உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நிலவுடைமைச் சமூகத்தின் பல கட்டங்களைத் தாண்டியே, தன்னை ஒரு ஜனநாயக சமூகமாக மீட்டுருவாக்கம் செய்துகொண்டது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்திய ஜனநாயகம் ஒரு முதிரா ஜனநாயகம் அல்லது முதிர்ந்த ஜனநாயகமாக தன்னை வார்த்தெடுக்க அடிப்படைவாதத்துடன் போராடிக்கொண்டிருக்கும் ஜனநாயகம்.
இத்தகைய முதிராத் தன்மையினை நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் சில, நிலவுடைமைச் சமூகம் சார்ந்த, பிற்போக்குத்தனங்களை வைத்தே சொல்லிவிடலாம். சாதிய வேறுபாடு, மதத்தின் பெயரால் வன்முறை போன்ற இழிகுணங்கள் இவற்றுள் அடங்கும். இவற்றைப் போலவே அல்லது இதைவிட வன்மமான ஒரு நிலவுடைமைச் சமூக விழுமியமென்றால் அது தனி மனித சுதந்திரத்தை மறுக்கும் தன்மைதான்.
ஆம். நிலவுடைமைச் சமூகம் தனி மனித சுதந்திர மறுப்பின் மீதே தனது சமூக அமைப்பைக் கட்டமைக்கிறது. பெண்களுக்கெதிரான சமூகக் கட்டுப்பாடுகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஆனால் பாலினம் சார்ந்த சுரண்டல்களினாலும், வன்முறைகளினாலும், சமூக ஒதுக்குதல்களினாலும் பாதிக்கப்பட்ட, இன்றும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் திருநர் சமூகம்.
உடலால் ஒரு பாலினமாகவும், உணர்வால் இன்னொரு பாலினமாகவும் வாழும், சமூகத்தின் மனிதநேயத்தை சிறிதும் அனுபவிக்காத திருநம்பிகளும், திருநங்கைகளும் இச்சமூகத்தில் தன் ஒரு நாளை நகர்த்துவதென்பது அவ்வளவு எளிதல்ல.
ஒரு குழந்தை வளர அன்பான, அழகான, ஆரோக்கியமான சூழல் எவ்வளவு இன்றியமையாதது என்பதை இக்கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் அத்தகைய சூழல் ஒரு திருநர் சமூகத்தைச் சார்ந்த குழந்தைக்கு இருக்கிறதா? அவர்கள் தங்கள் பாலினத்தை இனம் கண்டு கொள்ளும் வயதில், தன் சொந்த வீட்டாரே! வசைகளாலும், உடல் ரீதியான துன்புறுத்தல்களாலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காயப்படுத்துகிறார்கள். இது அந்த குழந்தையின் உளவியலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைப் பற்றி நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்.
இத்தகைய குடும்ப சூழலிலிருந்து விரட்டியடிக்கப்படும் அல்லது தப்பிப்பிழைக்கும் திருநர்கள் இதைவிட கொடுமையான சமூக சூழலின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள். வாழ்க்கையே கேள்விக்குறியாய் மாறிப்போன திருநர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுக்கிறார்கள், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள், தனி மனிதனுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டவர்களாகிறார்கள்.
ஒரு சாமானியனுக்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், சமூக அங்கீகாரம், தனி மனித சுதந்திரம், சுயமரியாதை என அனைத்தும் பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில்தான் இவர்கள் மீதான இரக்க குணத்தை அரசிடமிருந்து பார்க்க முடிகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (NALSA vs UoI, 2013) திருநர்களை “மூன்றாம் பாலினமாக” அறிவித்ததை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கலாம். அதன்பிறகு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ஐ இல்லாமலாக்கியது உச்ச நீதிமன்றம். இது திருநர்களை காவல்துறையின் அத்துமீறல்களிலிருந்து காப்பதையும், எச்.ஐ.வி போன்ற நோய்களுக்கான சிகிச்சை அவர்களுக்குக் கிடைப்பதையும், ஓரளவேனும் உறுதிசெய்கிறது.
எனினும் “மூன்றாம் பாலினம்” என்ற சொல்லாடலே அபத்தமாக உள்ளதென உணர்கிறேன். முதல், இரண்டு, மூன்று என வரிசைபடுத்துவதே சமத்துவமின்மையை உருவாக்கிவிடுகிறது. இத்தகைய சொல்லாடல் திருநராகப் பிறப்பது இயற்கையின் கோட்பாட்டிற்கே எதிரானது எனும் பிம்பத்தைக் கட்டமைக்கிறது. “பாலினம் என்பது இருமை. ஆண், பெண் மட்டும் உள்ளடங்கிய இருமை” இத்தகைய எண்ணமே நம் பிரக்ஞையில் குடிகொண்டிருக்கிறது. இவற்றிற்குள் அடங்காத ஒன்றை நாம் அருவருப்புடன் அணுகுகிறோம்.
2013ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோதிலும், இந்திய அரசு திருநர்களின் இருப்பை சட்டப்பூர்வமாக 2019ம் ஆண்டுதான் உறுதிசெய்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் தாமதமாக வந்திருக்கும் சட்டம். அதுவும் அவர்களின் பிரச்சினையை முழுவதுமாக அணுகாத ஒரு பெயரளவிலான சட்டம்.
உலக அளவில் பாலின அடையாளம் மற்றும் பாலின ஈர்ப்பு சார்ந்த யோக்யகர்த்தா கொள்கைகள் (Yogyakarta Principles) ” மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் உரிமையாக, சுய பாலின பிரகடனத்தை (self-perceived identity)” கூறுகின்றன. ஒரு மனிதன் தான் உளப்பூர்வமாக உணரும் பாலினத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான உரிமை இது. இந்த உரிமை 2019ல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மிகவும் லாவகமாக மறுக்கப்படுகிறது. இச்சட்டத்தில் உள்ள பிரிவு எண்: 6 “ஒரு திருநர் தன்னைத் திருநராக பதிவு செய்துகொள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பேரில் அவருக்கான அடையாள அட்டை (திருநங்கை அல்லது திருநம்பி எனக் குறிப்பிடப்பட்ட) வழங்கப்படும்” என்கிறது. அவர் தன்னை எந்த பாலினமாக உணர்ந்தாலும் அவருக்கு திருநர் அட்டைதான். ஒருவர் தன்னை ஆணாக அல்லது பெண்ணாக எதுவாக உணர்ந்தாலும் திருநர் அடையாளமே எஞ்சும்.
அவரை பாலின மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னரே அவர் விரும்பும் அல்லது அவர் உணரும் பாலினமாக அவரை அரசு அங்கீகரிக்கும். ஆனால் “சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் பாலின அடையாளம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்ற யோக்யகர்த்தா கொள்கைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது.
பால் (sex) உடல்ரீதியானது. பாலினம் (Gender) உள்ளம் சார்ந்தது. “ஆண், பெண் என்ற இருமைக்கு அப்பாற்பட்டு பாலினம் என்பது ஒரு அலைக்கற்றைப்போல” என அனைவரும் உணரவேண்டும். இங்கு ஒருவர் தன்னை பெண்ணாக உணரலாம், ஆணாக உணரலாம், அல்லது பால் இருமை நியலகளுக்கு அப்பாற்பட்டவராகக் (non-binary) கூட உணரலாம். இப்படி எதுவாக ஒருவர் உணர்கிறரோ அதுவாகவே சட்டத்தின்படி அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும்.