தலித் மாணவர்களுக்கு தேசிய-உதவித்தொகை மறுப்பு

‘இந்திய’ பாடப்பிரிவுகளை அயல்நாட்டில் படிக்க விரும்பும் தலித் மாணவர்களுக்கு தேசிய-உதவித்தொகை மறுப்பது ஏன்?

சித்தார்த் ஜோஷி, தீபக் மல்கான்

The English version of this article was published in The Wire on 20.02.2022.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய அயலக கல்வி உதவித்தொகைத் திட்டம் (National Overseas Scholarship) தலித், ஆதிவாசி, மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அயல்நாட்டிலுள்ள உயர்தரப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைக் கல்வியை (முதுநிலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகள்) தொடர நிதியுதவி வழங்குகிறது. இந்த உதவித்தொகை திட்டம் 1954 இல் தொடங்கி ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

சுமாரான பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் (2021-ம் ஆண்டில் ரூ. 20 கோடிக்குக் கீழ்), இந்த உதவித்தொகை திட்டம் 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க முற்படுகிறது (இந்த ஆண்டு 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதில் 115 தலித் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது). இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளில், சுமார் 50 முதல் 70 மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது (கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டது போல தற்காலிக உதவித்தொகை பயனர்களின் எண்ணிக்கையானது இறுதி பயனர்களின் எண்ணிக்கையைவிடவும் குறைவாக இருப்பதை சமூக நீதி அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை).

அட்டவணை: 2016-17 லிருந்து 2021-22 வரையிலான தேசிய அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் இறுதி பயனர் விவரங்கள்

ஆண்டு2021-222020-212019-202018-192017-182016-17
ஆண்285132304730
பெண்112214201816
மொத்தம்397346506546
தரவு: திரு. ஏ. மேஷ்ராம் அவர்களால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 5.53 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் பயில்கின்றனர். இதனுடன் ஒப்பிடும்போது, தேசிய அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் இலக்கு வெறும் 100 மாணவர்களே (அல்லது எங்களைப்போன்ற இரசாயன பொறியாளர்களின் மொழியில் சொல்வதெனில் ஒரு மில்லியனுக்கு 180 பாகங்கள் அதாவது 180 பிபிஎம்). நடைமுறைக்கு ஒவ்வாத விதிவிலக்குகளுடன் திட்டத்தின் மோசமான வடிவமைப்பு மற்றும் ஒரு தெளிவற்ற அர்ப்பணிப்பில்லாத செயல்பாட்டின் காரணமாக இறுதி பயனர்களின் எண்ணிக்கை 40 பிபிஎம்க்கு அருகில் உள்ளது. உதாரணத்திற்கு, ஓர் அரசு கல்லூரியில் சாதாரண உதவித்தொகையுடன் எம்ஃபில் (M.Phil) பயிலும் எந்தவொரு மாணவரும் தேசிய அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் வருமான உச்சவரம்பை எளிதில் கடந்திடக்கூடும். இந்தவொரு காரணத்தின் பொருட்டு மாணவர்கள் சிலர் எந்தவொரு உதவித்தொகையும் இல்லாமல் ஓராண்டு காத்திருக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, NOS உதவித்தொகைத் திட்டம் அனைத்து ஆய்வுத் துறை மாணவர்களுக்குமானதாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல் “இந்திய கலாச்சாரம்/பாரம்பரியம்/வரலாறு/சமூகம் தொடர்பான ஆய்வுகள்” உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியற்றதாக அறிவிக்கிறது. மேலும், எந்தெந்த ஆய்வுகள் மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழடங்கும் என்பதை “NOS-ன் தேர்வு மற்றும் மதிப்பிடும் குழுவே தீர்மானிக்கும்.” இந்தத் திடீர் மாற்றம் இந்த ஆண்டிற்கான இறுதி விண்ணப்ப காலக்கெடுவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டிருப்பது வரும் கல்வியாண்டில் இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோருக்கு பேரிடியாக விழுந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள உயர்தரப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ள IIMBயைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் இருவர் NOS உதவித்தொகையைத்தான் நம்பியிருந்தனர்.

இத்தகைய கடுமையான முடிவை எடுப்பதற்கு முன்பு அமைச்சகம் பொதுவெளியில் கருத்து கேட்கவில்லை. 1954-55 இல் NOS திட்டம் தொடங்கப்பட்டபோது, அது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளுக்கு மட்டுமேயானதாக இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மானுட மற்றும் சமூக அறிவியல் துறைகள் 2012 இல் சேர்க்கப்பட்டன.

2006 ஆம் ஆண்டு பாராளுமன்ற நிலைக்குழு இந்த விலக்கின் பின்னணியில் உள்ள காரணத்தை கேள்வி எழுப்பியபோது, அமைச்சகம் அளித்த பதிலில், “இந்தியாவில் போதுமான வசதிகள் உள்ள பாடங்கள் வெளிநாட்டு உதவித்தொகைக்கான பாடங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை” என்றது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் தங்கள் கல்வியைத் தொடர விரும்புவதற்கு ஒரே காரணம் வெளிநாட்டின் சிறந்த வசதிகள் மட்டுமே என்று இந்த வாதம் கருதுகிறது. வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்திய கல்வி நிலையங்களில் வெளிப்படையான மற்றும் மறைமுகமான சாதிப் பாகுபாடுகளை சந்திப்பது அசாதாரணமானது அல்ல. ஒரு அயலக கல்விநிறுவனத்தில் இருந்து முனைவர் பட்டம் பெறுவது, உயரடுக்கு இந்தியக் கல்விநிறுவனங்களில் ஆசிரியப் பதவிகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த அறிஞர்கள் (ஒருவர் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறாவிட்டாலும் கூட) தினசரி சகித்துக்கொள்ளும் ‘தகுதியில்லாதவர்’ என்ற வசைபாடல்களிலிருந்து ஒரு அயல்நாட்டுப் பட்டம் சாத்தியமான தப்பிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

புலமையான சமூக மற்றும் மானுடவியல் ஆய்வுகளுக்கு என்றும் பாராமுகம் காட்டிவரும் இந்த அரசிடமிருந்து இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் வந்திருப்பது வியப்பளிக்கவில்லை. ஆனால், தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களுக்கான நிதி ஏன் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை இதற்குப் பின்னாள் ஒளிந்துள்ள “அரசியல் அறிவியலின்” கோழைத்தனத்தாலோ பிரிவினைவாத தேசியவாதத்தாலோ மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

சமீபத்திய மாதங்களில், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள விழிப்பான தலித் நடுத்தர வர்க்கம், இந்தியாவின் சாதிய படிநிலையின் தீங்கான விளைவுகளை மேலைக் கல்வி நிறுவங்களில் அங்கீகரிக்கச்செய்துள்ளது. சாதிப் பாகுபாட்டை ஊக்குவித்ததற்காக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், பல முக்கிய பல்கலைக்கழகங்கள் சாதியை பாதுகாக்கப்பட்ட பட்டியலின் கீழ் கொண்டுவந்துள்ளன. உலக பிராமணியத்தை முதலில் தகர்க்காமல் “உலகளாவிய இந்துத்துவத்தைத் தகர்ப்பது” ஏன் வெற்றியடையாது என்று இயம்புவதில் அயலக தலித் அறிஞர்கள் முன்னணியில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த தலித்துக்கள், அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் இந்தியர்களுக்குப் பயனளிக்கும் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளை “உயர்” சாதி மாணவர்கள் எப்படி முற்றிலுமாக அபகறித்துக்கொள்கின்றனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, இந்த மேலாதிக்கம் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளில் புரையோடிக்கிடக்கிறது. இந்தத் துறைகளில் மிகவும் வெற்றிகரமான இந்திய வம்சாவளி அறிஞர்களைப் பட்டியலிட்டால், இந்திய அதிகாரவர்க்கத்தின் உயர்மட்டத்திலுள்ள குடும்ப உறவுகளைப் பயன்படுத்தி அவர்களை நட்சத்திரத்திர அந்தஸ்த்திற்கு இட்டுச்சென்ற ஆய்வுகளைச் செய்தவர்களே ஆதிக்கம் செலுத்துவர். முன்னணி பன்னாட்டு அமைப்புகளின் அதிகாரமட்டத்திலிருக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் பெரிதும் ஒப்புக்கொள்ளத் தயங்கும் பிராமணிய வல்லாதிக்கக் குழுக்களை விழிப்பான புலம்பெயர்ந்த தலித் சமூகத்தினர் அப்பட்டமாக்கியுள்ளனர். வெள்ளை ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் பிராமண மேட்டிமை தங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிறப்புரிமைகளை வசதியாக மறந்துவிடுகிறது.

மேலும், இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பிராமணிய ஆதிக்கத்தின் பிடியிலிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதிலும் புலம்பெயர் தலித் மக்கள் முக்கியப்பங்காற்றுகின்றனர். எங்களுடைய மதிப்பீட்டின்படி, எங்களின் பெங்களூரிலுள்ள இந்திய மேலாண் நிறுவனத்தில் (IIM பெங்களூர்) குறைந்தபட்சம் 80% பேராசிரியர்கள் இந்தியாவின் வெறும் 7 சதவிகிதத்திற்கும் கீழுள்ள இரு “உயர்” சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் (IIM பெங்களூர்) ஒரு பிராமண பேராசிரியர் கல்வி நிறுவனத்தின் பொதுச் சொத்தை உபயோகித்து “ஸத்சங்கம்” தொடர்பான காணொளிகளை தனது வலைப்பக்கத்தில் பரப்புகிறார்.  சிறந்த மேலைக் கல்வி நிறுவனத்தில் படித்த ஒரு நம்பிக்கைவாய்ந்த பகுஜன் அறிஞர் இந்த மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

எதிர்ப்பாளர்களைக் களைவதுதான் எந்தவொரு சர்வாதிகாரத்தின் இன்றியமையாத உத்தி. இந்தியக் குடியரசின் இறையாண்மை மீது நடந்தேறிவரும் தாக்குதல்களுக்கு மத்தியில், அரிசின் இந்த சுற்றறிக்கை வெகு சில மாணவர்களை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருப்பதால் குந்தகம் ஏதும் இருக்கப்போவதில்லை என்று கருதுவது எளிது. ஆனால் அது மிகப்பெரிய தவறு.

நவீன பேரரசுகளுக்கு மிகவும் வெற்றிகரமான சவால்கள் பேரரசின் “மொழியில்” தேர்ச்சி பெற்ற தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து வந்துள்ளன. ஒரு காந்தி, ஒரு அம்பேத்கர் அல்லது ஒரு நேரு அனைவரும் பேரரசின் பெருநகர மையங்களில் படித்தவர்கள்தான். நூற்றாண்டுகால ஆதிக்கத்தையும் அடிபணிதலையும் கேள்விகேட்க ஒரு படித்த பகுஜன் தலைமுறை வந்திருப்பது பிராமணிய பேரரசுக்கு (இப்பேரரசை எவ்விலை கொடுத்தேனும் பாதுகாக்க உறுதிபூண்டிருக்கும் இன்றைய அரசுக்கும்) ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலே. அன்று பரோடா அரசு கொலம்பியா பல்கலையில் அம்பேத்கரின் கல்விக்கு நிதியளித்ததால் நவீன இந்தியாவின் வரலாறு மாற்றப்பட்டது. இன்னொரு அம்பேத்கரின் எழுச்சியை நம்முடைய ஆட்சியாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை, முடியாது. நமது சிறந்த பொதுக்கல்வி நிறுவனங்கள் இந்தவொரு காரணத்திற்காகவே தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகின்றன.  ரோஹித் வெமுலாவின் மனதை உலுக்கும் தற்கொலைக்கடிதம் பிராமணிய பேரரசுக்கு ஒரு மரண அச்சுறுத்தலைக் குறிக்கிறது.

சித்தார்த் ஜோஷி IIM பெங்களூரில் ஆராய்ச்சி மாணவர். தீபக் மல்கான் IIM பெங்களூரில் பேராசிரியராக உள்ளார். இவை தனிப்பட்ட கருத்துக்கள்.

இக்கட்டுரையின் ஆங்கில மூலம் The Wire-ல் 20.02.2022 அன்று வெளியானது.

தமிழில்: Egalitarians நண்பர்கள்

Published by Egalitarians India

Egalitarians is a leaderless, voluntary, and not-for-profit group deeply committed to the principle of equality. We are a group of volunteers working with a common understanding for a common goal of creating a casteless egalitarian society.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: