இன்னும் எனது கிராமத்தில் சாதி பெருகிக் கொண்டுதான் உள்ளது. தோட்டத்திற்கு ஆட்கள் தேவை என்றால், கீழ்சாதி எனக் குறிப்பிடுவர்களைத்தான் கூப்பிடுவார்கள். அதிலும் உயர்சாதி என குறிப்பிடுவர்களுக்கு என்றால் பால் டீ, கீழ் சாதியென குறிப்பிடுவர்களுக்கு வரக்காப்பி என்று சொல்லப்படும் பால் இல்லாத டீ தான் கொடுப்பார்கள் அதுவும் கொட்டான் குச்சியில் தான் தரப்படும். அனைத்து ஊர் போலவே, எங்கள் ஊரும் இரண்டு ஊராக பிரிந்து இருக்கும். ஒன்று காடுகளை வைத்து இருக்கும் மேல்சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் மற்றொன்று கீழ்சாதி எனக் குறிப்பிடப்படும் மக்கள் வாழும் சேரி என்று அழைப்பார்கள்.
இன்றும் எங்கள் ஊரில் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு தயங்குவார்கள் இந்த மேல்சாதி என குறிப்பிடப்படுபவர்கள் அதற்கு ஒரு காரணம் சொல்வார்கள் ” சேரிகார பசங்களோட சேர்ந்தா கெட்டு போயிடுவான் ” என்று. மீறி அப்படியும் ஒரு சில மேல்சாதி என குறிப்பிடப்படுபவர்கள் அங்குள்ள பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலும் ” அந்த காலனி கார பசங்க கூட சேராத என்று சொல்வார்கள், அவிங்க கூட சேர்ந்தா தீட்டுடா , அவிங்ககிட்ட எதுவும் வாங்கி சாப்பிடாத” என்றெல்லாம் காதில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சிலர் சொல்வார்கள் சாதி சான்றிதழை எடுத்து விட்டால் எல்லாம் சரி ஆகிடுமாம், அவர்கள் அனைவரும் சாதியை வளப்பவர்களே ஆவார்கள். பொதுவாக எந்த தப்பு செய்தாலும் மேல்சாதி என குறிப்பிடப்படுபவர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவது எப்படி என்றால் ” நீயும் சேரிக்காரன் பையன் மாறி முடி வெட்டாத, சட்டை போடாத, அவனுங்க மாறி கேதேரியா சுத்தாத ” . நானே ஒரு முறை தாடி வைத்ததால் என் சொந்தக்காரர் ஒருவர், ” ஏன்டா தம்பி நீ இந்த தாடிலாம் எடுக்க மாட்டியோ சேரிகாரன் மாறி” என்று சொல்லி அவர்கள் இழிவாக பேசினார்கள். தான் பேசுவது என்ன அர்த்தம் என்று தெரிந்தே பேசுவார்கள். இதிலிருந்து என்ன புரிந்து கொண்டேன் என்றால் அவர்களை கொடுஞ் சொற்களால் பேசவில்லை என்றால், இவர்களுக்கு அன்று நாட்களே போகாது.
எங்கள் ஊரில் உள்ள சுடுகாடு கூட இரண்டாகத்தான் இருக்கும். ஒன்று மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்களுக்கு, மற்றொன்று கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்களுக்கு. சாம்பல் ஆனால் கூட இவர்கள் விடமாட்டார்கள், அங்கும் தன் சாதி அழிய கூடாதாம்.
எவரேனும் இருவருக்குள் சண்டை வந்தால் கூட ” டேய் நம்ம சாதிக்காரன அந்த சேரிக்காரன் எதிர்த்து பேசிட்டான், இவனுங்களுக்கு அவ்ளோ திமிரா, இப்படியே விட்டா நம்ம ஊர்ல அவனுங்க அராஜகம் வளரும்” என்று ஆரம்பிப்பார்கள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. என்ன சண்டை என்றே புரியாது, ஆனால் வரிஞ்சு கட்டிட்டு எல்லாம் செல்வார்கள். மேல்சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் என்ன செய்தாலும் கீழ் சாதியினர் எதுவும் கேட்கக் கூடாது. மீறி கேட்டால், ‘எங்க ஜாதிக்காரன்ட எதிர்த்து பேசுறான்’ என்று சொல்வார்கள்.
கோவிலில் மிகவும் மோசமாக சாதி வன்கொடுமையைப் பார்த்து இருக்கிறேன். வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்களை வெளியே நிறுத்தி திருநீறைக் கூட இரண்டடி தூரத்தில் இருந்து தான் கொடுப்பார்கள். அவர்கள் மேல் கை பட்டால் தீட்டு ஆகிடுமாம். அனால் அவர்கள் போடும் சில்லறை காசு மட்டும் வாங்கி கொள்வார்கள். அங்கு பிரசாதம் கூட அவர்கள் சேலையில் தான் வாங்கிக்கொள்ளவேண்டும்.
விவசாயிதான் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று சொல்வதுண்டு. அது மிகவும் தவறான ஒன்று. விவசாய நிலத்தில் வேலை செய்வது எல்லாம் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள். அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் இப்படி தான் ஒன்றே கஷ்டப்படுவதாக சொல்லி மார் தட்டி கொள்வர்.
மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் இறந்தால் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். ஆனால் தன் நிலத்தில் உழைத்த கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் இறந்தால் மேல் சாதி யினர் போக மாட்டார்கள். ஆனால், இவர்கள் வீ ட் டு கல்யாணம், இறப்பு எதுவானாலும் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் தேவை. தங்கள் உண்ட எச்சில் இலைகளை எடுக்கவும் பயன்படுத்துவார்கள். கடைசியாக இருக்கும் மீதி இருக்கும் சோறு குழம்பு என்று மிச்சம் ஆன எல்லாவற்றையும் அவர்களுக்கு ஒரே பையில் போட்டு கொடுப்பர். ஈவு இரக்கம் இல்லாமல் அந்த சாப்பாட்டில் கூட பாவத்தையே செய்வார்கள்.
இன்னும் சில பேர், சேரி தெருவுக்குப் போய் வந்தால் கூட குளிப்பார்கள், கை கால் கழுவுவார்கள்.
கட்ட பஞ்சாயத்து (பைசல் பேசித் தீர்த்து வைப்பது) எல்லாம் இன்னும் இருக்கிறதா என்று நிறைய பேர் கேட்பார்கள். அது இன்னும் இருக்கிறது என்று தான் கூறுவேன். உதாரணத்திற்கு, கீழ் சாதி என குறிப்பிடப்படுபவர்களில் ஒரு பையனோ பெண்ணோ ஒரு மேல் சாதி என குறிப்பிடப்படுபவர்களின் பையனையோ பெண்ணையோ காதலித்தால் முதலில் பைசல் பேசுறோம் என்று சொல்லி பிரித்து வைப்பார்கள். மிரட்டி அவர்களை பிரிய வைப்பார்கள். சிலர் சொல்வர் ‘ என்னப்பா இப்போல்லாம் சாதி மறுப்பு திருமணம் நிறைய நடக்குதே, ஒரு குழந்தை பொறந்தா செரி ஆகிடும்’ என்று, ஆம் இது உண்மை. இது ஒரு MBC to OBC க்கு வேண்டுமானால்சொல்லலாம். ஆனால், ஒரு மேல் சாதி எனக் குறிப்பிடப்படும் பெண் ஒருவர் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் ஆணை காதலித்தால் ஒன்று பிரித்துவிடுவார்கள், இல்லை என்றால் கடைசி வரை அவர்களிடம் பேசாமல் அவர்களுக்கு வாழ்வில் குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பார்கள்,
நான் கண் எதிரே பார்த்த ஒன்று, எங்கள் கிராமத்தில் காய்கறி, பழத்தோட்டத்தில் வேலை செய்யும் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்களுக்கு சொத்தையான காய்கறிகள் பழத்தைத்தான் கொடுப்பார்கள்.
கிராமத்தில் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர், ஹார்வெஸ்டார் லாம், வைத்து இருக்கும் பெரிய பெரிய நில உரிமையாளர்கள் அனைவரும் மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் , இதில் என்ன பிரச்சினை என்றால், மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர் எவராவது ஒருவர் சாதி ஒழிப்பு பற்றி பேசினாலே ஒரு வழி செய்வார்கள். அப்படி குரல் கொடுத்தவருக்கு நிலம் உழுவதற்கு தேவையான டிராக்டர், ஹார்வெஸ்டார் , என்று அனைத்தையும் வாடகைக்கு தராமல் அவரை எந்த பயிரும் செய்ய விடாமல், ” நம்மளுக்கு எதிரே பேசுகிறான், நீயும் அவிங்க கூடவே போ” என்றெல்லாம் கூட சொல்வார்கள். கடைசியில் அவரையும் குரல் கொடுக்க முடியாதவாறு செய்வார்கள். படத்தில் பார்ப்பது எல்லாம் உண்மையின் அடிப்படையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே.
எனது ஊரில் பால் எடுக்கும் மையம், கூட்டுறவு வங்கி , மளிகை கடை முதல், உரக்கடை, தனியார் பள்ளிகள் என்று அனைத்திற்கும் மேல் சாதியினரே உரிமையாளர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், ஒரு கீழ் சாதி என குறிப்பிடப்படுபவர்கள் மாடு வைத்து அந்த ஊரில் பால் விற்கவோ, காய்கறி விற்கவோ முடியாது.
கூட்டுறவு வங்கி என்று சொன்னவுடன் ஞாபகம் வருகிறது. கூட்டுறவு வங்கி கிராமப்புற மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால். அது உண்மையல்ல. அது மேல் சாதி என குறிப்பிடப்படுவோருக்கே உதவியாக உள்ளது . கூட்டுறவு வங்கியின் தலைவர் எப்பொழுதுமே மேல் சாதி என குறிப்பிடப்படுபவர்களில் இருந்து தான் இருக்கின்றார், அதனால், அவர்கள் தன் சொந்தக்காரர்களுக்கு மட்டும் தான் கடனை தருவார்கள். கிராமத்தில் கூட்டுறவு வங்கியில் கீழ் சாதி என குறிப்பிடப்படும் மக்களுக்கு கடன் அதிக அளவில் கிடைப்பதில்லை. ஏன் நான் கூட்டுறவு வங்கி பற்றி சொல்கிறேன் என்றால், அதில் மக்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும், மேலும் பிறகு ஆட்சி மாறும்பொழுது தள்ளுபடி ஆகும், எனவே அதில் பயனடைவோர் மேல் சாதியினரே.
மேலும் காட்டில் வேலை செய்ய வரும் கீழ் சாதியினர் காலில் செருப்பு போட க் கூடாது, துண்டு தலையில் இருக்க கூடாது, என அவர்களை தினந்தோறும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் நிறைய பேர் கேட்பது ‘இப்பவும் இப்படி நடக்குதா எனக்கு காட்டு என்று , அட முட்டாள் நீ பார்ப்பது மட்டும் உலகம் இல்லடா, இன்னும் அடிமைத்தனம் இருந்துகொண்டு தான் இருக்குன்னு சொல்வேன்’.
நான் கல்லூரி முடித்த பின்பே இந்த சாதியின் கொடுமைகளை புரிந்து கொண்டேன். நானும் ஒரு காலத்தில் Reservation வேண்டாம் என்று கத்திக்கொண்டு இருந்த ஆள் தான். இப்பொழுது நான் என் வீட்டில் இந்த சாதி ஒழிப்பை பற்றி எடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். முதலில் என் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறேன், அதுவே எனது முதல் வெற்றி, முன்பெல்லாம் intercaste marriage தவறு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் வாழட்டும் என்று சொல்கிறார்கள், அதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாவே, நான் தினமும் சாதி ஒழிப்பை பற்றி ஒரு கருத்தை அனுப்பிக்கொண்டே இருப்பேன்.
ஆனாலும் இன்னும் என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை, நகர்ப்புறத்தில் சாதியைப் பற்றி பேசினால் ஒரு discussion ஆரம்பித்து நல்ல புரிதலில் முடியவைக்கலாம், ஆனால் கிராமப்புறத்தில் நாம் சொல்வது என்னவென்றே கேட்க மாட்டார்கள்.
நான் ஒரு lower middle class. என்னை படிக்க வைக்க என் தந்தை சிலரிடம் கடன் வாங்குவார், மிகவும் அவசரம் என்றால் வங்கிக்கு சென்று கடன் வாங்கமுடியதல்லவா, அதனால் இந்த உறவினர்களிடம் கடன் வாங்குவார். எப்பொழுதெல்லாம் நான் சாதி மற்றும் பெண் கொடுமைகளைப் பற்றி ஒரு பொது வெளியில் பேசும் போதும் அது எனக்கு ஆபத்தில் முடியும், இதனால் என்னால் எதுவுமே பேச முடியவில்லை. ஏனென்றால் ‘ என்னப்பா உன் பையன நீ படிக்க வைக்க இப்படி காசு கேக்கற ஆனா உன் பையன் சாதிய ஒழிக்கறேன்னு பேசிட்டு இருக்கான்’ என்று சொல்லி அந்த உறவினர்கள் அங்கு என் படிப்பிற்கே உலை வைப்பார்கள், வைத்தும் இருக்கின்றனர்.
ஆனாலும் எனக்கு உடனே பயந்து இதை பற்றி பேசக்கூடாதுனு தோணல, என்னால் முடிந்த வரை எனது நெருக்கமான நண்பர்களுக்கு எடுத்துரைப்பேன், சிலர் மாற்றம் அடைவதை நான் பார்த்து இருக்கிறேன்.
கிராமப்புற பேருந்தில் கூட சாதியைப் பார்க்கலாம், மேல்சாதி எனக் குறிப்பிடப்படுவோர் ” டிக்கெட் காசு சில்லறையாக இல்லை என்று சொன்னால் நடத்துனர் உடனே சிரிச்சிட்டே அடுத்த stop ல தரேனு சொல்லுவார். ஆனால் கீழ்சாதி எனக் குறிப்பிடப்படுவோர் ஒருவர் அப்படிச் சொல்லும் போது ‘பஸ் விட்டு இறங்கி போ சில்லறை இல்லாம எதுக்கு வரேன்னு’’ சொல்லுவார் .
உள்ளாட்சி தேர்தல் வந்தால், ஒரு ஊரில் தலைவர் கீழ் சாதி எனக் குறிப்பிடப்படுவோர் இருந்தால் இந்த மேல் சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் எதற்குமே செல்ல மாட்டார்கள். மாறாக அந்த ஊர் கவுன்சிலர் இருப்பார், அவரிடமே எந்த கோரிக்கைகளையும் வைப்பார்கள். சாதிய கொடுமை ஒழிய வேண்டும் என்றால் அனைவருமே அதை பற்றி பேசி ஒரு டிஸ்கஸன் கொண்டு வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும். சட்டம் மட்டும் அதற்கு தீர்வு இல்லை. கீழ்சாதி எனக் குறிப்பிடப்படுவோர் மட்டும் சாதி ஒழிப்பை பற்றி பேசினால் போதாது. அனைவருமே பேசவேண்டும்!