எங்களைப் பற்றி

Egalitarians

United for Equality

மதுரையில் உள்ள ஓர் அரசு கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு படிக்க வேண்டிய ஒரு தலித் மாணவி அவருடைய அறைத்தோழியாலும் உடன் பயின்ற மாணவிகளாலும் சாதிய வன்முறையால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, கடந்த ஆண்டு (2020) கொரோனாவினால் வீட்டிலிருந்த போது முகநூலில் செய்தி பரவியது. இதன் உண்மைத்தன்மையை அறிய நட்புவட்டத்தின் மூலம் கல்லூரியில் விசாரித்தோம். மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை எங்களால் அறிய முடியவில்லை. அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சினைகள் இருந்ததாகவும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாகவும் ஊகங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அம்மாணவி, அவரின் சாதி காரணமாக, அவரின் உடன் பயின்றவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதை உறுதிபடுத்திக் கொண்டோம். மறைந்த மாணவியின் புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் சில மாணவிகளை விசாரித்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோர் ஆளும் கட்சியின் பிரமுகர்களாதலால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவியின் மரணம் குறித்து விசாரிக்கையில் கல்லூரியில் சில ‘இடைநிலைச் சாதி’களின் அராஜகம் குறித்தும் அறிந்தோம். கல்லூரி விளையாட்டு மைதானம் தொடங்கி வகுப்பறை வரை சில இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தலித் மாணவர்களை சிறுமைப்படுத்துவதாக அறிந்தோம். சில சாதியைச் சேர்ந்த மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் தத்தம் சாதியைச் சேர்ந்த பிற மாணவர்களை ஒருங்கிணைக்கின்றனர். எந்த சாதி மாணவன் எச்சாதி மாணவியை காதலிக்கிறான் என்பதை கண்காணிக்கின்றனர். முதுனிலை மற்றும் முனைவர்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையிலும், புதிய பேராசிரியர் தேர்விலும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக சலுகை அளிக்கப்படுவதாக அறிந்தோம்.  

கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் இவ்வநீதிகளுக்கு எதிர்வினையாற்ற நினைத்தோம். மாணவர்சேர்க்கையிலும் புதிய பேராசிரியர் தேர்விலும் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா, தலித், ஆதிவாசி மாணவர்களுக்கான உரிய உரிமைகள் கிடைக்கின்றனவா (இன்னும் பிற) என்பனவற்றை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்திடம் தகவல்கள் கேட்டோம். பல்கலை அபத்தமான காரணங்களைக் கூறி தகவல்களைத் தர மறுத்துவிட்டது. மேல்முறையீட்டிற்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்தை அணுகினோம். கிட்டத்தட்ட பத்துமாத காத்திருப்புக்குப் பின் தகவல் ஆணையத்தின் தலையீட்டின் பேரில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு குறித்த தகவல்களை இரு வாரத்திற்குமுன் பல்கலை கொடுத்தது. எங்களின் பிற மேல்முறையீட்டு மனுக்கள் இன்னும் தகவல் ஆணையத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் George Floyd கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினையாக நடந்த #BlackLivesMatter இயக்கம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையில் நிலவும் நிறப்புறக்கணிப்பைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் ஒருவார காலம் ஆராய்ச்சி பணிகள், ஆய்வரங்கங்கள், வகுப்புகளுக்கு விடுப்பு வழங்கின. ரோஹித் வெமுலா (தற்)கொலையின் போதோ, அன்றாடம் தலித்துகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு எதிராகவோ இந்தியாவில் ஏன் #DalitLivesMatter இயக்கம் நடக்கவில்லை என்று பேராசிரியர் Deepak Malghan ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (பார்க்க). அதில் அமெரிக்க உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் கருப்பின மக்களின் மிகமுக்கியமான அங்கத்தையும் #BlackLivesMatter இயக்கத்தில் கருப்பின பேராசிரியர்கள்/ஆராய்ச்சியாளர்கள்/மாணவர்களின் பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவில் அதுபோல் ஒரு இயக்கம் உருவாகவேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்களில் தலித்துகளின் எண்ணிக்கை உயரவேண்டியதன் அவசியத்தை விவாதித்திருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்திருந்தாலும், IIM IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை (பார்க்க 1, பார்க்க 2, பார்க்க 3). IIM Ahmedabad இல் இன்றுவரை முனைவர் பட்ட படிப்பிற்கு இடஒதுக்கீடு இல்லை (சட்டப்போராட்டம் இன்றும் தொடர்கிறது). தமிழகத்து இருளர் பழங்குடிகளுக்கோ சாதி சான்றிதழ் கிடைப்பதே குதிரைக்கொம்பாய் உள்ளது (பார்க்க).

இப்பின்னணியில்தான் எங்கள் கல்லூரியில் செய்ததைப் போன்று பிற பல்கலையிலும் தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகிக்கத் தொடங்கினோம். தலித், ஆதிவாசி மற்றும் திருநர்களின் உரிமைகளுக்காக நாம் ஏன் ஒரு முறைசாரா அமைப்பாய் திரளக்கூடாது என்று நினைத்தோம். நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் என்று ஒரு இருபதுபேர் சேர்ந்து Egalitarians என்ற அமைப்பை ஜூலை 15 2020ல் உருவாக்கினோம்.