Egalitarians – உடனான என் ஒரு வருட பயணம்

கடந்த வருடம்(2020) கொரோனா உத்தரவின் பேரில் வீட்டடங்கி இருந்த காலம். சரியாக ஜூலை மாதம் 7ம் நாள் சமூக ஆர்வலர் சாலின் மரியா லாரன்ஸ்- மேடம் அவர்களது முகநூல் பதிவில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

பவானி என்ற மாணவி சாதிய வன்கொடுமையினால் இறந்து போன செய்தி. மற்ற சாதிய ரீதியான வன்முறை போல் இதனைக் கடந்து செல்ல முடியவில்லை. காரணம் அந்த மாணவி, நான்காண்டுகளுக்கு முன் நான் பயின்ற அதே கல்லூரியில் பயின்றவள். நான் சுற்றித்திரிந்த அதே கல்லூரி வளாகம், அதே வகுப்பறை, ஆசிரியர்கள், மேடை அவளுக்கும் பரிட்சயம். அங்கிருந்த ஒரு உயிர் இன்றில்லை எனும் பொழுது என் இதயம் ரணமானது. தாங்கிக்கொள்ள முடியாத பதற்றத்துடன் நண்பர்களுக்கு அச்செய்தியை அனுப்பி விசாரித்தேன். அவர்களுக்கும் நான் சொல்லி தான் தெரிந்தது. இந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய நண்பர்களனைவரும்  ஜூனியர்களையும், நெருக்கமாகவுள்ள கல்லூரி ஆசிரியர்களையும் அழைத்துப் பேசினோம். ஆனால் சில ஊகங்களைத் தவிர பெரிதாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இது தொடர்பான பிற விஷயங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஒரு மெய்நிகர் (virtual) சாதி சங்கம் போல் கல்லூரியில் இயங்கும் ஆதிக்க சாதி வாட்ஸ்அப் குழுக்களும், சாதியை உயிர்ப்புடன் வைத்திருக்க அது செய்யும் லீலைகளும் தான் அது.

இதுபற்றி அரசல் புரசலாக முன்பே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அப்போது அலட்சியமாக இருந்துவிட்டோம். ஆனால் அதன் விளைவாக ஒரு உயிர் பலியாயிருப்பதன் மூலம், பவானியின் இறப்பிற்கு நாங்களும் ஒரு காரணமாகிவிட்டோம். இந்த குற்றவுணர்ச்சியே எங்களைப் பற்றிக்கொண்ட நெருப்பு. இன்னும் அலட்சியமாக இருப்பதில் பொருளில்லை என்று முடிவெடுத்தோம். அவ்வாறு உருவானதே Egalitarians டெலிகிராம்  குழு

நண்பர்கள் நால்வர் இணைந்து பல்கலைக்கு சில தகவல்களைக் கேட்டு தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். ஆனால் ஆரம்ப நிலையில் எனக்கு இந்த சட்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. யாரும் இதற்கு செவிமடுக்கப் போவதில்லை என நண்பர்களிடம் கூறி வந்தேன். இருப்பினும் முயற்சிப்போம்! என்ற மன நிலையே அந்நாளில் எனக்கிருந்தது. என் கணிப்பின் படியே அவர்களின் பதில் மிக நகைப்பிற்குரியதாய் இருந்தது. ஆனால் தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடு என சென்றோம். இறுதியாக தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தது.

இதுமட்டுமல்லாது ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து  நாங்கள் பெற்ற  RTI தகவல்கள் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவையனைத்தும் RTI மீதான என் நம்பிக்கையை வார்த்தெடுத்தன.

இவ்வாறாக நாங்கள் இந்த சமூகப்பணிக்குள் நுழைந்தோம். ஜூலை 15ம் நாள் நாங்கள் விண்ணப்பித்த முதல் RTI-ன் நினைவாகவே அந்த நாளை Egalitarians-ன் தொடக்க நாளாக தேர்ந்தெடுத்தோம். டிசம்பர், 2020 அன்றுதான்  நாங்கள் கூகுள் மீட் எனும் ஒரு மெய்நிகர் ஊடகத்தின் வாயிலாக Egalitarians-ன் முதல் கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் Egalitarians-ன் இலட்சியம் (vision), குறிக்கோள்கள் (objectives) ஆகியவற்றை வரையறுத்தோம். அவற்றை வாக்கெடுப்பின் வாயிலாக இறுதியாக்கினோம். “சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குதல்” எனும் உயரிய இலட்சியத்துடன் இயங்கும் அமைப்பிற்கு கண்டிப்பாக சில தெளிவான வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் தேவையென உணர்ந்து, குழுவின் விதிமுறைகளை உருவாக்கினோம். அன்றிலிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் Egalitarian ஆனோம்.

அந்த விதிமுறைகளில் எனக்கு நெருக்கமான சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். அமைப்பின் அனைத்து முடிவுகளும் வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த ஜனநாயக முறை Egalitarians போன்ற அமைப்பிற்கு மிக முக்கியம். அனைவருக்கும் ஒரு வாக்கு. அவர் நேற்று இணைந்த Egalitarian-ஆக இருந்தாலும் சரி, பல ஆண்டுகள் Egalitarian-ஆக இருந்தாலும் சரி. மேலும் ஜனநாயக்தின் குறைபாடாக சுட்டப்படும் பெரும்பான்மையின் அராஜகத்தைத் தடுக்கும் பொருட்டு நடத்தப்படும் வாக்கெடுப்பிற்கு பிந்தைய கருத்துகேட்பு நடவடிக்கைகளை முற்போக்கான ஒன்றாகவே பாவிக்கிறேன். 

மேலும் இந்த அமைப்பு வன்முறைகளுக்கு எதிரான, ஆக்கப்பூர்வ விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும். அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கருவிகளையும் இது பிரயோகிக்கும். பேனாவின் முனைக்கு பலம் அதிகம் என்பதை உணர்ந்தே இது செயல்படும். இந்த புரிதல் மிக முக்கியமானது. பெரும்பான்மையான இளைஞர் பட்டாளத்தை உள்ளடக்கிய இவ்வமைப்பு இளமை துடிப்பில் சட்டத்திற்கு புறம்பானதாக சென்றுவிடாமல், மிகவும் தேர்ந்த முதிர்ச்சியுடன் Constitutional morality-ஐ பின்பற்றுவது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல விரும்புவது இவ்வமைப்பின் வெளிப்படைத்தன்மை. நிதி நிலைமையை Egalitaria-ல் விவரிப்பது, எந்த மின்னஞ்சலையும் அனைவருக்கும்  பகிர்ந்துகொண்டு கருத்துக்கேட்பது, மின்னஞ்சலுக்கு பதிலளிக்க அனைவருக்கும்  சமமான வாய்ப்பை அளிப்பது என இதன் வெளிப்படைத்தன்மைக்கு உதாரணம் கூறலாம். “தலைமையற்ற தன்னார்வ” மாடலை பின்பற்றும் இவ்வமைப்பு இதனை ஒரு இறுக்கமான அமைப்பாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது. Egalitarians ஒரு சமூக இயக்கம். ஒரு நதி போல இது சுயமாக தன்னை வார்த்துக்கொண்டது. சாதியற்ற சமத்துவ சமூக அமைப்பை விரும்பும் யாரும் இதில் கலந்துகொண்டு, சமூகத்தைப் பற்றிய தனது கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம். இவற்றையே இதன் முக்கியமான தனித்தன்மையாகப்  பார்க்கிறேன்.

Egalitarians – ஒரு சுயம்பு

நண்பர்களிடம் கூறும் போது Egalitarians-ஐ ஒரு சுயம்பு என்பேன். காரணம் இது தனக்கான மனிதர்களைத் தானே இனம் கண்டு கொண்டது. ஒவ்வொரு முடிவும், செயலும் அறிமுகப்படுத்தும் போது ஒரு விதமாகவும் இறுதிமுடிவு மிகவும் மெருகேறிய ஒன்றாகவும் இருக்கும். ஒவ்வொரு Egalitarians நண்பர்களும் அம்முடிவில் தங்களது கருத்தை பதிவு செய்யும்போது மெருகேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொடக்கத்தில் Egalitarians-ல் ஒருவர் சேர வேண்டும் என்றால் நண்பர்களின் பரிந்துரையும், சிறிய பெயரளவிலான வாக்கெடுப்பு முறையும் நடைமுறையிலிருந்தது. EG ராம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவற்றிலுள்ள ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டினார். “வெறும் பரிந்துரையின் பேரில் ஒரு நபரைப் பற்றிய எந்த அறிதலும் இன்றி பெயரளவில் வாக்களிப்பது எனக்கு உவப்பானதாக இல்லை” என்றார்  மேலும் “எவ்வித வாக்கெடுப்புமின்றி ஒரு நபரை நாம் Egalitarians-ல் இணைத்துக்கொள்வோம். ஏனெனில் ஓட்டெடுப்பிற்கு மிகவும் காலதாமதமாகிறது.இதனால் நாம் நமது எண்ணிக்கையை உயர்த்த முடியாது.” என்ற ஆலோசனையையும் கூறினார்.

“ஒரு நபரைப் பற்றிய அறிதலின்றி எவ்வாறு வாக்களிப்பது” என்ற அவர் சுட்டிக்காட்டிய குறைபாட்டில் மற்ற அனைவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் அதற்களித்த தீர்வில் பெரும்பான்மையினருக்கு உடன்பாடில்லை‌. இதற்காக தொடர்ந்து விவாதித்தோம். அதன் விளைவாக பிறந்ததே உறுப்பினர் படிவம். இதில் கேட்கப்படும் கேள்வி மூலம் சமத்துவம், இட ஒதுக்கீடு, திருநர் நலன் போன்றவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு அதன்பேரில் அவர்களை Egalitarians-ல் இணைத்துக்கொள்வோம் என ஒருமனதாக முடிவெடுத்தோம். இந்த நிகழ்வே என்னுடைய முந்தைய அவதானிப்பிற்கு வலு சேர்க்கும்.

இவ்வாறாக Egalitarians ஒரு தன்னிச்சையான இயக்கம். இதன் வளர்ச்சியை எவர் ஒருவரும் தீர்மானிக்கவில்லை. தான் தேர்ந்தெடுக்கும் மனிதர்களைக் கொண்டு தன்னைத்தானே Egalitarians- இயக்கிக்கொள்கிறது. இதனாலேயே இது ஒரு சுயம்பு.

Egalitaria கற்பித்த பாடங்கள்

Egalitarians தனது மாதாந்திர செய்தி இதழான Egalitaria-வை ஜனவரி, 2021 முதல் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று பிரசுரித்துவருகிறது. முன்பே நான் குறிப்பிட்டுள்ளபடி பேனா முனையின் பலம் அறிந்த இயக்கம் இது. இதன் Egalitaria (C – word) மூலம் சாதி மற்றும் சமத்துவம் பற்றிய நவீன, சமகால கருத்துக்களை கூறும் கட்டுரைகளையும், ஆராய்ச்சிகளையும் இனம் கண்டு அளிக்கிறது. இதன் மூலம் சாதி, சமத்துவம் பற்றி சமகாலத்தில் எழும் மிகவும் கூரிய அவதானிப்புகளை நான் தெரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு meritocracy எனும் வாதத்திற்கு பின்னால் இருக்கும் அபத்தமான சாதிய வன்மத்தை C – word பிரிவில் வெளியான பல கட்டுரைகளின் வாயிலாக இனம் கண்டுகொண்டேன். இத்தகைய, சமகால ஆராய்ச்சியில் எழுந்துவரும், சமத்துவம் பற்றிய புரிதல்கள் சமத்துவத்தின் மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்தின.

மேலும் Egalitaria-வில் உறுப்பினர்கள் சிறப்புக் கட்டுரைகள் எழுதலாம் என்பது ஒரு அறிய வாய்ப்பு. நான் இந்த வாய்ப்பை ஓரளவுக்கு பயன்படுத்தி எழுதி வருகிறேன். இது எனக்கு மிகப்பெரிய அனுபவம். ஒவ்வொரு நண்பர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆளுமையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதற்காக நண்பர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறேன்.

சரியாகச் சொன்னால் ஜனவரி மாதம் வாக்கில் Egalitarians குழுக்களாக பிரிந்து செயல்பட முடிவெடுத்தது. அப்போது குறைவான அளவிலேயே உறுப்பினர்கள் இருந்தனர். எனவே எல்லோரும் இரண்டு மூன்று குழுக்களில் இருப்பது அவசியம். நான் ஆவணக்குழு, தொழில்நுட்பக்குழு மற்றும் ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தேன். ஆவணக்குழுவின் கீழ்,  சாதிய ரீதியான வன்முறைகள், பழங்குடியின மக்களின் குரல்கள், மற்றும் திருநர் சமூகம் பற்றி செய்தித்தாளில் வரும் செய்திகளை ஆவணப்படுத்தும் வேலையைச் செய்து வந்தேன். தினமும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று சாதிய ரீதியான தாக்குதல்கள், ஆணவக்கொலைகள், பழங்குடியின நிலவுரிமை மறுப்பு போன்ற செய்திகள் வந்து குவியும். இவற்றைப் படிக்கும் போது மனம் மிகவும் கனத்து, தூங்கும் போது புலம்பிய நாட்களும் உண்டு. இவை எனை மிகவும் பாதித்த அனுபவம்.

Egalitarians – பசுமையான நாட்கள்

மார்ச் மாத இறுதியில் EG ஆனந்த் டாக்டர்.அம்பேத்கர் நினைவு சிறப்புரைக்கு வேண்டி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்திற்கு அவர் பதிலளித்த நாள் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! “வெண்முரசு எழுதிய அதே எழுத்தாளர் நமை (Egalitarians) பொருட்படுத்தியும் ஒரு உரையை நிகழ்த்தப்போகிறார்” என்று எண்ணி எண்ணி நானும் என் நண்பர்களும் துள்ளி குதித்தோம். உண்மையில் ஜெயமோகனின் உரைக்கு Egalitarians வரலாற்றில் என்றும் ஒரு தனியிடம் உண்டு. அந்த இணையவழி உரையில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல நலம்விரும்பிகளின்  தொடர்புகளும், ஊக்கமும் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. மேலும் வேகம் கொண்டு செயல்படத் தூண்டியது. குறிப்பாக அந்த காலகட்டத்தில் தான் Egalitarians பல மனிதர்களை தனதாக்கிக் கொண்டது. அந்த நாட்களில் என் மனநிலையை விவரிக்க எத்தனை வரிகள் எழுதினாலும் போதாது.

மே மாதம் (2021) என நினைக்கிறேன். EG ஹரிவர்தன் ஐ.ஐ.டி க்கு விண்ணப்பித்த RTI- க்கு பதில் கிடைத்தது. இட ஒதுக்கீட்டை சிறிதும் பொருட்படுத்தாத அந்த உயர் கல்வி நிறுவனத்தின் நிலையை ஊடகத்திற்கு எடுத்துச் சென்றோம். முதன் முதலாக Hindustan Times அந்த செய்தியைப் பிரசுரித்தது. அப்போது ஊடக அங்கீகாரம் Egalitarians-க்கு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்வுற்றேன். அதையடுத்து தொடர்ச்சியாக ஐ.ஐ.டி முன்னாள் இன்னாள் மாணவ அமைப்புகளின் (APPSC) தொடர்பு, அவர்களுடனான கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் Egalitarians-ன் கடமை கடலளவு பெரிது என்பதை உணர்ந்தேன். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

விழுமியங்களால் இணைந்த கரங்கள்

Egalitarians- மூலம் பலரைப் போல எனக்கும் ஒரு நட்பு வட்டம் கிடைத்தது. அனைவரையும் இணைப்பது உயரிய விழுமியங்கள் என என்னும்போது கண்ணில் நீர் ததும்புகிறது. ஒவ்வொருவரும் இதே போல சாதியின் பெயரால் அல்லாமல், மதத்தின் பெயரால் அல்லாமல், தேசத்தின் பெயரால் அல்லாமல் மனிதம் எனும் ஓர் உயரிய விழுமியத்தின் பால் இணைவார்களெனில் Egalitarians கனவு காணும் சாதியற்ற சமத்துவ சமூகம் உண்மையில் சாத்தியமே…

Published by Egalitarians India

Egalitarians is a leaderless, voluntary, and not-for-profit group deeply committed to the principle of equality. We are a group of volunteers working with a common understanding for a common goal of creating a casteless egalitarian society.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: