமெரிக்காவில் நிற வேறுபாட்டை நீக்குவதில் மார்டின் லூதர் கிங் அடித்தளம் வித்திட்ட கொள்கைகள் ஒபாமாவின் அதிபர் பதவியாலும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவியாலும் ஓரளவிற்கு நிறைவேறி இருக்கிறது என்று கூறலாம்.
அவ்வப்போது நான் மனதில் நினைத்தது உண்டு. இதேபோன்று நம் நாட்டிற்கும் மார்டின் லூதர் கிங் போல, சாதியின்மைக்காகவும், சமத்துவ சமுதாயத்திற்காகவும் பல்வேறு தலைவர்கள் இருந்திருக்கின்றனர், இருந்து கொண்டும் இருக்கின்றனர் . ஆனால் அவர்களது கொள்கைகளை நடைமுறையில் முழுமையாக நிறைவேற்றுவதில் தான் நாம் தவறி விடுகிறோம். சமத்துவம் என்று எதிர்பார்க்கும் போது ஒவ்வொரு மானுடரும் பொறுப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு இன்றைய மக்களிடத்தில் உள்ள சமத்துவம் மற்றும் சாதி குறித்த புரிதல்களை சற்றே அதிகம் தெரிந்து கொள்வதற்காக இந்த கொரோனா கொடுத்த விடுமுறையில் மக்களுடன் பயணித்தேன் (இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் மட்டும்). இவ்வாறு பயணித்த போது எனக்கு விளங்கியது ஒன்று தான். பெரும்பான்மையான கிராமங்களில் வெவ்வேறு இரு சாதிகளுக்கிடையேயான பிரச்சனைகள் இருந்தன. மேலும், இது இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை மக்களிடத்தில் சமத்துவம் என்பதற்கு இடமே இல்லை என்பதை நண்பர்களிடம் உரையாடும் போது விளங்கியது. சரி, இங்கு நடக்கும் உயிர்பலிகளுக்கும், சாதி வன்கொடுமைகளுக்கும் தீர்வு தான் என்ன என்று யோசித்த போது எனக்கு டாக்டர் அப்துல் கலாம் நினைவிற்கு வந்தார். அவருடைய கொள்கை ஒன்று தான் – மரத்தைப் பிடுங்கி நடுவதற்குப் பதில் கன்றுகளைப் பிடுங்கி நடு, அங்கு தான் உண்மையான பலன் கிடைக்கும் என்பது. அதனால் தான் அவர் குழந்தைகளையும், மாணவர்களையும் தேர்ந்தெடுத்தாரே தவிர வயதானவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் நல்ல எண்ணங்களை விதைத்தால் அது அனைத்துத் தலைமுறைகளுக்கும் பயனளிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கு அப்துல்கலாம் அவரது சொந்த மாவட்டத்திலேயே தோற்று விடுகிறார் என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது. அதற்குக் காரணமும் ஒன்றுதான். இங்கு மாணவர்களிடத்திலும், குழந்தைகளிடத்திலும் நல்ல எண்ணங்களை விதைக்க ஆட்கள் பற்றாக்குறை என்பதே. மாற்றத்தை உருவாக்க ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கல்விக்கும் பெரிய பங்குள்ளது. இங்குதான் Egalitarians பங்காற்றலும் வந்தமைகிறது. தரமான கல்வியைக் கொடுக்க முயலும் போதும், சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முயல்வதாலும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்ற அமைப்பில் ஒரு தன்னார்வலனாக இருப்பது மேலும் நம்பிக்கை அளிக்கிறது.
மேலும் இன்றைய காந்திகள் புத்தகத்தில் வருவோரைப் போன்று சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் காந்தியாய் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே தவிர இனி ஒரு காந்தி வர மாட்டாரா எனக் கனவு காண்பதில் பயனில்லை.