அன்று மதியம் என் நண்பனின் [குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)] அண்ணன் [லட்சுமணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)] அவர்களுடைய வீட்டிலிருந்து என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். இந்த அவலத்தை செய்துவிட்டதோடு மட்டுமில்லாமல், குமாரைப் பார்த்து ஏன்டா நாயே, இந்த பரதேசி எல்லாம் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வருவியா என்று மிக கோபத்தோடு கத்தினான். லட்சுமணன் ஏவிய அந்த வாா்த்தை அம்பு என்னை சுக்குநூறாக்கியது. ஏன்டா வீட்டுக்குள்ள வந்த என்று குமார் அம்பின் நானை இழுத்து விட்டான். மேலும் நொறுங்கியது என் இதயம்.
அந்த நிகழ்வுக்குப் பின் என் கடந்தகால நினைவுகள் என்னுள் ஓடத்தொடங்கியது. நான் படித்தது தமிழகத்தின் வடபகுதியில் உள்ள கிராமம். வறுமையின் காரணமாக என் பெற்றோா் இரண்டு வருடங்கள் வெளியூா் வேலைக்கு சென்று விட்டாா்கள். அப்போது என் வயது ஆறு. நான் என் தாத்தா வீட்டிலிருந்து தான் படித்தேன். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்த ஏற்ற தாழ்வும் இல்லாத வாழ்க்கை. மிக நன்றாக இருந்தது. வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆறாம் வகுப்புக்கு உயா்நிலைப்பள்ளியில் சோ்ந்தேன். சராசாரியாக படிக்கும் மாணவன். ஊரில் பலதரப்பட்ட சாதிமக்கள் இருக்கிறாா்கள் என்று உயர்நிலைப்பள்ளியில் தான் தெரிந்தது. பள்ளியில் எனக்கும் என்னை போன்ற சில மாணவா்களுக்கும் துணி, நோட் புக் மற்றும் இதர சலுகைகள் கிடைத்தது.
அதை சந்தோஷமாக வாங்கி வரும்போது என்னுடைய நண்பர்கள் ஏன்டா உங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்குறாங்க எங்களுக்கு கொடுக்கறது இல்ல என்று கோபித்துக் கொண்டார்கள். எனக்கும் எந்த பதிலும் தெரியவில்லை. அதைப்பற்றி புரிதலும் அப்போது இல்லை, யோசிக்கும் பக்குவமும் இல்லை. நாட்கள் சென்றது. எங்கள் ஊரில் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் வரும், என் தாத்தாவுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் வறண்ட நிலம் மற்றும் ஒரு கிணறு இருந்தது. வீட்டைச் சுற்றி 200 மீட்டர் தள்ளி ஒவ்வொரு வீடும் இருக்கும். வறட்சிக் காலத்தில் தண்ணீர் வேண்டுமென்றால் பக்கத்து வீடுகளில் யார் வீட்டில் போர்வெல் போட்டு இருக்காங்களோ அவங்க வீட்ல தான் போய் தண்ணீர் பிடிக்கணும். அதிலும், நாங்கள் பிடிக்க வேண்டுமென்றால் நேரடியாக வரும் குழாயிலிருந்து தண்ணீர் பிடிக்கக் கூடாது. அவர்கள் ஆடு மாடுகள் குடிக்கும் தொட்டிலுக்கு தண்ணீரை நிரப்புவார்கள். அந்தத் தண்ணீரை தான் நாங்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மற்றும் எங்கள் ஆடு மாடுகளுக்கும் உபயோகித்தோம். அப்பொழுது என் பாட்டியிடம், ஏன் பாட்டி, நாம் நேரடியாக தண்ணீர் பிடிக்கலாம் இல்ல, என்று கேட்டேன். அவங்க குடியானவர்கள். நாம அவங்கள தொடக்கூடாது, அவங்க வீட்டுக்குள்ள போகக்கூடாது. அவங்க என்ன சொல்றாங்களோ அத கேட்டுக்கணும் இல்லன்னா நமக்கு தண்ணி தர மாட்டாங்க என்று சாதாரணமாக என் பாட்டி என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்கள் என் தாத்தா பாட்டியை அவர்களைவிட சிறிய வயதில் இருப்பவர்களைக் கூட பெயர் சொல்லி அழைப்பார்கள். சிறு வயது என்பது 10 வயது பையன். நான் சாதாரணமாக இதைக் கடந்து கொண்டிருந்தேன். நாம இப்படிதான் இருக்கணும் போல என்றும் அதனால் நமக்கு நோட்புக் எல்லாம் கொடுக்கிறார்கள் என்றும் அரைகுறை அறிவோடு சுற்றினேன். மேலும் ஒரு சம்பவம் என்னை யோசிக்க வைத்தது. நானும், பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர்களும் ஒரே பள்ளியில் தான் படித்து வந்தோம், பள்ளிக்கு ஒன்றாக தான் சென்றோம். மேலும், விடுமுறை நாட்களில் அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். விளையாடிவிட்டு ஓய்வெடுப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு போவேன். பெரும்பாலும் என் நண்பர்கள் மேல் வகுப்பை சார்ந்தவர்கள் தான். முழுப் பொழுதும் அவர்களோடு தான் இருப்பேன். விளையாடி முடித்து விட்டு அவர்கள் வீட்டிற்கு சென்று தண்ணீர் குடிப்பார்கள். என் வயது ஒத்த நண்பன் என்னை அவன் வீட்டிற்கு அழைக்க மாட்டான். நான் வாசப்படி வெளியே நிற்க வேண்டும். அவன் தண்ணீரை சொம்பில் கொண்டு வந்து கையில் ஊத்துவான் அதை நான் குடிப்பேன். முதல் தடவை தெரியாமல் சொம்பை தொட்டு விட்டேன். அடுத்து அந்த சொம்பை மாட்டுக் கொட்டகையில் கோமியம் நிரம்பிக் கிடக்கப் பார்த்தேன். நான் என் நண்பனிடம் அதைப்பற்றி கேட்கவும் இல்லை, பேசவும் இல்லை, இரண்டு மௌனங்களும் சாதாரணமாக கடந்து சென்றது. இது போன்று இன்னும் சில நிராகரிப்புகளும் படிப்படியாக நடந்துகொண்டிருந்தது. நான் பத்தாம் வகுப்பு வந்து விட்டேன். அன்று ஒரு நாள் மதியம் சத்துணவு முடித்து விட்டு வகுப்பறையில் காத்திருந்தேன், என் நண்பன் குமார், டேய் சும்மா தானே இருக்க, வாடா வீட்டுக்கு போயிட்டு வரணும் என்று அழைத்தான். அப்போது என்னிடம் மிதிவண்டி இருந்தது. நானும் குமாரும் அவன் வீட்டிற்கு சென்றோம். குமார் எந்த வருணாசிரமத்தின் கீழ் வருவான் என்று எனக்குத் தெரியாது. அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. தெரியாமல் எதேச்சையாக அவன் வீட்டிற்குள் நுழைந்தேன். திடீரென்று என் கழுத்தின் மீது அந்த இறுக்கமான கைகள் வெளியே தள்ளிக்கொண்டு வந்து நடுரோட்டில் கீழே தள்ளியது. மிக வஞ்சகத்தோடு திட்டினான். இதில் என்ன கொடுமை என்றால் இலட்சுமணன் அதே உயர்நிலைப் பள்ளியில் தான் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அந்த நிகழ்வு என்னை பெரிதும் பாதித்தது. கண்ணீரோடும் முட்டியில் ரத்தத்தோடும் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு பள்ளி வந்து சேர்ந்தேன். சைக்கிளின் பின்புறம் அமர்ந்து குமார் ஏன்டா அழுகிற என்று கேட்கல. ஏன்டா வீட்டுக்குள்ள வந்த என்று கேட்டான். அந்த நாள் இரவு, நடந்த நிகழ்வை என் பாட்டியிடம் சொன்னேன். பாட்டி, ஏன் சாமி அவங்க வீட்டுக்குள்ள போன. நான் தான் உன்கிட்ட பல முறை சொல்லி இருக்கேன் என்று என் மீது கோபம் கொண்டார்கள். அன்று முழுவதும் என்னிடம் பல கேள்விகள் தோன்றிக்கொண்டே இருந்தது. கேள்வியை மட்டும் வைத்துக்கொண்டு பத்தாம் வகுப்பு முடித்தேன்.
11, 12-ஆம் வகுப்பு பக்கத்து மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு கொஞ்சம் விவரம் அறிந்த நண்பர்கள். கிராமத்திலிருந்து சென்றதால் முழுமையாக அந்த சூழ்நிலையை என்னால் ஈடுகொடுத்து படிக்க முடியவில்லை. நண்பர்களோடு அதிகம் பழகினேன், பழகிய பின்பு தான் தெரிந்தது அங்கும் பிரிவினைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அன்று சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தோம். என்ன விளையாட்டு என்று நினைவில் இல்லை. திடீரென்று எதிர்பாராத குரலில் என் நண்பன் (கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)), இந்த எஸ்.சி (ஒரு கெட்ட வார்த்தை சேர்த்து) இப்படித்தான், என்று திட்டினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னை மீறி அழுகை, மிகவும் அவமானமான அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அழுகை மட்டுமே வந்தது. ஒரு சிலர் ஆறுதல் கூறினார்கள். ஒரு சிலர் வஞ்சகத்தோடு சிரித்தார்கள். அதிலிருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் ஆகின.
அப்பொழுது எனக்கு அந்த பள்ளியில் இருந்த ஆசிரியர் அன்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், என் மீது அக்கறை கொண்ட சிலரில் அவரும் ஒருவராக இருந்தார். அவரிடம் இந்த பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் அவர் எனக்கு அம்பேத்கர், காந்தி பெரியார் போன்றவர்களைப் பற்றியும் அவர்கள் சமூகத்தில் செய்த சீர்திருத்தங்கள் பற்றியும் விரிவாகச் சொன்னார். அதுவரை நான் அவர்களை மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படித்தேன். புரிதல்கள் இல்லை. அவர் விரிவாகப் பேசிவிட்டு சில புத்தகங்களை எனக்கு கொடுத்தார். அப்போது வாசிப்பு மீது பெரிய அக்கறை இல்லை. ஒரு சில புத்தகங்களை படிக்கும் பொழுது, அன்று இரவு அந்த புத்தகங்களின் மூலம், நான் குமார் வீட்டில் இருந்து வந்த இரவில் தோன்றிய கேள்விகளுக்கும் மற்றும் எனக்குள் உருவான பல கேள்விகளுக்கும் விடை கிடைக்க ஆரம்பித்தது.
1921- ல் வெளியான நவஜீவன் இதழியல் சாதி முறைக்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டதை அம்பேத்கர் மொழிபெயர்த்திருக்கிறார். காந்தி மக்களை ஏமாற்றி விட்டார் என்று கூறும் அம்பேத்கர் ஆங்கிலத்திலும், குஜராத்திலும் அவர் எழுதியவற்றை ஒப்பிட்டு வாசிக்கும்படி அறிவுறுத்துகிறார். சாதி முறையை அழிக்க முற்படுவோரின் கருத்தை நான் எதிர்க்கிறேன் என்று ஆரம்ப காலத்தில் காந்தி கூறியிருக்கிறார். 4000 சாதிகளாக இல்லாமல் நான்கு வருணங்களாக இணைந்து விட வேண்டும் என்றார் காந்தி. இந்த வருணாசிரமம் தான் சாதி முறையின் பிறப்பிடம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழித்தல்’ (Annihilation of caste) என்ற புத்தகத்தில் அவர் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தென்னிந்தியாவின் சாதி எதிர்ப்புப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று போற்றப்படும் அயோத்திதாசர் 1870 -களிலே மக்களை ஒன்றிணைத்து சாதிப் பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மேலும், பல மாற்றங்களை தன்னுடைய அயராத உழைப்பில் தீண்டாமை போன்ற கொடுமைகளைக்கு எதிராக வெளிக்கொண்டு வந்தார். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய ‘வெள்ளையானை ’புத்தகத்தில் முதல் தலித்
போராட்டம் என்ற வார்த்தையை அவர் எழுதியிருந்தார். அதற்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாசர் என்று கூறலாம்.
சாதிய ஒடுக்குமுறை இன்று ஆரம்பித்தது இல்லை, அது பல காலமாக நிகழும் ஒரு அவலம். அதை எத்தனை சீர்திருத்தவாதிகள் வந்தாலும் ஒழிக்க முடியவில்லை, இன்றும் பல அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் படித்த இளைஞர்கள் சாதியை எவ்வாறு கையாளுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமானவைகளில் ஒன்று.
இதில் கூறியுள்ள சில மேற்கோள்கள் மற்றும் ஒரு சில புத்தகங்கள், தலித்கள் மீதான அடக்குமுறை, தீண்டாமை, பாகுபாடு வாழ்வியல் போராட்டம், அடிமைத்தனம் மற்றும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் போன்றவற்றை ஆராயும் நம்பிக்கையும், தெளிவும் என்னுள் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த ஆறு கடலாக மாறும் என்ற நம்பிக்கை விதையை ‘Egalitarians’ என்ற அமைப்பு ஏற்படுத்தி உள்ளது. இன்றைய படித்த இளைஞர்கள் சாதிய பாகுபாட்டை மிக கவனமாக கையாள வேண்டும். சுய சிந்தனை, பகுத்தறிவு, தெளிவு போன்றவற்றோடு இதை அணுக வேண்டும். தலித், ஆதிவாசி, திருநங்கைகள் மேம்பாட்டிற்காகவும், மற்றும் இவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை வழங்கும் பொருட்டும் பெருந்தீச்சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும் இந்த அமைப்பில் ஒரு தீக்குச்சியாக நான் மற்றும் நாம் இருப்பது மிகவும் மகிழ்ச்சி, நன்றி.