1.
அட இது என்ன இப்படி ஓர் தூய்மையான அமைதியான இடம் இந்த பரபரப்பான நகரில் இருக்கிறதா? ஒழுங்குபடுத்தபட்ட அட்டவணையிடப்பட்ட ஒரு நிருவாகத்தின் கீழ் இயங்கும் எந்த ஒரு இடமும் ஆலயம் போல் தூய்மையாக தான் தோன்றும். அப்படி இருக்க, ஓர் ஆலய நிர்வாகிகளை உருவாக்கும் இடம் இப்படி தானே இருந்தாக வேண்டும். ஆம், அது ஒரு இறையியல் கல்லூரி. பாதிரியார் சேவை பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை இங்கே பார்க்க முடியும். அனைவரும் தன்னார்வத்தோடு வந்திருக்க வாய்ப்பு இல்லை.பெற்றோகளின் வேண்டுதலின் பெயரில் வந்தவர்களும் உண்டு. மொத்தம் பதினான்கு ஆண்டுகள். இது முற்றிலும் துறவறம் சார்ந்து இறை நம்பிக்கையை போதிக்க பயிலும் கல்வி. அதற்கான தகுதி உள்ளர்வர்களாய் தங்களை மாற்றிக் கொள்ளவே நான்கு பயிற்சிகளாக இந்த பதினான்கு ஆண்டுகள். இதில் ஆங்கிலம், விவிலியம், தத்துவம், துறவறம் என பல பாடங்களும் தேர்வுகளும் இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வானவர் அடுத்த நிலைக்கு தேர்வாவார். இதில் எந்த நிலையிலும் மாணவர் வெளியேறலாம் தண்டனையாகவோ அல்லது தங்கள் சுயவிருப்பத்தின் பெயரிலோ. கட்டாயத்தின் பெயரில் யாரும் கற்பிக்க படமாட்டார்.
அது ஓர் இளகிய இளஞ்சிவப்பு மாலை.அந்த கல்லூரி மரங்களை குத்தகை கொண்ட பறவைகளும் வீடு திரும்பி கொண்டு இருக்கும் வேளை. வீடு சேர்ந்த பறவைகள் தங்கள் அண்டை வீட்டாருடன் அன்றைய பயண குறிப்புகளை பட்டியலிட்டு கொண்டு இருக்கும் ஓசை. தன் மன பாரத்தோடு பறவைகளின் கூச்சல்களை கூர்ந்து கேட்டவாறு செபாஸ்டியன் அவன் அறையில் அமர்ந்திருந்தான். இதுவும் ஒரு வகையில் இறையியல் தானே. செபாஸ்டியன் அறை கதவு தட்டப்படுகிறது.
‘ ஃபாதர் உன்ன ரூமுக்கு வர சொன்னார்’.
‘வருகிறேன் ‘என்று எழுந்து தன் கையில் இருந்த ஜெபமாலையை மேசையில் வைத்து விட்டு அறையில் இருந்து நகர்ந்தான்.
‘ஃபாதர் மே ஐ கம் இன் ‘
அவர் நிமிர்ந்து ‘ யெஸ் மை பாய் கெட் இன்’ என்றார்.
இருவரும் சில நிமிடங்கள் அமைதியாய் இருக்க.,’செபாஸ்டியன் நான் சொன்னது பத்தி என்ன யோசிச்ச?’
‘நா ரொம்ப குழப்பமா இருக்கேன்.செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேக்க என் தன்மானம் எனக்கு எடம் குடுக்கல. கடவுளும் அத தான் சொல்றாரு. ஐ எம் சாரி ஃபாதர்’ என்று கூறி வெளியேறினான் செபாஸ்டியன்.
சில நொடிகளில் அலுவலக உதவியாளர் ஒருவர் வந்து ‘ஃபாதர் பிஷப் ஆபீஸ் ல இருந்து மெயில் வந்திற்க்கு.போப் கு நியூஸ் போய்டுச்சாம். விளக்கமா ஒரு ரிப்ளை குடுக்க சொல்லி பிரஷர் பண்றாங்க. என்ன பண்ணலாம் ஃபாதர்’.
அவர் உடனே ‘யூ கோ டு தி ஆபீஸ், ஐ வில் கம்’ என்று எழுந்து அவர் பின்னால் வைக்கப்பட்டு இருந்த இயேசுவின் திருஇதய படத்தை பார்த்து கொண்டு நின்றார்.
2.
கடந்த மாதம் செப்டம்பரில் எப்போதும் போல பக்கத்து சிஸ்டர்ஸ் கான்வென்ட்டில் நடைபெறும் மாலை திருப்பலிக்கு ஃபாதர் உடன் செபாஸ்டியன், ஆன்டனி, சார்லஸ் மற்றும் சேவியர் எல்லோரும் சென்றார்கள். அக்கல்லூரி மாணவர்களே ஆயினும் அருகில் இருக்கும் சகோதரிகள் தங்கியுள்ள இடத்திற்கு அனுமதி இல்லை. திருப்பலி ஆற்ற செல்லும் வேளை தவிர.
செபாஸ்டியன் இசை ஆர்வம் மிக்க இளைஞன். அவன் வாழ்வில் இறைவனுக்கும் இசைக்கும் மட்டுமே இடம் உண்டு. இசையும் அவனை அப்படியே எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டது. யார் அறிவார், அதுவே அவன் இசை காதலனாக காரணமாய் இருந்திருக்கலாம். இசை, பக்தி என்று மட்டும் அல்லாமல் ஆங்கில மொழி, கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் என அங்கு அவன் அனைத்து பரிமாணங்களையும் அழகாகவே எதிர்கொண்டான். அனைத்திலும் முன்னிலை வகித்து தலைமை பாதிரியாரின் அன்பை பரிசாய் பெற்றவன். அதுவே அவனை அவர் திருப்பலிக்கு தயங்காமல் அழைத்து செல்ல காரணம். மற்ற மூவர் திருப்பலிக்கு உதவி செய்ய.
அன்றும் எப்பொழுதும் போல செபாஸ்டியனை அழைத்து, ‘ஓகே மை பாய் நீங்க சாப்டுட்டு வாங்க, நா முன்னால போறேன்’ என்று சொல்லி சென்றார். வாரம் ஒரு முறை அங்கு செல்லும் போது அவர்களுக்கும் இரவு உணவை தயாரித்து வைப்பது வழக்கம். அதை அறிந்தே இவ்வாறு கூறினார். வழக்கமாக அவரும் அங்கேயே உணவு அருந்தி செல்வார். அன்று ஏதோ பணி நிமித்தமாக அவர் செல்ல வேண்டி இருந்தது. செபாஸ்டியன் அவரை வாசல் வரை வந்து வழி அனுப்ப, ஃபாதர் அவனை பார்த்து, ‘போடா போயி சாப்டு. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நான் அங்க போயி சாப்டுகிறேன்’ என்றார். ‘நானும் வரேன் ஃபாதர்’ என்றவனை ‘இங்க பசங்கள நீ இல்லாம விட்டுட்டு வர முடியாது. நீ இருந்து சாப்டுட்டு பசங்கள கூப்டு வந்துரு. சீக்கிரமா வாங்க. உங்க ஹாஸ்டல் இன்சார்ஜ் கிட்ட பதில் சொல்ல முடியாது’ என சொல்லி கொண்டே நடந்தார்.
செபாஸ்டியன் தன் கீபோர்டை எடுத்து அதன் உறையுள் வைத்து விட்டு உடன் வந்தவர்களை நோக்கி உணவு உண்ணும் அறைக்கு சென்றான். அங்கே இருவர் மட்டுமே அமர்ந்திருக்க ‘சார்லஸ் எங்க’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான். கண்கள் தேடி கொண்டே இருந்தது, உணவு உண்ண துவங்கினான். ‘சீக்கிரம் சாப்பிடுங்க’ என தன் சக நண்பர்களை கேட்டுக்கொண்டே கண்கள் அலைபாய, உண்ணும் உணவில் ஈடுபாடு இல்லாமல், உண்டு கொண்டு இருந்தான்.
ஏதோ மனதை நெருட., சார்லஸ்சை தேடிச்செல்ல முற்பட்டான். அப்படி செல்லும் போது ஒரு அறையில் சார்லஸ் ஒரு சகோதரியிடம் பேசிக்கொண்டு இருப்பதை கேட்க நேர்ந்தது. அவர்கள் பேச்சின் மூலம் இருவர்க்கும் அங்கு பயில்வது பிடிக்கவில்லை என்பதும் பெற்றோரின் கட்டாயத்தின் பெயரிலியே அங்கு இருப்பதும் மேலும் திருப்பலிக்கென சார்லஸ்சை அங்கு அழைத்து செல்ல தொடங்கியதிலிருந்தே அவர்கள் இருவரும் பேச தொடங்கியதுடன் கடவுளை தேடி வந்தவர்கள் காதல் என்னும் கடலில் தொலைந்து போயிருந்தார்கள் என்பதையும் அறிந்தான் செபாஸ்டியன். அவன் என்ன செய்வது என்பதை அறியும் முன்னமே அவன் பின்னால் நின்றுருந்த கான்வென்ட் சுபீரியர், ‘ஆல் ஆப் யூ கெட் அவுட் ஃப்ரம் இயர், யூ ஆல் கல்பிரிட்ஸ்’ என கத்தினார்.
3.
இயேசுவின் திருஇருதய படத்தை பார்த்து கொண்டு இருந்த ஃபாதர் ஆபீஸ் ரூம் செல்லாமல் நேராக செபாஸ்டியன் அறைக்கு சென்றார். அவன் மீண்டும் கையில் ஜெப மாலையை ஏந்தி அந்த பறவைகளின் இசையில் தன்னை தொலைத்தவனாய் அமர்ந்து, அன்று ஒரு நாள் வாலிபால் விளையாடும் போது நடந்த நிகழ்வை நினைத்து கொண்டே ஜெபமாலை மணிகளை உருட்டினான்.
அன்று மாலை விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட அட்டவணை. அனைவரும் வந்து வாலிபால் நெட் கட்டப்பட்ட இடத்தில் ஒன்று திரள, கலகலப்பாக துவங்கியது விளையாட்டு. ஃபாதர் உடன் செபாஸ்டியன் வந்து சேர்ந்தான். அவனை விளையாட செல்லும் படி அவர் கூற அவனும் தனக்கான அழைப்புக்காக காத்திருந்தான். அங்கு நாட்டின் பல இடங்களில் இருந்தும் பயில வருவதுண்டு. அவனுக்கான நேரம் வரவும் விளையாட சென்றான். பல மொழிகளிலும் கேலி பேச்சு பேசியவாரே விளையாட்டு சென்று கொண்டு இருந்தது. சட்டென்று எதிரணியில் இருந்து ‘எடோ பட்டி, இந்த போலை டிஃபன்ஸ் செய் நோக்காம்’ என மூர்க்க தனமாக பந்தை முகத்திற்கு நேராக அடிக்க, அதை மிகவும் திறமையாக எதிர்கொண்டு தன் அணிக்கு பாய்ண்ட் கூட்டி ஜெய்க்க செய்தான் செபாஸ்டியன். கண் இமைக்கும் நொடியில் பின்னால் இருந்து ஒரு கை தன்னை இழுத்து கீழே தள்ள ‘ஏண்டா நீ எல்லாம் எங்களுக்கு சமமா நின்னு விளையாடுறதே தப்பு’ இதுல எங்களையே ஜெய்குறியா டா’ என கத்திக்கொண்டு சென்ற தன் சக மாணவனை கண்டு செபாஸ்டியன் அதிர்ந்து போனான். அன்று இரவு ஜெபத்தில் அவனால் கண்ணீரை அடக்க முடியாமல் விசும்பியதை ஃபாதர் கவனிக்காமல் இல்லை. ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் தரப்பு இருக்கும் அதே இடத்தில் காலைவாரும் தரப்பும் இருந்தே இருக்கும். அது இயற்கை.
‘ ஃபாதர் ஜார்ஜ் இன்னிக்கு பிளே கிரவுண்ட் ல நடந்தத கவனுசிங்களா. இருந்தாலும் குரியன் அப்டி பேசியிருக்க கூடாது.அது ரொம்ப தப்பு. கண்டிப்பா இதக்காக பணிஷ்மெண்ட் குடுக்கணும்’.
‘ஃபாதர் நீங்க எத பத்தி சொல்றீங்க ஒன்னும் புரியலயே. அது ஜஸ்ட் கேம். ஃபாதர் பட் செபாஸ்டியன் க்கு நீங்க இவளோ ஃபேவரிசம் காட்ட கூடாது’ என்று எழுந்து சென்றார்.
இந்த விளையாட்டில் மட்டும் அல்ல எல்லா நிலைகளிலும் செபாஸ்டியனை முன்னிறுத்தி பேசுவதை ஒரு தரப்பு எப்போதுமே எதிர்த்து வந்தது. ஆனால் நிராகரிப்புகளை எல்லாம் தாண்டி அவன் இலக்கை நோக்கியே பயணித்தான். அவனுக்கு அங்கு இருந்த ஒரே நம்பிக்கை கடவுளும் இசையும் ஃபாதரும் தான்.
4.
அவன் அறைக்கு சென்று பின்னால் நின்றபடியே அவனை பார்த்து கொண்டு இருந்தார்.
‘மை டியர் பாய், காட் வில் சேவ் யூ, டோண்ட் பீ வரீட்’
மீண்டும் உயிர் பெற்றவன் போல் அதிர்ந்து எழுந்து அவரிடம் சென்று ‘என்ன அனுப்பிடாதிங்க ஃபாதர் பிளீஸ்,நான் எந்த தப்பும் பண்ணல’ என்று கதறினான் செபாஸ்டியன்.
செபாஸ்டியன் கிராமப்புற மாணவன்தான். அவனின் பெற்றோர் சாதியின் காரணமாக புறக்கணிக்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் அந்த கிராமத்திற்கு புதிதாய் வந்த பாதிரியார் அந்த குடும்பத்திற்காக உதவிக்கரம் நீட்டினார். அன்று மதம் மாறி கோவில்பிள்ளையாக பணியில் அமர்ந்தார் அவன் தந்தை. நல்ல வேலை என்பதை விட நாட்கள் நகர நகர நல்ல மரியாதை கிடைத்தது. இந்த வாழ்வும் வளமும் கடவுள் கொடுத்தது என ‘என் ரெண்டு பசங்கள்ள ஒன்ன உனக்கே தறேன்’ என்று வேண்டிக் கொண்டார். மூத்த மகனை அனுப்பவே சித்தம் கொண்டு இருந்தார். ஆனால் அவனோ சென்ற நான்கே நாளில் திரும்பி வந்தான். ‘எனக்கு அதெல்லாம் புடிக்கல. நான் வேற படிக்கணும்’ என கூறி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க சென்றான். இளையவனை பார்த்தார்கள். சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் பெற்றோர் வாக்கே வேதவாக்கு என வளர்ந்த மகன். ‘அண்ணன மாறி பண்ணிடாத தம்பி, நமக்கு இப்டி ஒரு மரியாதையான வாழ்க்கை கொடுத்தது இந்த கடவுள் தான். அவருக்கு இந்த வாழ்க்கையக் கொடுக்கிறது தான் தம்பி மொற’ என்று கூற அதை அப்படியே மனதில் இறுத்தி வந்தவன் அவன். அவன் மனதில் கலங்கம் இல்லை. தவறிழைக்க வாய்பில்லை என்று ஃபாதர் மட்டுமே அங்கு நன்கு அறிவார்.
5.
கடந்த மாதம் நடந்த சம்பவம் இருவருக்கும் பெரும் சவாலாகப் போனது. சுப்பீரியர் சிஸ்டர் அன்று விசாரிக்காமல் நாள்வர் மீதும் புகார் அளிக்க, பிஷப் ஹவுசில் இருந்து புகார் வாடிகன் சிட்டி போப் ஆண்டவர்க்கு மாற்றபட்டது. இறையியல் கல்லூரி விவகாரங்கள் அனைத்தும் போப்பின் நேரடி பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது ஆணை. இவ்வாறு அங்கிருந்து பெறப்பட்ட கடிதத்தில் அனைவரும் அவரவர் தரப்பு நியாயங்களை சொல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் எவ்வகையிலும் தொடர்பில்லாத செபாஸ்டியன் ‘இதில் என் பங்கு எதுவும் இல்லை’ என கூறி பதில் அளித்திருந்தான். இதில் அனைவரின் பதில்களும் உண்மை என ஏற்க்கபட்டது. செபாஸ்டியன் பதிலை தவிர. சார்லஸ் மற்றும் அந்த சகோதரி இருவரும் வெளியேற்றப்பட்டதுடன் இனி எந்த சபையிலும் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டது. ஆன்டனியும் சேவியரும் ‘எங்களுக்கும் அவர்கள் விசயம் தெரியும். பயத்தில் மறைத்து விட்டோம்’ என மன்னிப்பு வேண்டிக் கொண்டதால் அவர்கள் கல்வி தொடர பிஷப் சபை பரிந்துரை செய்தது. செபாஸ்டியன் இதற்காக சுயபரிசோதனை என்ற பெயரில் யாரிடமும் பேச முடியாதவாரு ஓர் தனி அறையில் ஒரு வார காலம் வைக்கப்பட்டான். ‘உன்னோடு நீயே பேசு. உன் தவறை ஒப்புக்கொள். கடவுளிடம் மன்னிப்புக் கேள்’ என பலவாறு அவனை குற்றவாளி ஆக்க முயற்சித்தார்கள். அன்று கடைசி நாள் விளக்கம் அளிக்க. அவன் தனி அறையில் இருந்து திரும்பி வந்ததனால் அவன் மனமாற்றத்தை பற்றி கேட்கவே ஃபாதர் அறைக்கு அழைக்கச் சொல்லியிருந்தார்.
6.
அவன் கண்ணீரை துடைத்து ‘உனக்கு என்ன தோணுச்சு சொல்லு’ என்றார். ‘ஒரு வாரம் இல்ல ஒரு மாசம் ஆனாலும் என்னால் கடவுள் கிட்ட கூட செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது. அப்புறம் எப்டி போப் ஆண்டவர் கிட்ட கேப்பேன். முடியாது ஃபாதர்’ என்று கூறி ஒரு வெள்ளை தாளை நீட்டினான். அதில் ‘எனக்கு இங்கு பயில்வதில் விருப்பம் இல்லை’ எனவும், தன்னை வெளியேற்றும் படியும் கேட்டுக்கொண்டு இருந்தான். ஃபாதர் அவனை கட்டி அணைத்து கண்கலங்கி ‘உன்னை ஒரு நல்ல ஃபாதர் ஆக்கணும்னு கனவு கண்டேன் டா. இந்த சபை ஒரு நல்ல ஃபாதர இழந்தடுச்சு. உன் சேவை எத்தனையோ ஏழை மக்களுக்கு தேவப்பட்டிருக்கும். ஆனா நானே நெனச்சி இருந்தாலும் இப்படி ஒரு கடவுள் பிள்ளையா உன்ன ஆக்கிருக்க முடியாது டா. உன் வெள்ளை மனசு கரை படியரதுக்கு முன்னாடி போயிடு டா. இந்த இடம் உனக்கு வேண்டாம். கடவுளோட மனசுலயே நீ இருக்க. இது உனக்கு இனி தேவ இல்ல. உன் முடிவு இயேசுவோட முடிவு. நா ஏதுக்குறேன். உன்ன சந்தோசமா வெளிய அனுபுறேன் டா. யார் கால்லயும் என் பயன் விழவே கூடாது. நீ ஏண்டா அழற. நீ அழ கூடாது. இந்த அங்கி இல்லாமலும் நீ சேவ செய்வ டா. போடா, நீ தலைய நிமித்திட்டு வெளிய போடா. என் பயன் டா நீ. புரூவ் பண்ணிட்ட டா’ என்று சொல்லிக்கொண்டே கண்ணீரை துடைத்துக்கொண்டே ஆபீஸ் ரூம் க்கு சென்று அவன் கொடுத்த லெட்டரை மெயில் செய்தார். அடுத்த நாள் அவனை வெளியேற்ற முறைப்படி பிஷப் ஆபீசில் இருந்து மெயில் வந்தது. அதில் நடந்த விசாரணையில் , ‘நடந்த தவறுக்கு முழுக்க துணை சென்றது செபாஸ்டியன் எனவும் உடன் இருந்த இருவருக்கு இதில் தொடர்பு இல்லை எனவும், அதனால் அவர்களை மன்னித்து கல்வியை தொடர அனுமதிப்பதாகவும் மேலும் தன் தவறை ஒப்புக்கொள்ள மற்றும் மன்னிப்பு கோர தவறிய செபாஸ்டியன் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையாக கல்லூரியில் இருந்து வெளியேற்றுவதுடன் திருச்சபைக்கு கீழ் உள்ள அனைத்து சபைகளில் இருந்தும் புறக்கணிக்க பட்டுள்ளார்’ என தெரிவிக்கப் பட்டிருந்தது. ‘எடா பட்டி இனி நிண்ட ஸ்தானம் ஏப்பொழும் அதுவாக்கும், கேட்டோ பொய்கோ டா’ அவன் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது ஜன்னல் வழியாகக் கேட்ட குரல். ‘பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்’ என மனதிற்குள் முனங்கிக்கொண்டே வெளியேறினான் செபாஸ்டியன்.