அன்று இரவு முழு பௌர்ணமி. நாம் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து விட்டோம் என்பதற்காகவும், நம்மிடம் பணம், அரசியல் செல்வாக்கு இல்லை என்பதற்காகவும் பாவம் இப்படி அநியாயமாக சாதியப் பாகுபாட்டால், ஏற்றத்தாழ்வுகளால் உன்னைக் கொன்று விட்டார்களே என்று நிலவின் ஒளி கண்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கையில் வானத்தை நோக்கி காட்டுப்பேச்சியிடம் பேசிக் கொண்டிருந்தான் முகில். வழக்கம் போல காட்டுப்பேச்சியும் தன் அண்ணனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
காட்டுப்பேச்சி: அண்ணா, இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நான், நீ, இந்த மக்கள், பணம், பூமியில் உள்ள வளங்கள் அனைத்தும் தற்காலிகமானவையே. ஏன், நீ கூறும் சாதியும், சாதியப் பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் கூட. இதை நான் கூறவில்லை அந்த கிருஷ்ணம்மாளே கூறியிருக்கிறார்.
முகில்: கிருஷ்ணம்மாளா? இது யார்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே.
காட்டுப்பேச்சி: ம்ம் இது கூட தெரியாதா? கிருஷ்ணம்மாள் கடவுளுக்கு நிகரானவர்!
முகில்: அப்படியா! அப்படி என்ன சாதித்து விட்டார் அவர்?
காட்டுப்பேச்சி: அர்ப்பணித்தார்! தன் முழு வாழ்க்கையையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தார்! இன்னும் அர்ப்பணித்துக் கொண்டே தான் இருக்கிறார். அவருக்கு தற்போதைய வயது 94!
முகில்: (ஏளனமாக)..அவரிடம் பணம் நிறைய இருந்திருக்கும். மேலும், நம்மைப் போன்று தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தால் தெரிந்திருக்கும். வாழ்க்கையின் கஷ்டங்கள் என்னவென்று.
காட்டுப்பேச்சி: (சிரித்தபடியே)…அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெண் தான் அண்ணா. அவரிடம் பணச்சொத்து, நிலச்சொத்து என்று எதுவும் கிடையாது. ஏழை மக்கள் (குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள்), விவசாயிகள், குழந்தைகள் என்று இவர்கள் அனைவரும் தான் கிருஷ்ணம்மாளின் சொத்துகள்.
(அமைதி நிலவுகிறது).
காட்டுப்பேச்சி: என்ன அண்ணா. சப்தத்தையே காணோம்!
முகில்: ஒன்றுமில்லை, இப்படிச் சொத்து எதுவுமில்லாமல் மக்களுக்காக உழைத்திருக்கிறார். அதுவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக. மேலும் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து வந்திருக்கிறார். அதுதான் எப்படிச் சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன்.
காட்டுப்பேச்சி: மனதில் உறுதி பூண்டிருந்தால் எதுவும் சாத்தியமே அண்ணா. அதற்குக் கிருஷ்ணம்மாளின் தாயார், அவரது கணவர், அவரது கல்வி, அகிம்சை ஆயுதங்கள் உறுதுணையாய் இருந்துள்ளன. 32 வயதிலேயே குடிகாரக் கணவனால் விதவையாகும் அவரது தாயார், விடாமுயற்சியினால் தன்னுடைய 6 குழந்தைகளையும் உயர்சாதி வர்க்கத்தினருக்கு மத்தியில் வளர்த்த உத்வேகம் தான் கிருஷ்ணம்மாளை ஒரு சமூகப் போராளியாக உருவெடுக்க வைத்தது; தாழ்த்தப்பட்ட பெண்களின் வாழ்வுநிலை உயர பாடுபட வைத்தது. அவர் அம்மாவின் சூரிய வழிபாட்டால், இன்று 15000 தாழ்த்தப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் இருள் விலகியுள்ளது என்றாலும் அது மிகையாகாது.
முகில்: 15000 பெண்களா!. அது என்ன கணக்கு? புரியவில்லையே.
காட்டுப்பேச்சி: அண்ணா, இக்காலகட்டத்தில் பெண்ணியமும் சாதியமும் பற்றி மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கு கிருஷ்ணம்மாளுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. (சோகத்துடன்) ஏன், நானும் என் உயிரைக் காப்பாற்றியிருக்கக் கூடும் எனக்கு மட்டும் கிருஷ்ணம்மாளை பூமியிலிருக்கும் போது தெரிந்திருந்தால். ஆனால் இப்பொழுது யோசித்து என்ன பயன், இங்கு மேல் உலகத்திற்கு வந்த பிறகு கிருஷ்ணம்மாளின் கணவர் ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாளைப் பற்றிக் கூறிய போது தான் அவரைப் பற்றி தெரிந்தது. கிருஷ்ணம்மாள் மிகவும் எளிமையானவர். அவர் அகிம்சை வழியில் 15000 நிலமற்ற பெண்களின் குடும்பத்தினருக்கு (பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பெண்களின் குடும்பங்களுக்கு), உயர் சாதியைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் இருந்தும், கோவில் அறக்கட்டளைகளிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் 15000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தந்து அவர்களின் வாழ்க்கை சிறக்க வழி செய்துள்ளார். அதுதான் அந்த 15000 கணக்கு!
(மீண்டும் அமைதி நிலவுகிறது)
காட்டுப்பேச்சி: என்ன அண்ணா, மீண்டும் சப்தத்தையே காணோம்.
முகில்: இல்லை. இந்தக் காலத்தில் ஒரு இன்ச் நிலத்திற்குக் கூட சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், இப்படி தன் வாழ்வைப் பற்றி யோசிக்காமல் 15000 ஏக்கர் நிலங்களை உயர் சாதியினரிடம் இருந்து பெற்று, தாழ்த்தப்பட்ட பெண்களுக்காகக் கொடுத்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே இது அசாதாரணமான செயல் தான். அதுவும் அகிம்சை வழியில். சரி! அகிம்சை வழியில் போராடியிருக்கிறார். அவர் காந்தியவாதியா என்ன?
காட்டுப்பேச்சி: அவரைக் காந்தியவாதி என்ற வரைமுறைக்குள் அடக்குவதை விட்டு விட்டு, இன்னொரு காந்தி என்று கூட கூறலாம் அண்ணா. ஆம்! காந்தி அரசியல் விடுதலைக்காகப் போரானார். கிருஷ்ணம்மாள் பொருளாதார விடுதலைக்காகவும், சாதிய ரீதியிலான பாகுபாட்டில் இருந்து விடுபடவும், பெண்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டுள்ளார். அவர் காந்தியைப் பெரிதும் மதிக்கக் கூடியவர். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். காந்தி மட்டுமல்ல, இராமலிங்க ஸ்வாமிகள், சுவாமி விவேகானந்தரையும் வாழ்த்தி வாழ்ந்தவர். சமூக நீதிக்காகப் போராடுகையில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்த் திகழ்ந்தவர்! அவருடைய பாதை மிகவும் நேர்த்தியானது. சில தலைவர்களைப் பின்பற்றி சிறப்பான வெற்றி கண்டவர்.
முகில்: சரி! சரி! அவரைப் புகழ்ந்ததெல்லாம் போதும். அவர் நிலத்தை எப்படி அகிம்சை முறையில் உயர் சாதியினரிடமிருந்து பெற்று தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அளித்தார். நிச்சயமாகப் பெரும் போராட்டமாக இருந்திருக்குமே.
காட்டுப்பேச்சி: முதலில் உங்கள் பேச்சு குணங்களை மாற்றுங்கள் அண்ணா. நான் ஒன்றும் அவர்களைப் புகழவில்லை. அவரது வாழ்க்கை வாய்மையினைத் தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒரு பெண்ணாக இருப்பதால் உங்களைப் போன்ற ஆண்களுக்கு பொறாமை. எப்பொழுதும் நான் அவரை நெல்சன் மண்டேலா மற்றும் மார்டின் லூதர் கிங்கிற்கு இணையாகத்தான் வைத்துப் பார்ப்பேன். எப்படி நீங்கள் காந்தியை மற்ற உலகத் தலைவர்களுடன் இணைத்துப் பார்க்கிறீர்களோ அது போல. இப்படி நான் சொல்வது கதையாகவும், புகழாகவும் இருந்தால் நான் அவரைப் பற்றி கூற அவசியமே இல்லை.
(அண்ணனின் சமாதானத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்கிறாள்)
காட்டுப்பேச்சி: வன்முறைக்கும் கிருஷ்ணம்மாளுக்கும் வெகுதூரம். உதாரணத்திற்கு உயர்சாதியினரிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும், நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும், காவலர்களிடமிருந்தும் மாட்டுச் சாணியால், கல்லெறியினால், தடிகளினால் பல முறைகள் வாங்கிய அடிகளுக்குப் பிறகும் அதனால் சிந்திய இரத்தங்களுக்குப் பிறகும் அவர் வன்முறையைக் கையிலெடுக்கவில்லை. காந்தியைப் பின்பற்றுபவர் அல்லவா.
அகிம்சையே கிருஷ்ணம்மாளின் சிறந்த ஆயுதம். அதுவே இவரது அன்பின் வழியிலான அறப் போராட்டமும் கூட.
நான் காந்தியையும், பாரதியையும் தான் கூறினேன் தவிர இவருடன் பணியாற்றிய தலைவர்களைப் பற்றிக் கூறவில்லை. குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் ஆச்சார்யா வினோபா பாவே (பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்) இவரது முன்னோடியாகத் திகழ்ந்தவர். மேலும் ஜெகந்நாதன் (கிருஷ்ணம்மாளின் கணவர்), ஜெயபிரகாஷ் நாராயணன், கக்கன், காமராஜர், நடராஜன், குமரப்பா போன்றோரின் உறுதுணையோடு பூமிதான இயக்கத்திலும், கிராமதான இயக்கத்திலும், நிலமற்றவர்களுக்கு நிலம், உழுபவர்களுக்கே நிலம், கிராம சுயராஜ்ஜியம் போன்ற இயக்கங்களிலும் பங்கேற்று பல்வேறு உயர்சாதிச் செல்வந்தர்களின் நிலங்கள், விதிமுறைக்கு அப்பாற்பட்டு வைத்திருக்கும் கோவில் நிலங்கள், மடாலயங்களுக்குச் சொந்தமான நிலங்கள், பண்ணையார்களின் நிலங்கள் என ஏறத்தாழ தமிழகத்தில் மட்டும் 15000 ஏக்கர் நிலங்களைப் பெற்று அவற்றை ஏழை மக்களின் குடும்பங்களுக்கு (பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு), குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்ற வீதம் சரி சமமாய் அளித்தவர். இவரது பயணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் (பூமிதான இயக்கத்தின் மூலம்) இருந்துள்ளது. பீகார் மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக இவர் உழைத்த விதம் பிரம்மிக்க வைக்கிறது. ஏனென்றால் கிருஷ்ணம்மாள் உலக அமைதியை விரும்பிய உயரிய தெய்வம்.
முகில்: காட்டுப்பேச்சி! விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுத்தது சரி! ஆனால் இப்படி நில உடைமையாளர்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று அதை மக்களுக்குக் கொடுத்தது சரி என்று நீ நினைக்கிறாயா?
காட்டுப்பேச்சி: அண்ணா, இந்த உலகில் எதையும் சொந்தம் கொண்டாட எவருக்கும் உரிமையில்லை. நீங்கள் பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிலத்தைத் தவிர வேறு எதையாவது தனி மனிதன் ஒருவன் ஆக்கிரமித்திருக்கிறானா என்றால் அது இல்லை. அப்படியிருக்க நிலத்திற்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி. அதுவும் ஏன் அது செல்வந்தர்களிடத்திலும், உயர் சாதியினரிடத்திலும் மட்டும் இருக்க வேண்டும். ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் ஆண்டாண்டு காலமாய் உயர் சாதியினர் நிலத்தில் தொழிலாளர்களாய், கூலி விவசாயிகளாய் உழைத்து ஓடாய்த் தேய வேண்டும்? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறிது நிலம் அளித்தால் போதுமே. அவர்கள் சொந்த உழைப்பில் அவரவர் குடும்பப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களே. அது தானே அண்ணா உலக அமைதிக்கும் வழிவகுக்கும். அதுதானே உண்மையான சுதந்திரம். இதைத் தானே கிருஷ்ணம்மாளும் உலகிற்குக் கூற வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் இதில் தவறு ஒன்றுமில்லை. கிருஷ்ணம்மாளின் நோக்கம் ஒன்றுதான் இங்கு. நிலம் அதிகமாய் வைத்திருப்பவன் சிறிது நிலத்தை நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கலாமே என்பது. இந்த நிலங்களைப் பெறுவதற்குத் தானே அவர் கர்ப்பிணிப் பெண்ணாய் இருந்த போதும் கூட, ஏன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருந்த போதும் கூட போராடினார். பல்வேறு சிறைகளுக்கும் சென்று வந்தார், சிறைக்குச் செல்லும் வழியில் தப்பித்தும் ஓடி வந்தார். உண்ணாவிரதங்களை மேற்கொண்டார்.
முகில்: ஓ!. கிருஷ்ணம்மாள் மிகவும் தைரியமானவரும் கூட!
காட்டுப்பேச்சி: தைரியமானவர் தான் அண்ணா. ஆனால், எத்தகைய தைரியமும் அநீதிகளுக்கு எதிராக தோற்கும் ஒரு காலகட்டமும் வரும். உதாரணமாக, கிருஷ்ணம்மாளுக்குக் கூற வேண்டுமானால் கீழ்வெண்மனி படுகொலையைக் கூறலாம். சில உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த 44 பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தீயிட்டு எரியச் செய்த கொடூர சம்பவம் அது. அன்று எரிந்த தீயால் உடல்கள் பல கருகியிருக்கலாம். ஆனால் அது கிருஷ்ணம்மாளுக்கு ஆறாத வடுவாய் இன்றும் மனதில் இருக்கக் கூடும்.
முகில்: (கண்கள் கலங்கியபடியே)..என்னால் அவரது கஷ்டங்களை நன்றாக உணர முடிகிறது காட்டுப்பேச்சி. ஏனென்றால் நானும் உன்னை இழந்துள்ளேன். உயிரிழப்புகள் என்பது சில நேரங்களில் மனித வாழ்க்கையையே திசை திருப்பி விடுகின்றன. ஆனால், இவ்வளவு கொடூரமான கொலை சம்பவத்தைப் பார்த்த பிறகும் கிருஷ்ணம்மாள் மனம் உடைந்து போகாமல் மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் உழைத்திருக்கிறார் என்றால் நீ சொல்வதைப் போல் அவர் உண்மையிலேயே கடவுளுக்கு நிகரானவரே! சரி! நிலம் பெற்றுத்தந்தது மட்டும் தான் அவரது சாதனையா?
காட்டுப்பேச்சி: மக்களுக்கான சேவை, அதுவும் ஏழை மக்களுக்கான, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, பெண்களுக்கான சேவை என்று வந்து விட்டால் ஒரு சிறு கூண்டிற்குள் அடக்கி விட முடியாது அண்ணா. அது சுதந்திரப் பறவையைப் போன்றது. உயரப் பறக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே தான் இருக்கும். கிருஷ்ணம்மாளும் அந்த பறவையைப் போல் தான். தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடிசை வீடுகள் இருந்த இடங்களில் நல்ல வீடுகள் கட்டித் தந்ததிலும், இறால் பண்ணைகளுக்கு எதிராகப் போராடி வென்றதும், வலிவலம் சத்தியாகிரகத்திலும் சரி! வத்தலகுண்டு விவசாயிகளுக்கும் சரி! அவர் ஆற்றிய சேவைகள் இன்றும் நின்று பேசக் கூடியவை. அவர் ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியராகவும், டாக்டர். சவுந்தரத்திடம் இருந்த போது ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து வந்தாரென்பதை நினைக்கும் போதும் மெய்சிலிர்க்க வைக்கின்ற சேவை என்பது புரிய வருகிறது.
முகில்: ம்ம்..என்ன தான் சமூக சேவகராக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் போது தோற்று விடுவார்களே. கிருஷ்ணம்மாளும் அப்படித்தானே காட்டுப்பேச்சி.
காட்டுப்பேச்சி: ஹா ஹா..(சிரித்தபடியே)..கிருஷ்ணம்மாள் அதிலும் தோற்றுப் போய்விடவில்லை அண்ணா. கிருஷ்ணம்மாள் கூறுவதைப் போல ‘ஒவ்வொரு மனிதரும் தனது சுயநலம் சார்ந்த ஆசைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொதுநலனைக் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கும் போதுதான் சமூக நீதியில் வெற்றி பெற முடியும்’. என்னதான் கிருஷ்ணம்மாள் தன் மகன் கைக்குழந்தையாய் இருந்த போதும் போராடியவராய் இருந்தாலும், தன் மகளின் இளவயதுக் காலங்களில் நேரம் ஒதுக்க முடியாதவராய் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த தாயாய் விளங்கினார் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. அவரின் மகன் (பூமிகுமார்) மற்றும் மகள் (சத்யா) இருவரும் இன்று சிறந்த மருத்துவர்களாக ஏழை மக்களுக்குச் சேவை செய்து வருகின்றனர். இதை விட ஒரு தாய்க்கு என்ன வேண்டும். மேலும் இவர்களின் பாசம் வானத்தைப் பிளந்து விடும் அளவுக்கு வலியது.
முகில்: காட்டுப்பேச்சி! நீ அந்த காதல் கதையைச் சொல்லவே இல்லையே!
காட்டுப்பேச்சி: பொறு! பொறு! அங்குதான் வருகிறேன். ஜெகந்நாதன்- கிருஷ்ணம்மாள் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டும் என்றால் எளிதாக முடித்து விடலாம். அது, ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாளிடம் பேசிய முதல் வார்த்தைகள்; “என்னிடமிருந்து எந்தவித சொத்தையோ சுகத்தையோ எதிர் பார்க்காதே, நமக்கென்று எதுவும் இருக்கப் போவதில்லை. நமது வீட்டின் கதவுகள் என்றும் திறந்தே தான் இருக்கும். நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் மண்ணாலானவையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் வேறு இடத்துக்குப் போவதென்றால் உடைத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். நான் எதையும் சுமக்க விரும்பவில்லை. புரிகிறதா..?”. அதாவது அவர்களது வாழ்க்கை மொத்தத்தில் முழுமையடைந்த வாழ்க்கை!
முகில்: நீ சொல்வதைப் பார்த்தால் ஜெகந்நாதனும் ஒரு போராளிதான் போல. அவரைப்பற்றி நீ சொல்லவே இல்லையே?
காட்டுப்பேச்சி: ஜெகந்நாதனின் வாழ்க்கைப் போராட்டமும் பரந்து விரிந்தது. கடல் போல. கிருஷ்ணம்மாளின் வாழ்க்கையைப் போல. ஆதலால் இப்பொழுது போய் தூங்கு. மீண்டும் நாளை வந்து ஜெகந்நாதனைப் பற்றி சொல்கிறேன்.
முகில் ஏதோ ஓர் நிம்மதி பெற்றது போல, எதிலிருந்தோ சுதந்திரம் அடைந்ததைப் போல உறங்கச் செல்கின்றான். காட்டுப்பேச்சியும் உறங்கச் செல்கின்றாள்.
“சுதந்திரத்தின் நிறம்” புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது.
ஜூன் 16 கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பிறந்த தினம்

சுதந்திரத்தின் நிறம்: கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு
Laura Coppo
B.R.மகாதேவன் (தமிழில்)
தன்னறம் பதிப்பகம்
