இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில், மாரி செல்வராஜ் எழுதி வம்சி பதிப்பகம் வெளியிட்ட ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன்.
இந்த புத்தகத்திற்கு வண்ணதாசன் முன்னுரை எழுத, இயக்குனரும், மாரியின் குருவுமான ராம் ‘ஒரு ஊர் ஒரு நதி ஒரு பெருங்கடல்’ என்னும் உரையை எழுதியிருக்கிறார். ராம் எழுதிய இந்தக் குறிப்பின் வழி ராமுக்கும் திருநெல்வேலி தான் சொந்த ஊர், அவரின் தாத்தா, அப்பா ஆகியோர் வாழ்ந்த ஊர் என்று அறிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் ராமின் திருநெல்வேலியும், மாரியின் திருநெல்வேலியும் ஒன்றல்ல.
ஆம்! ராமின் ஸ்ரீவைகுண்டமும், மாரியின் புளியங்குளமும் ஒன்றில்லை தான். அவற்றை தாமிரபரணி எனும் நதி பிரித்திருந்தது. அந்த பொல்லாத நதி தான் எத்தனை கோர முகங்களைப் பார்த்தும், இரத்தங்களை புசித்தும், எவ்வித சலனமுமின்றி ‘இம்’-என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
கற்றது தமிழ் படப்பிடிப்பின் போது திருநெல்வேலி சென்ற ராம், மாரியை மட்டும் அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்குப் போகிறார். அப்போது அவர்களுக்கிடையேயான உரையாடல்,
‘ஏன்டா திருநெல்வேலி-ல தானே இருந்த? இந்த ஊருக்கு வழி தெரியாதா?’ என்று ராம் கேட்க
‘இல்ல சார். நாங்கெல்லாம் அங்க போக மாட்டோம்’ என்று புன்னகைக்கிறார் மாரி.
ஒரே ஊர் இரு மனிதர்களுக்கு வேறுவேறாகக் காட்சிதர முடியுமா?
முடியும். உதாரணமாக பரியேறும் பெருமாள் படத்தில் வரும் ஜோ-வின் அப்பா ஜோ-வுக்கு ஒரு மனிதராகவும், பரியனுக்கு வேறு ஒரு மனிதராகவும் காட்சி தருவதைப் போல் தான் இதுவும். இந்த உலகமும் தலித் பார்வையில் ஒரு மாதிரியாகவும், தலித் அல்லாதோர் பார்வையில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது.
இவையாவும் ராமின் உரையில் இருந்த அந்த இரண்டு வரிகளின் மூலம் தூண்டப்பட்ட என் எண்ண ஓட்டம். இதனால்தானோ என்னவோ அவ்வரிகளைக் கடக்கும்போது எனக்கு கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
‘நாய்க்குட்டி சுரேஷ்’ கதை தொடங்கிய ஒரு உணர்வெழுச்சி அப்படியே அடுத்தடுத்த கதைகளை படித்து முடிக்கும்வரை குன்றாமல் இருந்தது.
சுரேஷ்-க்காக இரங்கினேன். பத்மாவிற்காக இரங்கினேன். அவள் வைத்து வந்த அடுக்குசெம்பருத்தியின் அர்த்தம் புரிந்து மரித்தேன். தட்டான் பூச்சிகளுக்கான வீட்டைக் கண்டு சிலாகித்தேன் (உண்மையில் இனிமேல் ‘தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்’ என்று தான் பாடத்தோன்றுகிறது.)

மாரியின் கதையில் வரும் செண்பகவள்ளி என் வகுப்பு முனியம்மாளை ஞாபகப்படுத்தினாள். சென்பகவள்ளிகளுக்கும், முனியம்மாக்களுக்கும் பெயர் மட்டுந்தான் வித்தியாசம். செண்பகவள்ளிகளை வைத்து செய்யப்படும் பகடிகள் தான் வகுப்பறையை சிரிப்பில் ஆழ்த்தும் கருவியாக ஆசிரியருக்கு இருந்திருக்கிறது. அவளுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததை வைத்துத்தான் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் மூளை கொஞ்சம் புடைப்பு என்பதைப்போன்ற “மெரிட்” கட்டுக்கதைகள் கட்டப்படுகின்றன.
‘முதல் கல்’ என்ற கதையில் வரும் வசந்தி அக்கா-வின் சிதைந்த சடலம், அக்கதையில் வரும் நண்பர்களின் காமங்களின் மீதும் தன் துர்நாற்றத்தை வீசிவிட்டுச் செல்கிறது.
மாரி இந்த கதைகளில் புனிதங்களையும் அவற்றின் பின்னிருக்கும் அபத்தங்களையும் காட்டுகிறார். அதோடு அபத்தங்களின் அழகையும் காட்டுகிறார். கொள்கை கோட்பாடென திரியும் புனிதரான அப்பாத்துரை மாமாவின் போஸ்டரில் சிறுநீர் கழிக்கும் கதைமாந்தர்கள், சேற்றில் புரண்டு வாழும் பன்றிகளுக்காக இரங்குகிறார்கள்.
கதிரேசன் மற்றும் முண்டன் மூலம் தலித்துகளுக்குள் இருக்கும் சாதிய இறுக்கத்தை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கும் ‘நின்றெரியும் பிண’த்தை எரிப்பது கடைக்கோடி வரை புரையோடி இருக்கும் சாதியின் தீ நாக்குகள் தான்.
‘எனக்கு ரயில் பிடிக்காது’ என்ற கதைதான் எனக்கு மிகவும் பிடித்தது. பேசாமல் ரயிலே அந்த மாட்டை கொன்றிருக்கலாம் என்று தோன்றியது. ஓர் உயிர் போவதின் கடைசி மணித்துளிகளை நம் கண்முன் நிறுத்துகிறது இக்கதை.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்ததைப் போல இருக்கும் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ ஒரு கதை மட்டும்தானா என்றால் அதுமட்டுமல்ல. அது ஒரு வரலாற்றுப்பதிவு. ஒரு பெரிய வரலாற்றுப் பேரலையில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த ஒரு கடையனின் காலப்பதிவுகள். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்குத் தெரியாது, உயிருக்கு பயந்து ஓடிய ஒரு சிறுவனால் இது பிற்காலத்தில் பதிவுசெய்யப்படும் என்பதை. வரலாறு எதையும் மறந்துவிடாது. பாதிக்கப்பட்டவனின் கதையில் தான் பல அபத்தங்களும் அபத்தவாதிகளும் வெளிப்படுவர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்கச்சொல்லி பிரிட்டனிடம் எதிர்பார்க்கிறோம். அதே சமயம் இந்த மாஞ்சோலை தொழிலாளர் படுகொலையை வரலாற்றிலிருந்து அகற்றப்பார்க்கிறோம். நாமெல்லாம் என்ன சமூகமோ!
மாரி செல்வராஜ், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், வம்சி பதிப்பகம் (2012), 200 பக்கங்கள்.