Egalitarians பற்றி
Egalitarians ஒரு ஜனநாயக, இலாப நோக்கமற்ற, தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பு சாதியற்ற சமதர்ம சமூகத்தை உருவாக்கும் பொருட்டு 15 ஜுலை 2020 ல் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு இந்திய கல்வி நிறுவங்களை ஜனநாயகப்படுத்துவது, சமூக நீதியை நிலை நாட்டுவது, சாதியை அழித்தொழிப்பது, அதிகார பரவலாக்கம் போன்ற குறிக்கோள்களைக்கொண்டு இயங்கி வருகிறது. தலித் பழங்குடியினர் மற்றும் திருநர்களின் நலனைப் பேணுவது இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.
திட்டம் பற்றிய சிறு குறிப்பு
இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக் கொள்கைகள் நடைமுறையில் இருந்தும், இந்திய குடிமைப் பணிகளில் தலித், பழங்குடியின மற்றும் திருநர்களின் பிரதிநிதித்துவமானது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. அதிகாரத்தின் மேலடுக்கில் செல்லச்செல்ல இவர்களின் பிரதிநிதித்துவமானது மேலும் குறைந்து கொண்டே செல்கிறது (பார்க்க 1, பார்க்க 2). அரசாங்கத்தின் சமீபத்திய முன்னெடுப்புகளான அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது, இணை செயலாளர் அளவிலான குடிமைப் பணிகளை நேரடி ஆள் சேர்ப்பின் (Lateral Entry) மூலம் நிரப்புவது (Lateral Entry ல் இட ஒதுக்கீட்டு பின்பற்றப்படுவதில்லை) மற்றும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டு (reservation for economically weaker sections) ஆகியவை இந்திய குடிமைப் பணிகளில் தலித், பழங்குடியின மற்றும் திருநர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் மட்டுப்படுத்தவே செய்யும். இதுபோன்ற அமைப்பு ரீதியிலான தடைகள் ஒருபுறம் இருக்க, இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு தயார் செய்வதில் சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய சமூக மற்றும் பொருளாதார மூலதனம் தலித், பழங்குடியின மற்றும் திருநர் சமூக மக்களுக்குக் கிடைப்பதில்லை. இந்திய குடிமைப் பணிகளைப் பற்றியும், குடிமைப் பணி தேர்வு பற்றியும், அதற்கான தயாரிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் கூட அவர்களை சென்று சேர்வதில்லை. இவ்வாறு மறுக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார மூலதனத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்திய குடிமைப் பணிகளில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தவும் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தவும் முடியும். இதற்கான ஒரு முதல் முயற்சியாக பழங்குடியின சமுதாயத்திற்காக பாடுபட்ட ஜெய்பால் சிங் முண்டா அவர்களின் நினைவாக இவ்வுதவித் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். தலித் பழங்குடியின திருநர் சமூகத்தைச் சார்ந்தவர்களில் ஆண்டுக்கு ஒரு ஆர்வலருக்கு குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவது இத்திட்டத்தின் நோக்கம்.
தகுதி
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ஆர்வலர் கண்டிப்பாக தலித் அல்லது பழங்குடியின அல்லது திருநர் (பால் இடையினம் உட்பட) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் அந்த ஆர்வலர் மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தின் விதிகளின் படி இந்திய குடிமைப் பணி தேர்வை எழுதத் தகுதி உடையவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர், விண்ணப்பிக்கும் சமயத்தில் Egalitarians அமைப்பின் உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் உறுப்பினரின் இரத்த சொந்தமாகவோ இருக்கக் கூடாது.
திட்டத்தின் அம்சங்கள்
அ) சமூக மூலதனம்
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு குடிமை பணி மற்றும் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் வாயிலாக அளிக்கப்படும்.
ஆ) பொருளாதார மூலதனம்
தேர்வு தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் முழு பொருளாதார உதவியும் (பணமாகவும் பொருளாகவும்) வழங்கப்படும். இவற்றுள் தேர்வுக்கான பயிற்சி கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் புத்தகச் செலவினங்கள் ஆகியவை அடங்கும்.
ஊக்கத்தொகை பற்றிய முழு விவரங்கள்
வ. எண் | அங்கங்கள் | தொகை (ரூ) |
---|---|---|
1. | பயிற்சி கட்டணம் அ) முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி ஆ) பொதுப்ப்பாடம் தாள் 2 க்கான பயிற்சி இ) விருப்பப்பாடத்திற்கான பயிற்சி | 130000 20000 35000 |
2 | தங்குவதற்கான செலவினம் (மாதம் ரூ. 6000 வீதம் ஒரு வருடத்திற்கு. பயனாளிக்கு பணி கிடைக்கும் வரி நீட்டிக்கப்படும்) | 72000 |
3 | புத்தகச் செலவினம் (ஒருமுறை, பொருளாக வழங்கப்படும்) | 10000 |
4 | மடிக்கணினி இணைய வசதியுடன் (ஒருமுறை, பொருளாக வழங்கப்படும்) | 40000 |
5 | இதர செலவினங்கள் (பயணச் செலவு , தேர்வுக் கட்டணம், பயிற்சி தேர்வுகள்) | 20000 |
மொத்தம் | 327000 |
Egalitarians அமைப்பிற்கு இலவசங்களின் மீது நம்பிக்கை இல்லை. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையினை பயனாளிகள் இலவசம் எனவோ அல்லது கருணையின்பால் வழங்கப்படுகிறது எனவோ எண்ண வேண்டாம். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், குடிமைப் பணிகளில் பொறுப்பேற்ற பின், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவிருக்கும் ஆர்வலர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார மூலதனத்தை உருவாகித் தருபவராக இருக்க வேண்டும் என்பது Egalitarians அமைப்பின் விருப்பமாகும். எனவே இதனை ஒரு தார்மீக பொறுப்பாக இத்திட்டத்தின் பயனாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பயனாளியைத் தேர்ந்தெடுக்கும் முறை
ஜெய்பால் சிங் முண்டாநினைவு குடிமைப் பணி தேர்வு உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டிற்கான (2021) பயனாளியாக ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரைத் தேர்ந்தெடுக்க Egalitarians அமைப்பு முடிவு செய்துள்ளது. பழங்குடியின சமூக மேம்பாட்டிற்காக களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கள செயற்பாட்டாளர்களின் உதவியுடன் தகுதியான ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கிராமப்புற பின்னணி கொண்ட, அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் படித்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் (அல்லது திருநருக்கு) முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் egalitarians2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.
நன்கொடை வழங்க
நிதி குறைபாடு காரணமாக இவ்வருடம் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர், கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையினை அனுப்பலாம்.
Account Number | 913010045380268 |
IFSC | UTIB0001449 |
Bank | Axis Bank |
Branch | KSP Mahal, Kalangarayapalayam, Pudur, Mettuasuvampalayam, Erode. |
Account holder | Manoj K G (Treasury committee, Egalitarians) |
Contact Number | 88515 83097 |
பின்குறிப்பு
வெளிப்படைத்தன்மை என்பது Egalitarians அமைப்பின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. இருப்பினும், பயனாளிகளின் நலன் காக்கும் பொருட்டும், நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் சுய விவரங்கள் பொதுவெளியிலோ நன்கொடை வழங்குபவரிடமோ தெரிவிக்கப்பட மாட்டாது.