நிலம், நிலவுடைமை என்பதை பொருளாதார மூலதனம் என்ற அளவில் மட்டுமே பார்ப்பது தவறான புரிதலையே தரும். வரலாறு வேறுமாதிரியான ஒரு சித்திரத்தை நிலத்திற்கு அளிக்கிறது. வரலாறு நெடுக நிலம் என்பது அதிகாரம், சாதிய வன்மம், ஆணாதிக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. வரலாறு அறியாதவர்களால் இந்தச் சித்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நிலத்தை உடைமையாக் கொண்டவன்தான் இங்கு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறான். அதிகாரம் மூலம் எளிய மக்களின் மீது தனது அடக்குமுறையை ஏவுகிறான். 21ம் நூற்றாண்டிலும் கூட ஒரு பெண் தனக்கான பூர்வீக சொத்துரிமையைப் பேண நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது (பார்க்க). நிலமில்லாத தலித்துகள் தாங்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த இடத்திலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு விரட்டியக்கப்படுகிறார்கள் (பார்க்க).
இவ்வாறு வரலாறு நமக்கு சொல்லும் பாடம் “நிலம் என்பது பொருளாதார அளவில் மட்டும் மதிப்பிடக்கூடியதல்ல. அதற்கு அதிகாரம், சாதிய வன்மம், ஆணாதிக்கம் என பல பரிமாணங்கள் இருக்கின்றன”.
இதனை என் சொந்த கிராமத்தின் வாயிலாகவே என்னால் நிறுவமுடியும். நான் கரூர் மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி எனும் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் மூன்று சாதிப் பிரிவுகள் உள்ளன. விவாதத்திற்காக அவற்றை இவ்வாறு வகைப்படுத்திக் கொள்கிறேன்.
அ) சாதி இந்துக்கள்
ஆ) இடைநிலைச் சாதிகள்
இ) தலித்துகள்
இவற்றில் சாதி இந்துக்கள் பெரும்பாலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இவர்களே எங்கள் ஊரின் நிலச்சுவான்தாரர்கள், பண்ணையக்காரர்கள் ஆவர். இவ்வாறு பெரும்பகுதி நிலம் அவர்கள் வசம் இருப்பதன் மூலம், அவர்கள் எங்கள் ஊரின் அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றிக்கொண்டனர். ஊரில் கட்ட பஞ்சாயத்து செய்து குடும்பங்களை ஒதுக்கி வைப்பது, கோயில் திருவிழாக்களில் முன்னுரிமை அனுபவிப்பது, என நீளும் அவர்களின் ஆதிக்கம் ஏராளம்.
அடுத்து இடைநிலைச் சாதிகள். மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருக்கும் இவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ளனர். இம்மக்கள் தாங்கள் மீது ஒரு ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், தங்களின் ஆதிக்கத்தை தலித்துகள் மீது ஏவிக்கொண்டிருப்பார்கள். திருவிழாவில் தலித்துகள் கலந்துகொள்ள கண்டனம் தெரிவிப்பது, டீ கடை முதலிய பொது இடங்களில் தலித்துகளின் பணிவை எதிர்பார்ப்பது என இவர்கள் அளவிலான ஆதிக்கத்தை செலுத்திவருகிறார்கள்.
அடுத்து உள்ள தலித்துகள் நிலமில்லாத விவசாயக் கூலிகள். வாழ்நாள் முழுவதும் நிலத்தில் பாடுபட்டும் அந்நிலத்தை உடைமையாக்கிக்கொள்ள முடியாதவர்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமான குடியிருப்புகளில் மட்டுமே அவர்களால் வாழ இயலும். அவர்கள் வாழும் அந்த ஒதுக்குப்புறமான இடம் மட்டுமே அவர்களுடையது என்று நினைக்கிறேன். தனித்தொகுதி முறையின் மூலம் உள்ளாட்சித் தேர்தல்களில் தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் ஆனாலும் அவரை ஒரு பொம்மையாய் வைத்து ஆட்டிவைப்பார்கள் சாதி இந்துக்கள். பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியிலில்லாமல் கீழே தான் அமர்ந்திருப்பார்.
இதுவே வலையப்பட்டி எனும் என் கிராமத்தின் சாதிய பிரமீடு. நிலம் எவன் கைகளில் இருக்கிறதோ, அவன் அதிகாரத்தையும் தனதாக்கிக் கொள்கிறான். நிலமில்லாதவன் அதிகாரத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான். நிலவுரிமையற்ற தலித்துகள் நிலச்சுவான்தாரர்களின் நிலங்களில் வேலை செய்யும் விவசாயக் கூலிகள். எனவே அவர்கள் தங்களுக்கு எதிரான ஆதிக்கத்தை எதிர்த்து ஒன்று திரள முடியாதவர்களாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
நான் 2021-ல் என் கிராமத்தில் நிலவும் சூழ்நிலையை விளக்கினேன். இப்பொழுதே இந்த நிலைமை என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அதற்கும் முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க பெரிய உதாரணங்கள் தேவையில்லை.
சமூக நீதியும், பஞ்சமி நிலமும்;
இவ்வாறு சமூகத்தில் ஒரு சாரர் மட்டும் ஏகபோக உரிமையை அனுபவிப்பதையும், அதன் மூலம் பிற சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் தடுக்கும் பொருட்டே சமூக நீதிக்கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.
தலித்துகள், பழங்குடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டையும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தலித்துகள், பழங்குடியின மக்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படும் தனித்தொகுதியையும் இந்த பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு சமூக நீதிக் கொள்கைகளை பின்பற்றாவிடில் நிச்சயமாக அனைத்துத் துறைகளிலும் சாதி இந்துக்கள் ஏகபோக உரிமையை அனுபவிப்பதை தவிர்க்க முடியாது (பார்க்க).
ஆனால் நிலம் என்று வரும்போது இந்த சமூக நீதிக் கொள்கைகள் பொய்த்துப்போவதை அரசு வாயை மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆம். பஞ்சமி நில ஆக்கிரமிப்பு பற்றி தெரிந்தும் அதை மீட்டெடுக்க முயற்சி செய்யாத தமிழக அரசைத்தான் சொல்கிறேன்.
பஞ்சமி நிலம் – ஒரு விளக்கம்; ஆங்கிலத்தில் DC Land (Depressed Classes Land) என்றழைக்கப்படும் பஞ்சமி நிலம் என்பது தலித் மக்களுக்கு, ஆங்கிலேய ஆட்சியின் போது 1892-ல், பிரத்யேகமாக வழங்கப்பட்ட நிலமாகும். இந்நிலத்தை தலித் அல்லாத பிற பிரிவினர் உரிமை கோரவோ, விலைக்கு வாங்கவோ முடியாது.

(1) பஞ்சமி நிலம் வைத்திருக்கும் தலித் அந்நிலத்தை 10 ஆண்டுகளுக்கு யாரிடமும் (தலித் உட்பட) விற்கக்கூடாது,
(2) 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிலத்தை தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான் விற்கவேண்டும்.
(3) அப்படி வேறு (தலித் அல்லாதோர்) எவரேனும் அதை வாங்கியிருந்தால் எந்தவித இழப்பீடும் தராமல் அந்த நிலத்தை அவரிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மூன்று விதிமுறைகளை நீதிபதி கே. சந்துரு “VGP Prem Nagar Minvariya Kudiyirupor Sangam Vs The State Of Tamil Nadu, Dt 07.11.2008, High Court of Madras” தனது தீர்ப்பில் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். வட ஆற்காடு
1931-ல்மாவட்டவாரியாகபஞ்சமி நிலத்தின் அளவு :
மாவட்டம் | வழங்கப்பட்ட நிலத்தின் அளவு (ஏக்கரில்) |
வட ஆற்காடு | 56,560 |
தென் ஆற்காடு | 22,968 |
செங்கல்பட்டு | 5,683 |
கோயம்புத்தூர் | 9,003 |
மதுரை | 6,748 |
நீலகரி | 27 |
இராமநாதபுரம் | 5,703 |
சேலம் | 9,456 |
தஞ்சாவூர் | 980 |
திருநெல்வேலி | 4,386 |
திருச்சிராப்பள்ளி | 6,782 |
ஆதாரம் : அரசாணை எண் 3218 எல். 21.12. 1931.பொதுப்பணி மற்றும் தொழிலாளர் துறை.
மூலம் : “தலித்துகளும் நிலமும். பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு”
ஆசிரியர் : பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (வி.சி.க).
கிட்டத்தட்ட கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தரப்படும் இட ஒதுக்கீடுகளுக்கு நிகரானது பஞ்சமி நில ஒதுக்கீடு. ஆனால் இவ்வாறு பிரத்யேகமாக வழங்கப்பட்ட நிலங்களில் பெரும்பகுதி இப்போது அவர்களிடம் இல்லை. தலித் அல்லாதோர் ஆக்கிரமித்துக்கொண்டனர்.
‘பஞ்சமி நிலம்’ தலித்துகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னணி: 1892- ல் அந்நாளைய செங்கல்பட்டு கலெக்டர் ஜே.எச்.எ.திரமென்ஹீர் ஆங்கிலேய அரசிடம் பறையர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு நிலவுரிமை மறுக்கப்படுவது பற்றியும் ஒரு விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

அக்கால செங்கல்பட்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு மக்கள் பறையர்கள். ஆனால் 2 விழுக்காடு நிலம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. இந்த அவலத்தையும் இதற்கான சமூக பின்னணியையும் “செங்கல்பட்டு பறையரின மக்கள் பற்றிய குறிப்புகள்” எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் விரிவாகக் கூறிப்பிடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்குரிய பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்திருக்கிறார்.
இந்த ஆய்வறிக்கையைப் புரிந்துகொள்ள
1890-களில் நிலவிய நிலவுடைமை முறைகள் பற்றிய புரிதல் இன்றியமையாத ஒன்று.
அ) மிராசு முறை
ஆ) ரயத்துவாரி முறை
மிராசு முறை என்பது பிரிட்டிஷ் வருகைக்கு முன்னர் மெட்ராஸ் மாகாணத்தில், குறிப்பாக தஞ்சை பகுதிகளில் இருந்த நிலவுடைமை முறையாகும். கிராமங்களில் உள்ள நிலங்கள் மிராசுதார் எனப்படும்நிலச்சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. பிரிட்டிஷ் வருகைக்குப் பின்னரும் இவர்கள் கணிசமான முன்னுரிமை அனுபவித்து வந்துள்ளனர்.
ரயத்துவாரி முறையின் கீழ் பட்டாதாரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இத்தகைய கிராமங்கள் J.H.A. திரமென்ஹிரின் குறிப்புகளில் மிராசு அல்லாத கிராமங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மிராசுதாரர்கள் மற்றும் பட்டாதாரர்களின் சாதிய பின்புலத்தைப் பார்த்தோமானால் என் கிராமத்தில் நான் குறிப்பிட்ட அந்த பிரமீடு சித்திரமே எஞ்சும்.
“இவ்வமைப்பில் முதலிடம் பெறுவோர் பொதுவாகப் பிராமணர் அல்லது வெள்ளாளர்கள் ஆவார்கள். இவர்களே எல்லா நிலங்களையும் அல்லது மிக நல்ல நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள். அதற்கடுத்தபடியாக மிராசுதாரரல்லாத பட்டாதாரர்கள், அதற்கடுத்தாற்போல் துணை குத்தகைதாரர்கள். இவ்விரு வகையினரும் பிராமணர், வெள்ளாளரை விடத் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பின் கடைசிக் கோடியிலிருப்பலர்கள் பறையர்கள்; இவர்களில் மிகச் சிலரே துணைக் குத்தகைக்காரர்கள், பெரும்பாலானோர் வேளாண்மை கூலித் தொழிலாளர்களே ஆவர்”.
இவை 1890-களில் திரமென்ஹிர் அளித்த குறிப்புகள். இவற்றிற்கும் நான் என் கிராமத்தைப் பற்றி குறிப்பிட்டவற்றிக்கும், 130 வருட கால இடைவெளியைத் தவிர, எந்த வித்தியாசமும் இல்லை.
நிலவுடைமை முறையும், பறையனை நிலத்திலிருந்து அந்நியப்படுத்துதலும்;
- மிராசு முறை தொடரும் கிராமங்களில் தரிசு நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருப்பின், மிராசுதாரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. தரிசு நிலம் கோரி அரசிடம் யாரேனும் விண்ணப்பித்திருப்பின், மிராசிதாரர் அந்நிலத்தின் மீதான உரிமையை கோராமல் இருந்தாலன்றி, நிலம் விண்ணப்பித்தவருக்கு கிடைக்காது. தங்களுக்கு பயன்படாத நிலத்தையும் மிராசுதாரர்கள் தங்கள் ஏகபோக உரிமையைப் பயன்படுத்தி ஆக்கிரமித்துக்கொண்டனர். இவ்வாறு நிலமானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைப்பதே அக்காலத்தில் குதிரைக்கொம்பாய் இருந்திருக்கிறது. அப்படியிருக்க, பறையர்கள் நிலத்தைப் பற்றி கனவில் கூட நினைக்கமுடியாத நிலை இருந்ததை நாம் திரமென்ஹிரின் குறிப்புகள் வழியே அறிய முடிகிறது.
- இதுமட்டுமல்லாமல் பறையர்கள் குடியிருக்கும் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளின் நிலங்களையும் மிராசிதாரர்கள் சொந்தம் கொண்டாடினர். இதன்மூலம் பறையர்களில் ஏவரேனும் வேலைக்கு வர மறுத்தால், அவமரியாதைமாக நடந்துகொண்டால் (இங்கு அவமரியாதை என்பது ஒரு தலித் செருப்பு அணிவது, தலைப்பாகை அணிவது…) குடியிருப்புகளிலிருந்து தலித்துகள் அகற்றப்படுவார்கள். சேரிகளில் பள்ளிகள் தொடங்குவதற்கு சில கிறிஸ்டியன் மிஷனரிகள் முன்வந்தாலும் மிராசுதாரராகள் தங்களின் நிலவுரிமையைக் காரணம் காட்டி பள்ளிகள் தொடங்க அனுமதிக்கவில்லை.
- மேலும் இந்த விவசாயக் கூலிகள் என்பதில் இரண்டு வகைகள் உள்ளனர். ஒன்று சுயாதீன கூலி. மற்றொன்று கொத்தடிமை முறை. இரண்டாவது முறை மிகவும் கொடூரமானது. இது அமெரிக்காவில் நிலவிய அடிமை முறைக்கு நிகரானது. 10/-, 7/-, 15/- கடனை அடைப்பதற்கு தலைமுறை தலைமுறையாய் பறையர்கள் மிராசுதாரர்களிடம் கொத்தடிமைகளாய் இருந்திருக்கின்றனர்.
இவ்வாறு தான் பறையர்கள் நிலவுரிமை அனுபவிப்பதை உயர் சாதி இந்துக்கள் திட்டமிட்டு தடுத்திருக்கின்றனர்.
அடுத்து ரயத்துவாரி முறையின் கீழ் பறையர்களின் நிலை பற்றி பார்ப்போம். ரயத்துவாரி முறையில் நிலமானது பட்டாதாரர்களுக்கே உரித்தானது. இங்கு பட்டாதாரர்களின் கீழ் குத்தகைதாரராக அல்லது உப குத்தகைதாரராக பறையர்கள் வேலை செய்தனர். குத்தகை எடுத்து அந்த நிலத்தில் ஒரு பறையன் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டாலும் அந்நிலத்தை அவர் ‘சொத்து’ என உரிமை கொண்டாட முடியாது. மிராசுமுறை அளவிற்கு இங்கு நிலைமை மோசம் இல்லையெனினும், நிலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக, வஞ்சிக்கப்பட்டவர்களாகவே அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர்.
நிலவுரிமையில்லாத பறையர்களின் நிலை:
இத்தகைய சமத்துவமற்ற, சாதிய வன்மம் புரையோடிய நிலவுடைமைமுறையில் பறையர்களின் நிலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மோசமானதாய் இருந்துள்ளது. அவற்றை திரமென்ஹீரின் பல இடங்களில் வரும் குறிப்புகளும், அக்காலத்தைய ‘தி இந்து’ இதழின் குறிப்புகளும் விரிவாகவே விளக்குகின்றன.
“இங்கும் ஒரு பறையன் இருக்கிறான். முன் அனுமதியின்றியும் எவ்விதத் தடையுமின்றியும் ஒன்பது ஆண்டுகள் இவன் நிலத்தைப் பயிரிட்டுள்ளான். ஒழுங்காக வரியெல்லாம் கட்டி இருப்பதற்குரிய சான்றுகளையும் வைத்துள்ளான். இந்நிலையில் தைரியமாகப் பட்டா கோரி மனு செய்கிறான். மிராசுதாரர் ஒருவர் இதை எதிர்த்து, நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார். ஆனால் கடைசியாய் அந்த பறையனுக்கே வேளாண்மை செய்ய அந்த நிலத்தைக் கொடுக்கிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பறையன் பட்டா கேட்டு மனு அனுப்புகிறான். இந்தத் தருணத்தில் இந்த நிலத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மிராசுதாரர் பட்டா கொடுக்கப்படுவதை எதிர்க்கிறார். வழக்கு நிலுவையிலிருக்கும் போதே தடை மனு தாக்கல் செய்த மிராசுதாரரின் கால்நடைகள் அறுவடைக்குக் காத்து நிற்கிற பயிர்களை மேய்ந்து அழித்திட அனுப்பப்படுகின்றன. நீதி மன்றத்தில் கடுமையாக போராடி தனக்கு ஏற்பட்ட தானிய நஷ்டத்துக்குப் பறையன் இழப்பீடு பெறுகிறான்; ஆனால், மிராசுதாரருக்குப் பட்டா வழங்கப்படுகிறது. 15 ஆண்டுக் காலம் வேளாண்மை செய்ததற்குப் பிறகு பறையன் அந்நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். இதுதான் அநீதியான ஒடுக்குமுறை (Lawless oppression).”
– ஹிந்து நாளிதழ் (1/10/1891)
இவ்வாறு போராடி தனக்குத் தேவையான குறைந்தபட்ச உரிமையை நிலைநாட்டிக் கொள்பவர்கள் மிகவும் சொற்பமே. போதிய கல்வியறிவும், பண வலிமையும் இல்லாத பெரும்பாலான பறையர்களுக்கு நீதி என்பது எட்டாக் கனியே.
– ஹிந்து நாளிதழ் (3/6/1891)
“1888-ல் திரு.லீ வார்னர் எனும் மாவட்ட ஆட்சியர் ‘தொழிலாளர்கள் (பறையர்கள்) மிகக் கொடிதான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்; அக்குடிசைகளில் திரும்புவதற்குக் கூட இடம் இராது. தங்கள் எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் தவறினால் அந்த இடத்திலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு விடுவார்கள்’ என்றும் தொடர்ந்து 1889-ல் ‘இவர்களில் பெரும்பகுதியினர் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். உடுத்துவதற்குச் சரியான உடையில்லை. குடியிருப்பு வசதியோ மிக மோசமாக உள்ளது. வாழ்வதற்கும் தேவையான உணவாக மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் உணவின் அளவுக்கு மிகக் குறைவான சத்துக் குறைந்த உணவை உட்கொண்டே மனநிறைவடைந்திட நிர்பந்திக்கப்படுகிறார்கள்’” என்று குறிப்பிடுவதாய் திரமென்ஹூர் தன் குறிப்புகளில் மேற்கோள் காட்டுகிறார்.
இத்தகைய பஞ்சமும், பட்டினியும், இழி நிலையும், நிலவுரிமை மறுப்பும் ஆங்கிலேய பொருளாதாரச் சுரண்டல்களால் வந்தது என்று நினைப்பது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே.
தரிசு நிலங்களை தங்கள் முன்னுரிமையைப் பயன்படுத்தி மிராசுதாரர்கள் அபகரித்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவ்வாறு அபகரித்துக் கொண்ட நிலங்களில் வேளாண்மை செய்யாமலும், அவ்வாறு செய்தால் பணப்பயிர் சாகுபடியும், நிலவுடைமையாளர் தொலைவில் வாழும் முறையும் (Absentee landlordism) தொடர காரணமாயிருந்தனர்.
இதன் மூலம் மக்கள் பெருக்கத்திற்கு நிகராக உணவுதானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. இவ்வாறு இந்தியாவில் உண்டான பஞ்சம், பட்டினிக்கு ஆங்கிலேய பொருளாதார சுரண்டலுக்கு அப்பால் சாதிய வன்மமும் ஒரு முக்கிய காரணமாகும். இத்தகைய வரலாற்றுச் சித்திரத்தைக் கருத்தில் கொண்டால் J.H.A. திரமென்ஹீரின் குறிப்புகளின் முக்கியத்துவமும், இதன் விளைவாக இயற்றப்பட்ட பஞ்சமி நில உரிமைச் சட்டத்தின் இன்றியமையாத தேவையும் நமக்குப் புலப்படும்.

J.H.A. திரமென்ஹீரின் “Notes on the Pariahs of Chengalpattu” எனும் அறிக்கையை சமீபத்தில் தமிழில் ஆ. சுந்தரம் மொழிபெயர்க்க, வெ. அலெக்ஸ் தொகுக்க, நீலம் பதிப்பகம் “பஞ்சமி நில உரிமை” எனும் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இது பஞ்சமி நிலம் பற்றிய வரலாற்றுப் பின்னணியை அளிக்கிறது.
பஞ்சமி நில மீட்பு – ஒரு பார்வை
சுதந்திரத்திற்குப் பின் உயர்சாதி இந்துக்கள் சுதந்திரமாக தலித்துகளின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். கல்வியறிவு, பண பலம், அதிகார பலம் பொருந்திய ஒடுக்கும் சாதியினர், பஞ்சமி நிலங்களை தலித்துகளிடமிருந்து அவர்களின் பொருளாதார நிலையை, வறுமையைப் பயன்படுத்தியோ அல்லது வன்முறையைக் கையாண்டோ அல்லது சமூக ஆதிக்கத்தின் மூலமோ அபகரித்துக் கொண்டனர். இத்தகைய ஆக்கிரமிப்பு செல்லாது எனத் தெரிந்தும் சட்டத்திற்குப் புறம்பாக இப்படி ஒரு அநீதைச் செய்தனர். சட்டம் பற்றியும் தங்கள் உரிமை பற்றியும் அறியாத தலித்துகள் நிலத்துடன் தொடர்பற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
பஞ்சமி நிலம் மீட்பு பற்றிய பொது விவாதங்கள், சிறு சிறு அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. 1994- ல் செங்கல்பட்டு காரணையில் அப்படி நடந்த ஒரு போராட்டம் மிகவும் முக்கியமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். 1994, அக்டோபர் 4ம் தேதி அப்போதைய செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு அருகிலுள்ள காரணையில் பிற சமூகத்தார் ஆக்கிரமித்திருந்த 633 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கும் பொருட்டு மக்கள் போராட்டம் எழுந்தது. அதில் 4.5 ஏக்கர் நிலத்தை மீட்டு, டாக்டர். அம்பேத்கர் சிலையை நிறுவி தங்கள் உரிமையை நிலைநாட்டினார் தலித் மக்கள்.
இதற்கு எதிர்வினையாற்றிய ஒடுக்கும் சாதியினர் காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் தலித்துகளையும், சிலையையும் அகற்றினர். இதன் காரணமாக போராட்டங்கள் வெடித்தன. டாக்டர். அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவ கோரியும், பஞ்சமி நில மீட்பை வலியுறுத்தியும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். தங்களது உரிமைக்காக குரல் கொடுக்கும் தலித்துகளின் கூச்சலை, அமைதிக்கு குந்தகம் விளைப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகவும் கருதிய அரசு – அதிகார மட்டம், 10 அக்டோபர், 1994-ல் துப்பாக்கி சூடு நடத்தி போரட்டத்திற்கு முடிவு கட்டியது. இத்துப்பாக்கிச்சூட்டில் ஜான் தாமஸ் என்பவரும், ஏழுமலை என்பவரும் உயிர்நீத்தனர்.
அதன் பிறகு அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் பெரும்பகுதி பஞ்சமி நிலம் பிறர் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்தது. அந்நிலங்கள் நிபந்தனைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை இக்குழு உறுதி செய்தது.
அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி எம். மருதமுத்து தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இவ்வாறு அவ்வப்போது அரசியல் ஆதாயத்திற்காகவும், போராட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் கண் துடைப்பிற்காகவும், குழுக்களையும், கமிஷன்களையும் அரசு அமைத்து வருகிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. இதைப் பற்றி மிகவும் அவநம்பிக்கையுடன் நீதிபதி. கே. சந்துரு அவர்கள் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் (காணொளியைக் காண) குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சமி நில மீட்பு – தீர்வு;
பஞ்சமி நிலத்தை தலித் அல்லாதோரிடமிருந்து மீட்டேடுத்து தலித்துகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரே தீர்வு அரசு ஆணை பிறப்பித்து, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு துரிதமாக செயல்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்பதேயாகும். ஆம். தலித் அல்லாதோர் அந்நிலத்தை வாங்கினால் அது செல்லாது. எவ்வித இழப்பீடும் (compensation) தராமல் அவற்றை எடுத்துக்கொள்ள அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. வாக்கு வங்கி அடிப்படையில் இயங்காத, சமூக நீதியைப் பேண நினைக்கும் எந்த ஒரு அரசுக்கும் இது ஒப்பீட்டளவில் எளிமையான காரியமே. இதைத்தான் ரவிக்குமார் MP அவர்களும், நீதிபதி கே. சந்துரு அவர்களும் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் தங்கள் உரிமையைக் கோர தக்க சான்றுகள் இல்லை. எனவே அரசு நினைத்தாலொழிய யாராலும் பஞ்சமி நிலங்களை மீட்க முடியாது.