நான் கல்லூரியில் சேர்ந்த சிறிது நாளில் நடந்த நிகழ்வே இந்தப் பதிவு. கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு காலை நேரம் நான் அலுவலகத்தில் Scholarship விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என் நண்பன் ஏன் இங்கே நிற்கிறாய் எனக் கேட்க, நானும் விவரம் சொல்ல அதற்கு அவன், “அய்யய்யோ நீ SC வீட்டு பையனா தெரியாமல் உன்னிடம் தண்ணீர் வாங்கி குடிச்சிட்டேனே” என்று கூற எனக்கு ஒரு நிமிடம் சுருக்கென்று முகம் மாறியது. அவன் உடனே சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டி, வரும் போது எனக்கும் ஒரு விண்ணப்பம் வாங்கி வா என்று கூறிச் சென்றான். அவனும் என்னைப்போலவே ஒடுக்கப்பட்டுள்ளான் என சொல்லாமல் சொல்லிச் சென்றான். அதன்பின் இருவரும் அடிக்கடி சமத்துவம், சமூகநீதி, இட ஒதுக்கீடு பற்றிப் பேசிக்கொள்வோம். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றொரு நண்பர் குறுக்கிட்டார்.
(உரையாடல் தொடர்கிறது)
நண்பர் 1: இட ஒதுக்கீடு வழங்குவது எல்லாம் சரி. ஆனால் அந்த அளவீட்டு முறையில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் தனியாக ஒரு குறிப்பிட்ட அளவு வழங்க வேண்டும். அதை விடுத்து ஏற்கனவே இருக்கும் விழுக்காட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்.
நான்: கொஞ்சம் புரியும்படி தெளிவாக சொல் நண்பா.
நண்பர் 1: அதாவது நண்பா. முன்பெல்லாம் SC மற்றும் SC(A) மாணவர்களுக்கு 18% இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது SC(A) மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த 18% ல் 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் SC மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?
(இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை மட்டும் கவனித்து விட்டு அங்கு வந்தார் மற்றொரு நண்பர்)
நண்பர் 2: ஆமாம் நண்பர்களே. இடஒதுக்கீடு என்பதே ஒரு தவறான முறை. அதை ஒழித்தால் தான் அனைவரும் சமம் என்ற நிலை வரும்.
நான்: அது ஏன் நண்பா அப்படி கூறுகிறாய்?
நண்பர் 2: ஆமாம்டா. பள்ளிகளில் சாதி சான்றிதழ் கேட்பது, இட ஒதுக்கீடு இவற்றால் மட்டும் தான் சாதி இன்னும் உயிரோடு இருக்கிறது.
நான்: நல்லது நண்பா. இப்ப உங்களுக்கு மஞ்சள் காமாலை நோய் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேப்பரில் மஞ்சள் காமாலை என்று எழுதிக் கிழித்துப்போட்டால் சரியாகி விடுமா?
நண்பர் 2: என்னடா முட்டாள் மாதிரி பேசுற? மஞ்சள் காமாலை என்பது ஒரு உடல்நிலை கோளாறு. அதுவும் சாதியும் ஒன்றா?
நான்: இரண்டும் ஒன்று இல்லைதான் நண்பா. ஆனால் மஞ்சள் காமாலை என்பது உடல்நிலை கோளாறு. சாதி என்பது மனநிலை கோளாறு. நமது மனநிலையில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே சரி செய்ய இயலும்.
நண்பர் 2: சரி அப்படியே இருக்கட்டும். பின்பு ஏன் பள்ளிகளில் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள்?
நான்: நண்பா நாட்டில் எதற்காக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். மக்கள்தொகையை தெரிந்து கொள்ளத்தானே. அது போல் தான் இதுவும் எவ்வளவு மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். அதில் எவ்வளவு மக்கள் படிக்கிறார்கள் என்ற கணக்கீட்டுக்காகவே சாதிச்சான்றிதழ் கேட்கப்படுகிறது.
நண்பா 2: அப்ப இடஒதுக்கீடு சரி என்று கூறுகிறாய்?
நண்பா 1: அதில் என்ன தவறு இருக்கிறது?
நண்பர் 2: நீங்கள் இருவரும் இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்று இருக்கிறீர்கள். அதனால்தான் சரி என்று கூறுகிறீர்கள்.
நான்: அப்ப, நீ அதில் பயன் பெற வில்லையா?
நண்பர் 2: நான் BC பிரிவு. எனக்கு இடஒதிக்கீடு கிடையாது. அது தாழ்த்தப்பட்ட SC பிரிவினருக்கு மட்டுமே.
நண்பன் 1: உன் வார்த்தையே மிகவும் தவறு. இங்குத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.
BC – Backward class- பிற்படுத்தப்பட்டவர்கள்
MBC – Most Backward class – மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்
SC – Scheduled caste – பட்டியல் இனத்தவர்கள்.
SC என்பவர்கள் மேற்கூறிய சாதியில் இல்லாமல் தனியே பட்டியல் படுத்தப்பட்டவர்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை.
நண்பர் 2: சரி சரி. அவர்கள்தான், அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
நான்: இல்லை நண்பா, உன் புரிதல் தவறு. இங்கு அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
BC – 30%
MBC – 20%
SC – 15%
SC(A) – 3%
ST – 1%
நண்பர் 2: இதெல்லாம் சும்மா வாய் வார்த்தை மாதிரிதான். நடைமுறையில் இல்லை.
நான்: இல்லை நண்பா. இதுதான் உண்மை. இங்கு GENERAL எனப்படும் OPEN COMPETITION ஐ தவிர மற்ற அனைவருமே இடஒதுக்கீட்டில் தான் வந்துள்ளோம். நீயும் அப்படித்தான். SCHOLARSHIP ம் SCக்கு மட்டும் இல்லை. BC, MBC க்கும் உள்ளது.
நண்பர் 2: அதெல்லாம் சரி ஆனால் அவர்களுக்கு cut-off மிகவும் குறைவு. BC க்கு மிகவும் அதிகம்
நான்: நண்பா SC/ST க்கு Cut-off குறைவு என்பதே ஒரு கற்பனை. அதுமட்டுமில்லாமல் அந்தப் போட்டிக்கு நீ வர முடியாது. இப்ப BC ல 50 மார்க் எடுத்து வாய்ப்பு கிடைக்கலேனா 51 மார்க் எடுத்த வேறு ஒருவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அர்த்தம். SC ல 40 மார்க் எடுத்து வாய்ப்பு கிடைச்சா SC ல யாரும் 40 மார்க் வாங்கலனு அர்த்தம். ஒரு BC, BC உடனும் ஒரு SC, SC உடனும் மட்டுமே போட்டி போட முடியும். இருவருமே அதிக மதிப்பெண்கள் எடுத்தால் GENERAL எனப்படும் OC யில் வருகிறார்கள். அப்போது QUOTA கிடையாது. SC மாணவர்கள் படித்தாலே QUOTA ல் தான் படிக்கிறார்கள் என்பது தவறு.
நண்பா 2: அப்ப நீங்க மட்டும் குறைவான மதிப்பெண் எடுத்து அதிகமான வாய்ப்புகளை பெற்றுக் கொண்டே இருப்பீர்கள் அப்படித்தானே.
நான்: அப்படியில்லை நண்பா. சமத்துவத்தை நிலைநாட்டவே அந்தமுறைப் பின்பற்றப்படுகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே வழங்கப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் SC/ST யின் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலே உள்ளது. அதை பூர்த்தி செய்யவே இடஒதுக்கீடுப் பின்பற்றப்படுகிறது.
நண்பர் 2: சரி, சமமாக நடத்தப்பட வேண்டும் என்றால் கல்வி உதவித்தொகையில் மட்டும் ஏன் ஏற்ற இறக்கம் SC/ST மாணவர்களுக்கு BC மாணவர்களை விட மிக அதிகம்.
நான்: நண்பா நீ நமது கல்லூரிக்கு MANAGEMENT QUOTA ல் தானே வந்தாய். உன்னைப் போல் எத்தனை SC மாணவர்கள் MANAGEMENT QUOTA ல் வர முடியும். நீ தனியார் பள்ளியில் தானே படித்தாய். உனது வகுப்பில் எத்தனை SC மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கே பொருளாதாரரீதியில் கஷ்டப்படுகிறார்கள். அதனாலே அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நண்பர் 2: அப்படினா இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் தானே வைக்க வேண்டும். ஏன் சாதியின் அடிப்படையில் வைத்து இருக்கிறார்கள்.
நான்: நண்பா பொருளாதாரம் என்பது இன்று வரும் நாளை போகும். அது நிலையற்றது. அதன் அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும். அது மட்டுமின்றி அவர்கள் சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள். எதன் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் முன்னேற்றுவதே சமூக மாற்றம்.
நண்பன் 1: அதெல்லாம் சரி நான் கேட்ட உள்ஒதுக்கீடு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?
நான்: நண்பா SC என்பதோ BC என்பதோ ஒரு COMMUNITY அதற்குள் நிறைய உட்சாதி பிரிவுகள் இருக்கின்றன. நீ SC(A) க்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு பற்றித்தானே கேட்டாய். இப்ப SC என்று மொத்தமாக 18% இருந்தபோது SC ல் இருக்கும் உட்சாதிகளில் SC(A) பிரிவினரைக்காட்டிலும் மற்றவர் முன்னேறி இருப்பர். அதனால் SC(A) பிரிவினரை முன்னேற்றும் நோக்கில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நண்பா 2: நீங்கள் இருவரும் சலுகையை அனுபவிப்பதால் இப்படிப் பேசுகிறீர்கள்.
நான்: நண்பா இடஒதுக்கீடு என்பது சலுகையில்லை அது உரிமை. மனிதனை மனிதனாக பார்ப்பதற்கு, அதிகார மனநிலையை, அடிமைத்தனத்தை உடைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உரிமை. இல்லையென்றால் பொருளாதார அளவிலோ அல்லது கல்வியிலோ அவர்களை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்கு ஒர் குறிப்பிட்ட தொகையோ அல்லது IIT, AIIMS மாதிரியான கல்லூரிகளில் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி முன்னேற்றலாமே? அப்படி ஏன் செய்யவில்லை? இடஒதுக்கீடு என்பது மற்றவர்களைப் போல அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே.
நண்பர் 2: இப்ப என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்?
நான்: நான் சொன்னது புரியலனா இன்னும் கேள் பேசுவோம், எனக்குப் புரியலனு நினைச்சா புரிய வை. நான் சொல்றது தப்புனா வா விவாதம் பண்ணுவோம். இல்லை நான் சொன்னது சரினா வா சேர்ந்து சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கலாம்.