சாதி என்பதன் அர்த்தம் அறியும் முன்னமே அதன் ஆதிக்கத்தை அறியப்பெற்றேன் என் பள்ளி பத்தாம் பருவதிலேயே. நான் பிறந்த கிராமம் ஓர் அழகிய மலை கிராமம். இதமான குளிரும் மிதமான வெயிலும், அடர்ந்த வனங்களும், அழகிய மனங்களும் கொண்ட அமைதியான ஊர். அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களின் மதிப்பு எங்கள் மலைக்கு கீழ் உள்ள நகரங்களை விட மிகக் குறைவு.
பணமும் வசதி படைத்த பெரியோர்களும் அவர்களின் சொந்த ஊர்களில் உள்ள சொத்துக்களை விற்று எங்கள் கிராமத்தில் ரெட்டை லாபத்தில் நிலங்களை வாங்கினார்கள். அன்று நில உரிமையாளர்களாய் இருந்த எங்கள் மக்களில் பலர் இன்று அதே நிலத்தில் விவசாய கூலிகள். அன்று வரை எங்களுக்குள் சாதிய பார்வை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை என என் அம்மா கூற நான் கேட்டதுண்டு. அவள் கூறும் போதெல்லாம் புரிந்தது போல் தலையை ஆட்டி விட்டு எழுந்து வந்திருக்கிறேன். நான் பள்ளி முதல் வகுப்பில் இருந்தே வகுப்பில் முதல் மாணவி (பெருமைக்காக அல்ல). அப்படி இருந்தும் ஒவ்வொரு முறையும் நான் பெரிதாய் எல்லோராலும் பாராட்டப்பட்டதில்லை. அதை பெரியதாய் மனதில் இருத்தி கொண்டதில்லை. ஒன்பதாம் வகுப்பில் தான் முதன் முதலாய் நான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டேன். காரணம் என் ஆசிரியர். நான் (குறிப்பாக இந்த சாதியை சேர்ந்த மாணவி) முதல் இடம் எடுக்க கூடாது என்று என்னை அவர் வகுப்பில் இருந்து எதாவது காரணங்கள் கூறி புறக்கணிக்க செய்வார். சந்தேகங்கள் கேட்க சென்றால் தள்ளி நிற்க சொல்வார். இத கிளாஸ் ல சொல்லும் போது என்ன தூங்கிட்டு இருந்தியா என அனைவர் முன்னிலும் அலட்சியம் காட்டுவார். என்னால் அன்றும் அவர் என் மேல் மட்டும் காட்டிய கடின முகத்திற்கு காரணம் விளங்கவில்லை. அதை பொருட்படுத்தாமல் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிக்கு முதல் மாணவி ஆனேன். எதையோ சாதித்தது போல் இருந்தது அன்று அவரை பார்த்த போது. உண்மையாகவே சாதனை தான் என நினைத்து ஓர் பெரிய பள்ளி எனக்கு இலவச கல்வி கொடுக்க முன்வந்தது. பெயர் பெற்ற பெரிய பள்ளியில் இலவசமாக இடம் கிடைக்க பெருமையோடு என் உற்றார் உறவினரின் ஆசியோடு படியெடுத்து வைத்தேன். கனவிலும் அப்படி ஒரு பள்ளியில் படிப்பேன் என்று நினைத்ததில்லை. என் அருகே அமர்ந்த தோழியிடம் எதார்தமாய் ஒரு நாள் பள்ளி கட்டணம் கேட்டு அதிர்ந்து போனேன். முதலில் இலவசமாக சேர்க்கப்பட்ட என் மதிப்பெண்ணை பற்றி பேசினார்கள். நாட்கள் நகர நகர என் மதிபெண்ணின் மதிப்பு மங்கி என் ஊர் பெயரால் நான் அடையாளம் காணப்பட்டேன். அந்த இலவச இடமும் என் சாதிக்கான ஆறுதலாய் மாறி போனது அவர்கள் கண்களுக்கு. அன்று வெறும் புத்தக புழுவாகவே இருந்து விட்டேன். என்னை தாக்கிய அம்புகளின் ஆதியை ஆராய முற்படவே இல்லை. அதன் அர்த்தம் அப்போது அறியாததால் இந்த சூழ்நிலைகள் என்னை பெரிதும் பாதிக்க வில்லை. அதை தொடர்ந்து என் கல்லூரி வாசலில் வலசை பறவையாய் வரவேற்கப்பட்டேன். முதலாம் ஆண்டு. முதல் நாள். என் அறைக்கு நான் தான் அன்று முதல் ஆள். விடுதியில் பெற்றோர் என்னை விட்டு சென்றப்பின் ஆவலோடும் சற்றுப் பதற்றத்தோடு அறை வாசலில் நின்றிருந்தேன். என் அறைக்கு அடுத்து வந்த என் தோழியும் எங்கள் மாவட்டமே. கேட்டதும் ஒரு ஆனந்தம். ஒரு வித நம்பிக்கை. அவளின் பெற்றோர் என் ஊரை பற்றி விசாரிக்க. நானும் மிகவும் உற்சாகமாய் கூற உடனே அவரின் அடுத்த கேள்வி எவ்ளோ மார்க். (அந்த பொண்ணு அந்த ஊருல்ல. ஓ. அதான் சீட் கெடசிருக்கு. சரி சரி.)என்று ஏலன பார்வை பார்த்ததும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. தனியாய் என் அறை தோழியிடம் என்னுடன் சற்று அளவாக பழகும்படி அறிவுரை கூறி சென்றனர். அன்றிரவு அம்மாவிடம் அலை பேசியில் காரணம் கூறாமல் அழுதேன். ஆனால் நான் கல்லூரியில் பெற்ற முதல் மற்றும் கடைசி காயம் அதுவே. அதன் பின் நாட்களில் என் தோழி தோழர்களின் கை கோர்ப்பில் சமத்துவ பாதையில் பயணித்த என் வாழ்வின் பொற்காலமும் அதுவே. அந்த கனா காலம் அதி வேகமாய் கரைந்து போக, அடுத்து என்ன என்ற கேள்வியும் அதற்கு விடையுமாக சென்னையை நோக்கி தொடங்கியது என் பயணம் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய பயிற்சிக்காக. புது ஊர். புது மனிதர்கள். பல முகங்கள். பல அனுபவங்கள் என நான் அங்கு எதிர்கொண்ட ஒரு நிகழ்வு என் வாழ்வில் நான் இன்றும் வருந்தும் தவறு ஒன்றை இழைக்க வழியாய் போனது. நான் முதலில் விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தேன். சரியான சூழலும் சத்தான உணவும் இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட வீட்டிற்க்கு திரும்ப வேண்டிய கட்டாயம். வீட்டில் பயிற்சியை தொடர போதிய வழி நடத்தலும் வசதியும் இல்லாததால் மீண்டும் சென்னை பயணப் பட்டேன். இந்த முறை ஒரு வீட்டில் வாடகை கொடுத்து தங்குவதாக ஏற்பாடு. டெலிகிராம் மூலம் ஒருவர் தாம் தங்கி உள்ள இடத்தில் மேலும் ஒருவருக்கு (ஒரு அறைக்கு இருவர் வீதம் மொத்தம் நான்கு பேருக்கான அறை) இடம் உள்ளதாக விளம்பரப்படுத்த அவர்களும் என்னை போலவே அரசு தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் என்ற ஒரு ஒற்றுமையை தவிர வேற எந்த விவரமும் அறியாமல் அவர்களோடு இணைந்தேன். நம்பிக்கையோடு சென்று சேர்ந்தேன். வகுப்புகளை தொடர்ந்தேன். நாட்கள் நகர நகர நான் தங்கி இருந்த வீட்டில் சில மாற்றங்களை உணர்ந்தேன். என்னுடன் இருந்தவர்கள் என்னை மட்டும் புறக்கணிப்பது போல. இந்த உணர்வு தீவிரமானது (அக்கா என்ன ஆச்சு கா. ஏன் என்கிட்ட மொதல் மாறி பேச மாடிங்குறிங்க என எதார்தமாய் கேட்டேன்.).
அன்று தான் நான் முதல் முதலாய் நேரடியாக சாதியின் பெயரால் தாக்கப்பட்டேன். அதன் பின் வரும் நாட்களில் தொடர் வன் சொற்களால் கையாளப் பட்டேன். கடுன்செயல்களையும் வன் சொற்களையும் ஏற்று கொள்ள முடியவில்ல. எதிர்த்து பேச துணிவும் இல்லை. சுய மரியாதை இழந்ததை எண்ணி எண்ணி சுயத்தையும் இழந்தேன். பெற்றோர், என் குறிக்கோள் என எல்லாம் மறந்து போனது. யாரிடமும் சொல்ல முடியாமல் தற்கொலை முயற்சிக்கு தூண்டப்பட்டேன். தீவிர சிகிச்சைக்குப்பின் கண் விழித்தேன். என் கோழைத்தனத்தை எண்ணி எண்ணி இன்று வரை நான் வெட்காத நாளில்லை.
நான் மறக்க நினைத்த நிகழ்வை இன்று மீண்டும் உங்கள் கண் முன் காட்ட காரணம், ஒருவரை சாதிய கண் கொண்டு பார்க்கும் வழக்கம் கிராமத்தையும் வளர்ச்சி பெறாத சமூக நிலைகளில் மட்டுமே இருக்கும் என்றே நான் எண்ணி இருந்தேன். ஒரு படித்த பகுத்தறிவு பெற்ற அரசு சேவை பணிகளுக்கு தயார் செய்ய கூடிய இளம் பெண்களால் நான் இச்செயலுக்கு உள்ளாக்க பட்டதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். என்னை போல் எத்தனையோ உயிர்கள் இந்த நொடியும் ஏதோ ஒரு இடத்தில் தன் நிலையை வெளியில் சொல்ல முடியாமல் உழன்று கொண்டு இருக்கலாம். அவர்கள் எந்நாளும் என்னை போல ஒரு கோழைத்தனமான முடிவை நோக்கி செல்ல கூடாது என்பதற்காகவே இன்று நான் EGALITARIANS உடன்.