அது ஒரு அழகான சோலை. மரங்களும், செடிகளும், கொடிகளும் ஒன்றோடொன்று கூடி, சிரித்து, விளையாடிக்கொண்டிருந்தது. மண்ணின் ஈரப்பதம் முந்தைய நாள் பெய்திருந்த மழையைக் காட்டிக்கொடுத்தது. மரங்களின் இலைகளில் தங்கியிருந்த மழைத்துளிகள் எப்போது வேண்டுமானாலும் மண்ணில் விழுந்து விடக்கூடும். காண்போர் கண்களைக் கட்டிப்போடும் அளவிற்கு, வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.வெப்பச் சலனக் காற்றுகூட அச்சோலையைக் கடந்து செல்கையில் குளிர்ந்த தென்றலாக மாறிடக்கூடும்.
இத்தகைய அழகான சோலையை அங்குள்ள மனிதர்கள்தான் பராமரிக்கிறார்கள். ஆனால் அந்த சோலை அவர்களின் மனதில் எந்தவொரு கிளர்ச்சியையும் தூண்டுவதில்லை. காரணம், அச்சோலை ஒரு சிறைச்சாலையின் வானுயர்ந்த சுவர்களுக்குள் அகப்பட்டிருந்தது. அதனை பராமரிப்பவர்கள் வெள்ளையாடை உடுத்திய சிறைக்கைதிகள்.
ஆனால் வெளியிலிருந்து பறந்துவரும் பறவைகளுக்கு அச்சோலை என்றுமே ஒரு ரம்மியமான இடம். ஏனெனில் பறவைகளுக்கு நீலவானமே எல்லை. சிறைச்சாலைச் சுவர்களும், நாடுகளின் எல்லைக்கோடுகளும் அவைகளுக்கு ஒரு பொருட்டல்ல. மனிதர்கள்தான் சிறைச்சாலைகளில் அகப்பட்டு உழல்கிறார்கள். சிலர் சிறைச்சாலைகளில், சிலர் அகச்சிறைகளில்.
சிறைகளுக்குள் வாழும் மனிதர்களுக்கு என்றையும் போல அன்றைய நாள் காலையும் விடிந்தது. சிறைக்கு வெளியிலிருப்பவர்களுக்கு வேண்டுமானால் திங்கட்கிழமை காலையும், ஞாயிற்றுக்கிழமை காலையும் வேறு வேறு மனநிலையைத் தரக்கூடும். ஆனால் சிறைக்குள் இருப்பவர்களுக்கு அத்தகைய வேறுபட்ட மனநிலை அரிதுதான். ஆனால் ஜெயிலர்கள் மத்தியில் ஒரு சிறு பரபரப்பு. பணியிடமாறுதல் பெற்று அந்த சிறைச்சாலைக்கு வரவிருக்கும் புதிய ஜெயில் சூப்பிரண்டு ரமேஷ்-தான் அவர்களின் பரபரப்புக்குக் காரணமாக இருக்கவேண்டும். ஜெயிலர்கள் சிறு சிறு மாலைகளுடன் அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
சூப்பிரண்டு ரமேஷ் இத்தகைய பணியிடமாறுதல்களுக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால் அவன் மனைவியும், 3ம் வகுப்பு படிக்கும் அவன் குழந்தையும்தான் இவற்றிற்கு பழக முடியாமல் சலிப்புற்றிருந்தனர். வழக்கம்போல ரமேஷ் மட்டும் அரசு ஒதுங்கியிருந்த குடியிருப்புக்கு வந்திருந்தான். ஒரு மாதம் கழித்து மனைவியும், குழந்தையும் வருவதாய் திட்டம்.
முதல்நாள் பணிக்கு காரில் வந்துகொண்டிருந்தான். சாலைகளில் போக்குவரத்து நெரிசல். அதற்கு மாறாக காருக்குள் இளையராஜாவின் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ….” பாடல் ஒருவித மெல்லிய உணர்வைத் தருவதாய் இருந்தது. சட்டென்று அவன் மனைவியை நினைத்துக்கொண்டான். எவ்வித காமமும் இன்றி உன்னதமான காதலை இசை தூண்டிவிடுகிறது என நினைத்துக்கொண்டான்.
“உயிரே……வா” என வரிகள் முடியும் இடத்தில், இசை மென்மையாக மேலெழுந்தது. இசையெனும் மேகம் உதிர்க்கும் காதல்மழையில் நனைந்தவாறே சிறைச்சாலைக்கு வந்தடைந்தான்.
ஜெயிலர்கள் அவனை மாலை அணிவித்து வரவேற்றனர். அவர்களின் மரியாதையை ஏற்றபின், சிறைச்சாலையைச் சுற்றிப்பார்க்கச் சென்றான். அந்த சோலை அவனுள் மட்டும் ஒரு மனக்கிளர்வை ஏற்படுத்தியது. சிறைச்சாலையில் அகப்பட்ட சோலை அவனுக்கு அபத்தமானதாகத் தோன்றவில்லை. பறவைகளைப் போலவே அவனுக்கும் அது ரம்மியமான இடமாகவே தோன்றியது. வானுயர்ந்த கட்டிடங்கள் மட்டுமல்ல, எந்தவொரு தடையும் அவன் அக பயணத்திற்கு ஒரு பொருட்டல்ல.
அடுத்து அவன் அறைக்குச்சென்று கோப்புகளைப் பார்வையிட்டான். அதில் ஒரு சிவப்பு நிற கோப்பு அவனது கவனத்தை அபகரித்துக்கொண்டது. அதில் மூழ்கத் தொடங்கினான். 18-வயது நிரம்பிய சிறைக்கைதிகள் சிலரின் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பு அது. அதில் வேலன் என்பவனின் மதிப்பெண் சான்றிதழைப் பார்த்தான். மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு, சீட்டின் நுனிக்கு வந்தமர்ந்தான். வேலன் 1095 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். சிறைச்சாலையில் இருக்கும் ஒருவன் இவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பது என்பது அசாத்தியமானது என ரமேஷ்-ன் அனுபவம் கூறியிருக்கவேண்டும். அதுதான் அவன் வியப்பிற்கு காரணமாயிருக்கக்கூடும்.
உடனே ஜெயிலர் காளியப்பனை அழைத்தான். ‘சொல்லுங்கய்யா‘ என்றவாறே உள்ளே வந்தான் காளியப்பன்.
‘வேலனோட மார்க் சீட் பாத்தேன். நல்ல மார்க் எடுத்திருக்கான் அந்த பையன். வெளில நல்ல சூழல்ல இருக்க பசங்களே இவ்ளோ மார்க் வாங்குறது கஷ்டம். என்ன கேஸ் காளியப்பன் அந்த பையன்மேல?‘
‘மர்டாரு சார், சாதி வெறியில, கூட படிக்கிற பையன்கூட நடந்த சண்டையில தள்ளிவிட்டு அந்த பையன் செத்துப்போய்ட்டாங்கையா. ஆளு நல்ல வெவரமுங்க. நல்லா படிப்பான். ஆனா பாருங்க சாதிவெறி. சாதிபேர பச்ச குத்திக்கிட்டு, ஆண்ட பரம்பரைன்னு சொல்லிட்டு திரிவான். என்று விவரித்தான் காளியப்பன்.
‘என்ன காளியப்பன் சொல்லுறீங்க? படிப்புதான் எல்லாத்தையும் மாத்துமுனு நம்பிட்டு இருக்கோம் . நீங்க என்ன குண்ட தூக்கி போடுறிங்க?’ என்றான் ரமேஷ்
‘படிப்பா? எந்த படிப்புங்க? இப்ப இருக்குற படிப்பெல்லாம் பாடப்புக்க மேஞ்சுட்டு மார்க்க கழியுற வேல. சமூவத்த எவன் படிக்கான்? படிப்ப நல்லா காசு பாக்குற வாய்ப்பாவல்ல பாக்கான். நிசந்தானுங்க. இந்த வேலன எடுத்துக்கிடுங்க. மார்க் சீட்டுக்கும், ஆளுக்கும் சம்பந்தமில்லாம இருப்பான். இவன் ஒரு சாம்பில்தான். வெளிய நெறய இப்புடிதான் திரியுது’ என்று பட பட வென பேசி முடித்தான் காளியப்பன்.
சாதாரண ஜெயிலர் இவ்வளவு கூரிய அவதானிப்புகளை முன்வைப்பது கண்டு ஆச்சர்யமடைந்தான் ரமேஷ். காளியப்பன் கூறிய வார்த்தைகளில் உள்ள ஒரு கேள்வி மட்டும் அவன் பிரக்ஞை முழுக்க நிறைந்திருந்தது. கல்வி ஒருவருக்கு என்னவாக இருக்க வேண்டும் ? மனுசன நேசிக்க கத்துத்தராத கல்வி , பொருளீட்டும் பொருட்டே மூர்க்கமாகக் கற்றுத் தரப்படும் கல்வி இருந்தும் என்ன பயன் ? கல்வியின் வழி சாதியை அழித்தொழித்துவிடலாம் என்ற அவனது நம்பிக்கையில் , அத்தகைய கல்வியின் வடிவம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற, கேள்வி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. இந்த கேள்விகளின் நிறைகளால் அவன் உள்ளம் கனத்து விம்மியது. அருகிலிருந்த டம்பளரில் இருந்து தண்ணீர் பருகி ஆசுவாசப்படுத்தி கொண்டான். குளிர்ந்த நீர் அவனுள் இறங்கியது. அவன் உணவுக்குழாயின் வழித்தடத்தில் அக்குளிர்ந்த நீர் உருண்டோடுவதை அவன் உணர்ந்தான். கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தான். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
அப்போது அவன் பிரக்ஞையில் இயல்பாக ஒரு நிகழ்வு உருண்டோடியது. இருநாட்களுக்கு முன்பு அவன் மனைவி, அவன் குழந்தையை எழுப்புகையில் “எந்திரி சாமி எங்கண்ணுல்ல. எந்திரிச்சு ஸ்கூல் போனாதான் நல்லா படிச்சு, சம்பாரிச்சு , காரு பைக்குனு வாங்கமுடியும்” என்று அவள் உதிர்த்த வார்த்தைகள் அவனை வந்து அறைந்தன. நமது சமூகத்தின் பொது புத்தியில் கலந்துவிட்ட கல்வியைப் பற்றிய சித்திரம், தன் சந்ததி வரை சென்றுவிட்டதை உணர்ந்து திடுக்கிட்டான். ஒரு மின்னல்வெட்டு போல ஒரு யோசனை. காளியப்பனை அழைத்து வேலனின் அறை பற்றி விசாரித்தான்.
வேலனின் அறைக்குச் சென்றான். 18-19 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான். மூக்கின் கீழ் அப்போதுதான் துளிர்ந்திருந்த மீசை அவனது வெள்ளை சருமத்தில் தெளிவாகத் தெரிந்தது. கட்டுக்கம்பி போல சுருள் சுருளாக தலைமுடி.அவனை பார்த்தவாறே நின்றிருந்தான் ரமேஷ். வேலனின் கதையைக் கேட்டு அவன்மேல் ரமேஷுக்கு கோபம் வரவில்லை. வேலன் சற்று கண்விழித்து ரமேஷ் வெளியே நின்றிருப்பதைக் கம்பிகளினூடகப் பார்த்தான். இருவரின் பார்வைகளும் மோதிக்கொண்டன. சட்டென்று ரமேஷ் தன் பார்வையை மாற்றிக்கொண்டு இயல்பானவனாய் அந்த அறையை கடந்து சென்றுவிட்டான்.
அன்று மாலை அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த ரமேஷ், பால்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக்கொண்டிருந்தான். நீலவானப் பின்புலத்தில் ‘V’ வடிவில் பறவைக் கூட்டங்கள் பறந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த கேள்விகள் அவனை நிலைகொள்ள முடியாமல் செய்தன. உடனே தொலைபேசியில் தனக்கு நெருக்கமான எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தான். மறுமுனையில் இருமலுடன் கூடிய வணக்கத்துடன் பேசத் தொடங்கிய கிமூ-விடம் தன் பணியிடமாறுதல் பற்றி கூறி உரையாடலைத் தொடங்கினான்.பின் காலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தன் ஐயங்களையும் முன்வைத்தான்.
அவர் பொறுமையாகக் கேட்டுவிட்டு மீண்டும் ஒரு இருமலுடன் குரலை சரிசெய்து கொண்டு ” ஒனக்கு வந்துருக்க கேள்வி நாயமானது. ஆனா அதுக்கு இன்னதுதா பதிலுன்னு சொல்லி முட்டுக்கட்ட பொட விரும்பல. சில கேள்விகளுக்கு தர்க்கத்த தாண்டி ஒன்னு இருக்கு. அத உணரனும். தேடித் தேடி அலஞ்சு கண்டடையனும்.சில வரலாற்று புரிதல்கள மட்டும் நான் கோடுபோட்டு காட்டுறேன்.மானுடத்த நேசிச்ச ரண்டு தலைவர்களோட இரு வேறுபட்ட பார்வ இந்த தேடல்ல ஒங்கூட ஒனக்கு ஒதவியா இருக்கும்.அம்பேத்கர், காந்தி……(சிறு இருமல்). இவங்க ரெண்டு பேரும் தங்களுக்குள்ள முரண்பட்டாங்க. முரண்களின் வழியாத்தான் அவங்கஅவங்களோட இடவெளிய இட்டு நிரப்பிக்கிட்டாங்க.” என்று கூறி நிறுத்தினார்.
எதிர் முனையில் ரமேஷ் “சார் கேக்குதுங்ளா….ஹலோ“
“ஒரு நிமிசம்” என்று தண்ணீர் குடித்துவிட்டு, தொண்டையை செறுமிக்கொண்டு பேசத் தொடங்கினார். “அம்பேத்கர் நலிவடஞ்ச மக்களோட கொரலா ஒலிச்சாரு. அவங்களோட சமூக முன்னேற்றம், அரசியல் பிரதிநிதித்துவம், பொருளாதார முன்னேற்றம், நிலவுரிம இதப்பத்திலாம் கவலப்பட்டாரு.அதுக்காக போராடுனாரு. காந்தி சாதி இந்துக்களோட தொடர்ந்து ஒரையாண்டாரு. அவங்க மனசாட்சியோட பேசுனாறு. அவங்க மனசுல ஆழத்துல இருக்க கொஞ்சூண்டு மனுசத்தன்மைய தொடுறமாறி பேசுனாறு. அதுக்காகவே அவரு பலிக்கப்பட்டார். இந்த இரு துருவங்கள் மாதிரி. ரண்டுமே அவசியம். இது ஒன்னோட கேள்விக்கான பதிலில்ல. பதிலுக்கான ஒன்னோட பயணத்துல ஒங்கூட இருக்கும். ஒனக்கு ஒளி குடுக்கும்” எனக்கூறி போனை வைத்தார் கி.மூ.
இந்த உரையாடல் அவனுடைய நிலையில்லாத் தன்மையைப் போக்கியது. அவன் உழன்று கொண்டிருக்கும் இடம் எதுவென அவனுக்குக் காட்டியது. அவனுடைய தேடலில் நிச்சயம் இந்த இரு அவதானிப்புகளும் உதவுமென அவன் நம்பினான். கல்வி என்பது ஒருவனுக்கு என்னவானதாக இருக்கவேண்டும்? சக மனிதனை நேசிக்கக் கற்றுத்தரக் கூடியதாக இருக்க வேண்டும். எல்லோரும் சாதி ஒழிப்பில் தாழ்த்தப்பட்டவர்களை, (இந்த சொல்லாடலையே அவன் வெறுத்தான்), தலித்துக்களுக்கு கல்வி புகட்டி அவர்களை மேலே கொண்டுவர வேண்டும் என்பார்கள். ஆனால் அது ஒரு பகுதிதான். மனிதனை நேசிக்கக் கற்றுத்தரவில்லையெனில், முன்னேறி வரும் சமூகம் தனக்கிழைக்கப்பட்ட அதே அநீதியை அடுத்தவனுக்கு இழைக்கும். வரலாறு கூறுவது இதைத்தான். சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சுயசாதி பெருமை பேசிக்கொண்டு, மனதளவில் பின்தங்கி இருக்கும் சாதி இந்துக்களுக்கும் சமூகக்கல்வி அவசியம். இது இரண்டுமே ஒன்றையொன்று ஈடுசெய்து சமநிலையை உருவாக்கும். எல்லோருக்குமான, எல்லோரையும் நேசிக்கக் கற்றுத்தரும் கல்வி என்னவாக இருக்க முடியும்? இவ்வாறு தனது ஐயங்களைத் தொகுத்துக்கொண்டு தன் தேடலின் முதல் புள்ளியை வந்தடைந்தான்.
சில மாதங்கள் கழித்து, ரமெஷ் தன் சிறைச்சாலை அலுவலகத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழக்கம்போல் வானொலியில் இருந்து பாடல்கள் கிளம்பி காற்றில் வழிந்துகொண்டிருந்தன. பரியேறும் பெருமாள் படத்தின் நான் யார்? பாடல் ஒலித்தது. அந்தப் பாடல் அவன் இதயத்தை கனத்துப்போக செய்தது.”உன் கை படாமல் தண்ணீர் பருக நான் யார்? ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? மலக்குழிக்குள் மூச்சையடக்க நான் யார்? மரித்தபின் உடலெங்கும் நீலம் பரவும் நான் யார்? புதைத்தபின் நீலக்கடலில் நீந்தும் நான் யார் ?” என்ற தொடர் கேள்விகளைக் கடக்க முடியாமல் கண்ணீர் வழிய அதைத் துடைத்துக் கொண்டான்.
இந்நிகழ்வு அவனுக்கு ஒரு பெரிய விடுதலையை அளித்தது. சிறைச்சாலைக்குச் சென்றவுடன் அந்தச் சோலைக்குச் சென்றான். அதே ரம்மியம். அங்கிருந்த சிமென்ட் மேசையில் அமர்ந்தான். அவன் மனத்தில் மிகப் பெரிய புரட்சி வெடித்துக் கொண்டிருந்தது. அவனால் தெளிவாக வார்தைகளை கோர்க்க முடியாவிட்டாலும், திரண்டு வரும் வார்த்தைகளை தனக்குள் கூறிக்கொண்டே இருந்தான். தர்க்கத்தாலும் விவாதத்தாலும் ஒருவனின் மனத்துக்குள் ஊடுருவாத இடத்தையும் கலை ஊடுருவிவிடும். அது மனிதனின் மனதில் மூலையிடுக்கில் ஒளிந்திருக்கும் மனிதத்தையும் சென்றடைந்துவிடும்.இதுவே அவன் கண்டடைந்தது. மனிதன் கலையை உருவாக்கியதன் மூலம் தன்னையே உருவாக்கிக் கொண்டான். ‘கலை’ இல்லையெனில் மனிதன் தன்னைக் கண்டடைந்திருக்கமாட்டான். அவனுடைய பெயருக்கான காரணம் கூட ‘கலை’யின்வழி தான் வந்திருக்கக்கூடும். கலை மட்டும் தான் அவனிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை. இவ்வாறு எண்ணங்கள் அவனுள் கொப்பளித்தன. ஒரு காகிதப்பூ காற்றில் லாவகமாகப் பறப்பது போல் அவன் மனம் இலகுவாகியிருந்தது. அடுத்து அவன் சோலையிலிருந்து வேலன் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் நோக்கி நகர்ந்தான்.