கடந்த காயங்களை எல்லாம் கறைகளாய் தேக்கி கரைந்து கொண்டே இருந்தால் மனகணம் குறைந்து விடாது. வேதனைகள் வீழ்த்திய போதும், அருகே ஆறுதல் தேடும் அந்நியர்களுக்கு ஆற்ற கை கொடுப்பதில், காயம் மட்டும் அல்ல நாம் கடந்த கேடு காலமும் மறையும் என நான் உணர வெகுகாலம் எடுக்கவில்லை. ஆம், இதோ இந்த ஆண்டு தான், ஏப்ரல் மாதம் இணைந்தேன் Egalitarians உடன் என் நண்பன் விக்னேஷ் மூலம். புது முகங்களால் காயப்பட்டே பழகிய எனக்கு, தயக்கமும் தடங்களுமாக தான் தொடங்கியது. இதற்கு முன் எந்த ஒரு தன்னார்வ அமைப்புடனும் அனுபவம் இல்லாத நான் என்ன செய்ய போகிறேன் என்ற கேள்வியுடன் மட்டுமே முன்னகர்ந்தேன். ஆனால் என் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் நான் கேட்காமலே காலம் என்னிடம் சேர்த்தது தான் அதிசயம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோப்பு செய்ய முன்வர வேண்டுமாய் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்த போதும் என் அறியாமையை காரணம் காட்டி முகம் மறைத்து கொண்டே இருந்தேன். முதல் முறை திரைக் கிழிக்கப்பட்டுதான் வெளியே வந்தேன். அதுவும் நானாக கிழிக்கவில்லை. புதிய தகவல்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தது, செயல் வழி கற்க இன்னும் நிறைவாகவே இருந்தது. கற்றுக் கொண்டு செயல்படுத்திய பின் தான் மூளை வேலை செய்தது. “இது எதற்கு? என்ன பயன்? இதன் மூலம் யாருக்கு லாபம்?” என பல கேள்விகள். “கேட்கலாமா வேணாமா? கேட்டா என்ன நினைப்பாங்க, வேணா இப்போ தான வந்தோம்” என்றெல்லாம் என் மனக்குதிரையை தட்டி விட்டு, கூடவே நானும் ஓடிக்கொண்டு இருந்தேன். அந்த மாதத்தில் நடந்த மாத கூட்டம் அதற்கு பதிலை என் நண்பர் ஆனந்த் மூலம் தானாய் கொடுத்தது. அதன் பின் நாட்களில் நானே தானாய் முட்டையை உடைத்து வெளியே வந்த பறவையாய் மாறி போனேன். அந்த மாதத்தின் நியூஸ் லெட்டர்காக நான் எழுத நேர்ந்த என் கடந்த பாதை என்னை மேலும் Egalitarians உடன் நெருங்க செய்யும் என எதிர்பாராமல் இருந்ததும் உண்மை தான். என்னை மேலும் மேலும் எழுத தூண்டியதும் இதுதான். என் எண்ணங்கள் எழுத்தாக மாற மாற என்னுடைய உலகம் விரிவதை உண்ர்ந்தேன். நான் ஒவ்வொரு முறை கோப்பு செய்து தபால் செய்யும் போதெல்லாம் என் சக ஊழியர்கள் என்னிடம் “என்ன மேடம் இது? இது எதுக்கு? நீங்க டெல்லி ஐஐடி ல படிக்க போரிங்களா? உங்களுக்கு தேவ இல்லாதது எதுக்கு பண்ணனும்?” இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் தொடுத்து கொண்டே இருப்பார்கள் ஒவ்வொரு முறையும். எனக்கு முதலில் பதில் சொல்ல தெரியாது. “நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லா சேந்து ஒரு குரூப் சார்,இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கோம்” என்று சொல்லுவேன். அதற்கு மேல் அவர்களின் கேள்விகளை தவிர்க்கவே பார்ப்பேன்.
ஒரு மாதம் கழித்து தான் எனக்குள்ளாக ஒரு புரிதல் பிறந்தது அது நான் பிறர்க்கு எடுத்து கூறும் அளவிற்கு பருவம் அடைந்ததாகவும் இருந்தது. தொடர் மாதங்களில் நானாகவே முன் சென்று பேச துவங்கினேன் Egalitarians- லும் சரி எங்கள் அலுவலகத்திலும் சரி. “இதோ பாத்திங்களா, எதுக்கு எதுக்குனு கேட்டிங்கள்ள இதுக்கு தான் ” என நாம் வெளிக்கொணர்ந்த ஐஐடி களின் இட ஒதுக்கீட்டு தகவல்களை சொன்ன போது ஆச்சர்யமாகவும் சிலர் குழப்பமாகவும் சிலர் நம்பமுடியாத தோரணையிலும் பார்த்தனர். இன்னும் நேரடியான சமூக மாற்றத்திற்கு நான் காரணமாகவில்லை என்றாலும், இந்த மாற்றங்களின் ஏதாவது ஒருகட்ட கருவியாக இருப்பது என்னை இன்னும் அடுத்த நிலைக்கு சிந்திக்கவே செய்கிறது. எதையும் வெறும் அமைப்பாகவும் கடமையாகவும் மட்டும் பார்க்கும் பொழுது அதில் நமது ஈடுபாடு என்பது நம் மூளை அளவிலேயே இருக்கும் என்பது எனது அபிப்ராயம். அது நம் மனதளவில் இயங்க அதை நம் உறவாக்கிகொண்டால் அன்றி எனக்கு அது சாத்தியமில்லை. அப்படி Egalitarians என்னுள் உறவாகவும் உறைந்து போனது. சாய் அண்ணா வில் துவங்கி அஜித், திரு, ரேவதி என என் புதுநட்பும் வளர்பிறையாகிக்கொண்டே இருக்கிறது.
இதனால் நான் இழந்த என் தன்மான காரிருள் Egalitarians என்ற நிலாவால் ஒளியூட்டபட்டு, இன்று நான் அவ்வொளியை பிறர்க்கு ஒளிர செய்யும் நிலவாகவும் மாறிக் கொண்டே இருக்கிறேன். இங்கே இழப்பு என்று ஒன்று உண்டெனில் அதை ஈடு செய்யவும் ஒன்று உண்டு. நான் கொண்ட இழப்பை இனி பிறர் கொள்ளாமல் நான் Egalitarians மூலம் ஈடு செய்து கொண்டிருக்கிறேன். இங்கே நான் இழந்ததை எல்லாம் பெற்று கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன். இழக்கப்பட்டால் மட்டுமே பெற்று தர வேண்டும் என்ற தேவையில்லை. பெற்று தருவதற்காக சில இழப்புகள் ஒன்றும் தவறில்லை. இவை பொருள் பெற்று தரும் கைகள் அல்ல. பொருளுள்ள சுயத்தை மீட்டு தரும் கைகள். இடைவெளியை இணைக்க இணைவோமா ?