
தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் எழுத்தாளர், ஆசிரியர் இமையம் அவர்களின் ‘பெத்தவன்’ நெடுங்கதை வாசிக்க நேரிட்டது.சாதியையே வாழ்வதற்கான உயர்ந்த லட்சியமாகக் கருதி வாழும் மக்கள் தன் ஊரின் சாதியப் பெருமையைப் போற்றி பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நேரிடும் என்பதை தோலுரித்து காட்டுகிறது இந்நூல்.
சாதியக் கட்டமைப்புக்குள் அகப்பட்டு கிடக்கும் சமூகம், ஊரின் மானம் காக்கும் பொருட்டு ஒரு தனிமனிதனையும் அச்சாதிய வலைக்குள் பூட்டும் கணம், மனிதன் என்று நாம் கருதும் நாகரிக உயிரினத்தின் வீழ்ச்சியின் தொடக்கமாகவே காண நேரிடுகிறது.
‘நீயெல்லாம் இந்த சாதியில பொறந்ததாலதான் இந்த சாதிய ஒரு பயலும் மதிக்க மாட்டங்கிறான்’, ‘ஒரு பொட்டச்சி ஊரையே தலகுனிய வெச்சிட்டா’, ‘இது வீம்புக்கு சூரிக்கத்திய முழுங்குற சாதி’, ‘கட்றதுக்கு கோமணம் இல்லனாலும் சாதிய வுட மாட்டானுவ’, ‘நா வுட்டா இந்த ஊரு வுட்டுடுமா?’ போன்ற வரிகள் சாதியின் குரூரத்தையும், ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் தவறு செய்ததால் தான் தன் சாதிப் பெருமைக்கு கலங்கம் ஏற்பட்டது போன்ற மாயையை தொடர்ந்து உருவாக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எவ்வளவுதான் மூர்க்கத்தனமான சாதி வெறி வெளிப்பட்டாலும், எங்கேனும் ஒரு வறண்ட காட்டில் கிடைக்கும் ஒரு சிறு தேன் துளியாய் மனிதம் என்ற ஒன்று இழையோடிக் கொண்டிருப்பதை பழனி என்ற பாத்திரத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாக்குகிறது இக்கதை.
நூல்: பெத்தவன்
ஆசிரியர்: இமையம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்