‘அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல சார்’
‘எப்டி சொல்ற’
‘நீங்க சொல்ற அந்த ஹாஸ்பிடல்ல தான் என் ஃப்ரண்டு டாக்டரா இருக்கான். அந்த பொண்ணு அப்டி உண்மையிலயே செத்துருந்தா அங்க பெரிய கலவரமே நடந்துருக்கும். ஆனா என் ஃப்ரண்டு கிட்ட விசாரிச்ச வரைக்கும் அந்த ஹாஸ்பிடல்ல கலவரம் எதுவும் நடந்ததா தெரில சார்’
கடந்த ஆண்டு மதுரையிலுள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த மாணவி சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக முகநூலில் பரவிய செய்தியைத் தொடர்ந்து கல்லூரியில் இருந்த என் ஜூனியர்-நண்பன் ஒருவனிடம் விசாரித்தபோது அவன் எனக்கு சொன்ன பதில்தான் மேலே உள்ள உரையாடல். சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்தால் கலவரம் நடக்கும் என்று அவன் புத்தியில் பதிய வைத்தது யாரென்று எனக்குத் தெரியவில்லை.
மறைந்த மாணவி உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவருக்கு வேறு ஏதேனும் உடல்நலக் குறைவிருந்ததா என்பது இங்கு முக்கியமல்ல. நான் விசாரித்த நண்பர்கள் பெரும்பாலும் சாதிக்கொடுமையால் அம்மாணவி மறைந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக நிறுவத்தேவையான அத்தனை சாத்தியங்களையும் பரிசீலித்தனரே ஒழிய ஒருவர்கூட அச்செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயவோ அல்லது அது உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியம் பற்றியோ விவாதிக்கவில்லை.
காட்டுப்பேய்ச்சி வலிப்பு வந்து சாலையில் கேட்பாரற்று துடித்து இறந்தாள். காட்டுப்பேய்ச்சியின் உடலை உடற்கூராய்வு செய்யும் உயர்சாதி கணவான்கள் எதைக் கண்டுபிடிப்பார்கள்? ‘காட்டுப்பேய்ச்சி நண்பகலில் சாலையைக் கடக்கையில் வலிப்பு வந்து சாலை நடுவே கிடந்து துடித்திருக்கிறாள். வாகன ஓட்டிகளும் பயணிகளும் சாலையில் கிடந்த உடலை கவனிக்காததால் அவளுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இறந்தாள்’. அதாவது காட்டுப்பேய்ச்சியின் அகால மரணத்துக்கும் அவள் பிறந்த சாதிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் விவாதிக்கலாம்.
மாணவியின் மரணத்தை விட என் நண்பர்கள் செய்த உடற்கூராய்வுதான் அன்றிரவு என்னைத் தூக்கமிலக்கச் செய்தது. உயிருடன் இருக்கும் வரையில், தான் சார்ந்த சாதியின் காரணமாக புறக்கணிக்கப்படும் ஒருவர் மறைந்த மறுநிமிடமே சாதியற்றுப்போகும் மாயம் வியக்கவைக்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பு ரீதியாக தலித்துகளை எவ்வளவு நுணுக்கமாக அந்நியப்படுத்துகின்றன என்பது ஒரு தலித் அல்லாதாரின் கற்பனைக்கும் எட்டாது.
*
கி.பி. 2005 க்குப் பிறகு இந்திய துணைக்கண்டத்தில் புதிதாக ஒரு இனக்குழு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இனம் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பெயர் RTI Activist. தொடக்கத்தில் சிறுபான்மையினராய் இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு இந்த இனத்தின் சனத்தொகை பெருகத் தொடங்கியது. இந்த இனம் தோன்றிய காலம் தொட்டு இந்திய துணைக்கண்டத்திலிருந்த சக்திவாய்ந்த இனக்குழுவான அரசு அலுவலர்களை அஹிம்சை வழியில் சித்ரவதை செய்யத்தொடங்கியது. வேலை செய்யாமலிருப்பதையே குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் அரசு அலுவலர் இனத்தை வேலை செய்யவைத்து மதமாற்றம் செய்வதே RTI இனத்தின் முழுமுதற் குறிக்கோள்.
துன்பம் நேர்கையில் கொஞ்சம் மிக்சர் சாப்பிட்டு கமிட்டி அமைப்பதை வாடிக்கையாகக் கொண்ட அரசு அலுவலர் இனம், நெறி வழுவாது RTI இனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டியை அமைத்தது. கமிட்டி தனது எட்டாண்டு கடின உழைப்புக்குப் பின், எட்டாண்டாக திண்று செறித்த எழுநூற்றைம்பது பக்க மிக்சர் பில்லுடன் சேர்த்து ஏழு பக்க அறிக்கையையும் சமர்ப்பித்தது. கமிட்டியின் அறிக்கையை சீராய்ந்து துரித நடவடிக்கை எடுக்க அரசு இனம், வேலைசெய்யாமலிருப்பதிலிருந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் கொண்ட செயற்குழுவை நியமித்தது. அக்குழு தனது செயல்திட்டத்தை 2019 ஜூலை திங்கள் 15ம் நாள் சமர்ப்பித்தது. செயற்குழு ஏகமனதாக அளித்த பரிந்துரைகள் பின்வருமாறு:
அ. தன்னை RTI இனம் என்று பறைசாற்றிக்கொள்ளும் இனம் உண்மையில் ஒரு தனி இனமே கிடையாது. அரசு அலுவலகங்களுக்கு ‘வண்ணமிழந்த கதர் சேலையை தன் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அணிந்து வருவது கௌரவக் குரைச்சல்’ என்று நம் இன மூதாதையர் எழுத்துபிழையுடன் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து மனம் வெதும்பி அருணா என்ற குலத் துரோகி செய்த எட்டப்ப வேலையே இந்த RTI இனம். ஆகவே இனிவரும் காலங்களில் குலமூதாதையரின் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக அதில் அறிந்தோ அறியாமலோ இருக்கும் எழுத்துப்பிழைகளைக் களைய முனைவர் பட்டம் முடித்துக் காத்திருப்புப் பட்டியலிலிருக்கும் நம் இனத்துப் பிள்ளைகளை பணி நியமனம் செய்யலாம். இது இனிவரும் காலங்களில் எட்டப்பர்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
ஆ. RTI இனத்தவரின் குலக்கொழுந்து அரசு அலுவலர் இனத்திலிருந்து தொடங்கியிருப்பதால் நம்மவருக்கும் அவர்களுக்கும் பெரிதாக வடிவ பேதம் இல்லை. RTI இனத்தவர் பால் வேறுபாடின்றி தினமும் குளித்து வேலை செய்யும் பரதேசிகள். நம்மவருக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரேயொரு குண பேதம் அவர்கள் வேலை செய்வது மட்டுமே. இனிவரும் நாட்களில் RTI இனத்தாரை வெகுசுலபமாக அடையாளம் காணும் பொருட்டு வேலை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருக்கும் அரசு அலுவலர் இனத்தைச் சேர்ந்தாரின் பணிமனையின் முகப்பில் ‘நன்றிக்கு வித்தாகும் செயலின்மை வேலை என்றும் இடும்பை தரும்’ என்ற செந்நாப்போதாரின் திருக்குறளைப் பொறித்து வைக்கலாம்.
இ. RTI இனத்தை ஒழிக்க ஓர் எளிய வழியுண்டு. ஒன்றுமே செய்யத்தேவையில்லை என்பதுதான் அது. அது நமக்கு உள்ளங்கை மிக்சர் தானே! RTI இனத்தாரின் சராசரி வயது 63. நாம் ஒன்றும் செய்யாமலிருந்தாலே இன்னும் சில ஆண்டுகளில் அவர்களின் இனம் தானாகவே ஒழிந்துவிடும்.
அரசு அலுவலர் இனத்தாரின் திட்டத்தை அறியத்துடித்த RTI இனம், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் செயற்குழுவின் பரிந்துரைகளைக் கேட்டுப்பெற்று, படித்துக் கலங்கியது. செயற்குழுவின் அறிக்கையிலிருந்த முதலிரண்டு பரிந்துரைகளைவிட மூன்றாவது பரிந்துரைதான் RTI இனத்தாரை விழிபிதுங்கச்செய்தது. மனதளவில் என்றும் பதினாறாக எண்ணிக்கொண்டிருந்த RTI இனத்தாரின் உண்மையான வயது அப்பட்டமாக விவாதிக்கப்பட்டிருப்பது அவர்களை நிலையிழக்கச் செய்தது. அரசு அலுவலர் இனத்தை வேரறுக்காமல் விடுவதில்லை என்று RTI இனத்தின் குலமூத்தோர் வெஞ்சினம் உரைத்தனர். RTI இனம் துரிதமாக செயலாற்றத்தொடங்கியது. செயற்குழுவின் பரிந்துரைகள் வெளியான அடுத்த ஓராண்டுக்குள் RTI இனம், Egalitarians என்ற குறுங்குழுவை உருவாக்கியது.
அரசு அலுவலர் இனத்தின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் Egalitarians குழுவின் சராசரி வயதோ 25. கதராடைக்கு மாற்றாக ஜூன்ஸ் பேன்ட்டும் டி-ஷர்ட்டும் அணியும் தலைமுறை. அரசு அலுவலர் இனத்தின் வேலைப்பளுவைக் குறைக்கும் பொருட்டு, தட்டவே வேண்டாம் திறக்கப்படும் பூட்டை ஆட்டவே வேண்டாம் கொடுக்கப்படும் என்று Egalitarians குழு அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் பொதுவில் வைக்க முடிவு செய்தது. RTI இனத்தாரைப் போல் அரசு அலுவலர் இனத்தாரை மதமாற்றம் செய்ய விழையாமல், எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் என்று அரசு அலுவலர் இனத்தில் சேர்ந்து அவர்களை சீர்திருத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் Egalitarians குழுவினர்.
இந்தத் தடாலடி Egalitarians குழுவின் நடவடிக்கைகளைக் கண்டு ஆசனவாய் வரை ஆட்டம் கண்டுபோன அரசு அலுவலர் இனம் வேலைசெய்யாமலிருக்கவேயல்லாது யானொன்றும் அறியேன் பராபரமே என்று திகைத்திருக்கையில் RTI இனத்திற்கு சிம்ம சொப்பனமாய் Egalitarians குழுவின் குதக்கடப்பாரையாய் உதித்த விடிவெள்ளி, அரச இனத்தின் குலக்கொழுந்து தான் ஆர். பரமசிவம், M.A., B.Ed., M.L., M.L.I.S., M.Phil. அவர்கள். Egalitarians குழு என்ன கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்டையைப் போட முடியும் என்பதுதான் ஆர். பரமசிவத்தின் அளப்பரிய கண்டுபிடிப்பு. இறுதி முயற்சியாக பரமசிவத்தின் பெயரின் பின்னாலுள்ள அனுமன் வால் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டதற்கு, பரமசிவத்தின் தாத்தா ராமலிங்கப் பண்டாரம் இங்கிலாந்து மகாராணி எலிசபத்தின்பால் கொண்டிருந்த ஒருதலைக் காதலின் நினைவாக ஆங்கில அரிச்சுவடியின் சில எழுத்துகளை அள்ளிக் குவித்து பரமசிவத்திற்குப் பெயரிட்டார் என்றும் அந்த வாலுக்கும் பரமசிவத்தின் படிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கிடைத்த பதிலைக்கண்ட மன உளைச்சலிலிருந்து இன்னும் மீளவில்லை Egalitarians.
*
மதுரை-கல்லூரி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக ஏதேனும் செய்யாவிடில் ஏற்படும் குற்றவுணர்வுக்கு பயந்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தோம். கொரோனா ஊரடங்கு. மறைந்த மாணவியின் சொந்த ஊருக்கு அருகாமையில் தெரிந்த நண்பர்கள் ஒருவர் கூட இல்லை. வீட்டிலிருந்தபடியே எங்களால் செய்யமுடிந்த ஒரே செயல் RTI மூலம் தகவல் கேட்பது மட்டுமே. Egalitarians பற்றி வருங்காலத்தில் வரலாறு எழுதினால் அதில் குறைந்தது ஒரு அத்தியாயமாவது பரமசிவம் பற்றி எழுத வேண்டும். நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் திரட்ட வேண்டிய அத்தனைத் தகவல்களையும் மூன்று நான்கு தனித்தனி விண்ணப்பங்களாக பிரித்து வெவ்வேறு ஊர்களிலிருந்து அனுப்பினோம். சரியாக முப்பதுநாள் முடியும் தருவாயில் பதில் கடிதம் கிடைத்தது. வந்த கடிதத்தின் தடிமனைப் பார்த்து உள்ளுக்குள் ஒரு புல்லரிப்பு. வாழ்க்கையில் முதல் முறையாக ஏதோ ஒன்றை சரியாக செய்த திருப்தி. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தால் RTI விண்ணப்பக் கட்டணம் தவறான அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்து அனுப்பிய விண்ணப்பங்கள் அனைத்தையும் ஒரே தபாலில் மடித்துத் திருப்பி அனுப்பியிருந்தார் நம் பரமன். எங்களுடைய அத்தனை எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கினார். நாங்களும் விடாப்பிடியாக பதில் வந்த அடுத்தநாளே தபால்-மணி-ஆர்டருக்கு பதிலாக விண்ணப்பக் கட்டணத்தை நீதிமன்ற ஸ்டாம்ப் மூலம் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். முப்பதாவது நாள் பதில் – முடியாதுங்க. முதல் அப்பீல் பரமனுக்கு மேலுள்ளவனுக்கு. பதில் – அதான் பரமனே சொல்லிட்டானே! ‘நாம நெனச்ச மாதிரி அவ்வளவு சீக்கிரமா நடக்கற காரியமில்ல போல’ என்று பொருமிக்கொண்டே இரண்டாவது அப்பீல் தகவல் ஆணையத்துக்கு. சமீபத்தில், பரமனின் அருளால் நாங்கள் எழுதிய சில இரண்டாம் அப்பீல் மனுக்களை திரும்பப் பார்த்தேன். ‘கேட்ட தகவல் கிடைக்கவில்லை உடனடியாகக் கிடைக்க ஆவண செய்யவேண்டும்’ என்று எழுதியிருந்தாலே போதும். என் சிறுவயது நப்பாசை வக்கீல் ஆவது. ஒவ்வொருமுறை அப்பீல் எழுதும்போதும் ஒரு வக்கீலாகவே நினைத்துக்கொண்டு எழுதினேன். பரமனின் அருளால் குறையேதுமில்லாமல், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், அரசியல் சாசனம், தத்துவம், எத்திக்ஸ், லாஜிக் என்று இண்டு இடுக்கு விடாமல் ஒவ்வொரு அப்பீலும் குறைந்தது மூன்று பக்கமாவது எழுதியிருக்கிறேன்.
ஊரடங்கில் அனைவரும் நிம்மதியாக வீட்டிலிருக்கையில் தான் மட்டும் வேலைக்கு வரவேண்டியிருப்பதன் ஆற்றாமையை போஸ்ட் ஆபிசுக்கு வரும் அப்பாவி பிரஜைகள்மீது காட்டிக்கொண்டிருந்த போஸ்ட் மாஸ்டர், இல்லை போஸ்ட் மேடம், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கையில் RTI என்று தலைப்பிட்ட கவரோடு நான் வருவதைக் கவனித்து, எனக்கு மட்டும் கொஞ்சம் பரிவு காட்டினார் என்று செம்மொழியிலும் கரிசனம் காட்டினார் என்று மணிப்பிரவாளத்திலும் சொல்லலாம். ஊரடங்கின் போது எங்கள் ஊர் தபால் ஆபிஸ் எனக்காக மட்டுமே பணியாற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த சமயத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்காக என் சொந்த மாவட்டத்திலிருந்த தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளின் சாதிவாரியான மாணவர் சேர்க்கை விவரங்களைக் கேட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தேன். அவர் அரண்டுபோய் மாவட்டத்திலிருந்த அத்தனைப் பள்ளிகளுக்கும் என் வீட்டு முகவரியைக் கொடுத்து கேட்ட தகவலை அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தார். என் மாவட்டம் கோழிப்பண்ணைகளுக்குப் பெயர்போனது. உத்தரவு வந்த அடுத்த நாளே மாவட்டத்தின் அனைத்து கோழிப்பண்ணைகளிலிருந்தும் தபால் வரத்தொடங்கியது. இது எந்த அளவுக்கு என்றால், வாரத்தில் ஆறு நாள் தபால்காரர் எங்கள் வீட்டுப்பக்கம் வந்துபோவதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். ‘மூத்தவன் படிப்ப முடுச்சிட்டான் போலருக்கு. சாதகத்த வெளிய வுட்டுருக்கிங்களா? ஏதாவது வரன் அமஞ்சிதா? இல்ல வாரத்துக்கு நாலஞ்சுவாட்டி காயிதம் குடுக்கறவர ஊட்டுப்பக்கம் பாக்கறனேனு கேட்டேன்’. முதலிரண்டு வாரங்கள் வீட்டு வாசலோடு தபாலை போட்டுவிட்டு ஓடியவர் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டினுள் வந்து அவரே சேர் எடுத்துபோட்டு உட்கார்ந்து டீ கேட்டுவாங்கிக் குடித்துவிட்டுப் போவார். ஒருநாள் சாவகாசமாக உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தவர், எங்கோ வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்த என்னிடம் ‘என்ன தம்பி எதோ கழுசல் வந்த கழுத போடறமாறியில்ல வந்து வுழுந்துகிட்டே கெடக்கு. இது எப்ப நிக்கப்போவுது? என்னதான் சமாச்சாரம்?’ என்றார். ‘அதுஒண்ணுமில்லிங்க இந்த பள்ளிக்கோடத்துலலாம்’ என்று நான் சொல்ல ஆரம்பிக்கும் போதே ‘ஓ சாதிவாரியா கணக்கு ஒப்பிக்க சொல்றிங்களா? சரி தம்பி நான் அப்ப வரேன். அப்பனே கந்தையா!’ என்று குனியமுடியாமல் குனிந்து கையிலிருந்த டீ கிளாஸை தரையில் வைத்துவிட்டு நடையைக் கட்டினார். சில தபால்களில் ஒட்டிய பசையின் ஈரங்கூட காயாமலிருந்தபோதே கொஞ்சம் சுதாரித்திருந்தேன்.
*
‘நீங்க லெஃப்டிஸ்ட்டா இல்ல ரைட்டிஸ்ட்டா?’ என்று என் பேராசிரியரிடம் ஒருவர் கேட்டதற்கு ‘நான் டைப்பிஸ்ட்டு பா’ என்றார். ஒரு ஆய்வுக்கட்டுரையை எப்படி எழுதினால் யாராலும் புரிந்துகொள்ள முடியாதோ அப்படி எழுதுவதுதான் கல்வித்துறை ஆய்வுகளின் எழுதாத சாசனம். இருபதுபக்க ஆய்வுக்கட்டுரையை குறைந்தது இரண்டாண்டாக திருப்பித் திருப்பி எழுதி, எழுதிய ஆய்வாளருக்கே படித்துப் பார்க்கையில் ‘நாம எழுதுனதுதானா?’ என்று நினைத்து விழி பிதுங்கினால்தான் ஆய்விதழக்கு பிரசுரிக்க அனுப்புவர். அதனை ஆய்விதழ்கள் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி படித்து புரிந்து பிழைதிருத்தி பிரசுரிக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும். ஆய்வுத்துறைப் பின்னணியிலிருந்து களப்பணிக்கு வரும்போது கிடைக்கும் முதல் கலாச்சார அதிர்ச்சியே (cultural shock) எல்லாருக்கும் புரியும் வண்ணம் மின்னல் வேகத்தில் எழுதி அனுப்புவதுதான். ஆய்வுத்துறையில் ஆப்த வாக்கியங்களுக்கு (பன்ச் லைன்ஸ்) இடமில்லை. களப்பணியிலோ பன்ச் இல்லையென்றால் கிக் இல்லை. ஆய்வுத்துறைக்கும் களப்பணிக்கும் இருக்கும் பிரதான பொருத்தம் காலந்தவறாமை. எனக்கு பிடித்த பேராசிரியர் ஒருவரின் மனைவி அவரை ‘அன்பே நீ தட்கல் (tatkal) கூட இல்லை லேட்கல் (late-kal)’ என்று செல்லக் கோபம் கொண்டு காதுகிழியக் கத்தியதை பலமுறை கேட்டிருக்கிறேன். அப்பேராசிரியரின் தலைமாணாக்கன் நான். பதினெட்டாம் தேதி அதிகாலை நான்கு மணி விமானத்துக்கு பத்தொன்பதாம் தேதி மாலை 10 மணிக்கே விமான நிலையம் சென்று காத்திருக்கும் அளவுக்குக் கடமையுணர்ச்சி உண்டு. பாரதியின் எத்தனையோ கண்ணம்மா கவிதைகளை விட, ‘காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!’ என்ற கவிதை வரிகள்தான் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை.
ஆனால் Egalitarians க்கு அவ்வப்போது எழுதியதிலிருந்து என்னைப்பற்றி நான் கண்டுகொண்ட ரகசியம் – எழுத்தெண்ணி எழுதுவதை விட விசைப்பலகையைத் தட்டும் இடைவெளியில் சிந்தித்து எழுதுகையில்தான் எழுத்தில் ஆழமும் அழகும் மிளிர்கிறது.
எனக்கு ஆய்வும் களப்பணியும் ஒன்றுதான். பெரும்பாலும் சிந்திப்பது வாசிப்பது எழுதுவது எல்லாம் சாதிகளைப் பற்றியும் பால்புதுமை (gender queer) பற்றியும்தான். Egalitarians மூலம் சாதிகளைப் பற்றி (குறிப்பாக தமிழகத்து சாதிகளைப் பற்றி) நிறைய தெளிவு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். சமீபத்தில் எனக்கு எழும் ஆய்வுப்புலக் கேள்விகள் Egalitarians-ன் பணிகளின் மூலமாகவே கிடைக்கின்றன.
கனவுபோல்தான் இருக்கிறது இந்த ஓராண்டுப் பயணம். புதிய புதிய நண்பர்கள், அனுபவங்கள். இந்த ஓராண்டில் என் சொந்த வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சினைகள் – காதல் தோல்வி, PhD சீட் கிடைக்காதது, ஊரடங்குத் தனிமை, வீட்டுப் பிரச்சினை, நிலத் தகராறு, பிடிக்காத வேலை இப்படி எத்தனையோ. இதை எழுதிக்கொண்டிருக்கையில் இருபத்தைந்திலிருந்து இருபத்தாறில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் அதிக மகிழ்ச்சியாக இருந்த ஆண்டு என்றால் கடந்த ஓராண்டுதான். அதற்கு முக்கிய காரணம் Egalitarians. ஆற்றாமையால் புலம்பித் தீர்ப்பதைவிட கத்துக்குட்டித்தனமாக எதையாவது செய்தாலும் செய்கிறோம் என்ற உணர்வே நிறைவளிக்கிறது. கடந்த ஆண்டு துவங்குகையில் முழுதாக பத்துபேர்கூட இருக்கவில்லை. இந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 60 பேர். பெரும்பாலோர் ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லை. எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் சமயங்களில் முட்டுச்சந்தில் போய் நின்று தவித்த தருணங்களும் உண்டு. இப்போது எதைச் செய்கிறோம் என்ற தெளிவு நம்மிடம் ஓரளவு இருக்கிறது. மக்கள் நம்மைக் கவனிக்கிறார்கள். சமீபத்தில் IIT Madras ல் பேராசிரியர் ஒருவர் சாதிக்கொடுமையால் பணிவிடுப்பு செய்த போது சில ஊடகங்கள் அச்சம்பவம் குறித்து நம்முடைய கருத்தைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பின. நமக்கும் IIT களுக்கும் எந்தத் தொடர்போ பகையோ கிடையாது. இருந்தும் நம்முடைய கருத்துக்கும் செவிமடுக்க மக்கள் தயாராயிருக்கிறார்கள். இது நமக்கிருக்கும் பொறுப்பை உணர்த்துகிறது.
சமயங்களில் தோன்றுவதுண்டு – நம்மீது சாணிவீச இன்னும் ஒருவர்கூட கிளம்பவில்லையே நாம் சரியானதைத்தான் செய்கிறோமா. நாம் இதுநாள்வரை நம் சக்திக்குட்பட்டதை, நம்மால் இயன்றதைத்தான் செய்து வருகிறோம். நமக்கு சவாலாக இருக்கும் எதன்மீதும் இன்னும் நாம் கைவைக்கவில்லை. நமக்கு எது முக்கியம் என்று தோன்றியதோ அதைத்தான் செய்துவருகிறோம். நம் மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோமா என்று தெரியவில்லை. களத்தில் கால்பதிக்கவில்லை இன்னும்.
நமக்கு நம்மிடையே இருக்கும் சவால்களும் அதிகம். முழுநேரத்தையும் களப்பணிக்காக அற்பணிக்குமளவுக்கு நம்மில் எவருக்கும் வசதியுமில்லை, துணிவுமில்லை. தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலத்தவரும் நம்முடன் கைகோர்க்கத் தயாராயிருக்கின்றனர். மொழி ஒரு தடைதான். நண்பர்களுக்கு நடுவே இறுக்கமும் தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் நம்பிக்கையிருக்கிறது – நாம் நம்முடைய எல்லைகளை விஸ்தரிக்கையில் கனவுகளை பிரம்மாண்டமாக்குகையில் இந்த இறுக்கங்களும் தயக்கங்களும் உடையும்.
Egalitarians என்றும் வற்றாப்பெருநதியாய், அமைப்புக்கும் அரசுக்கும் வெளியே நின்று, நீதியின் மானுட அறத்தின் அன்பின் குரலாய் என்றும் நிலைத்திருக்க வேண்டும். நாம் செய்யக்கடவதெல்லாம் நம் கூட்டுக் கனவின் எல்லைகளை விரிப்பதும் வலுவாக்குவதும்தான்.